படக்குறிப்பு, நாய்கள் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்குகள் என்று நம்பப்படுகிறது.
நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம், ஆனால் சிவாவா (Chihuahua) உட்பட அனைத்து நாய்களும் ஓநாய்களின் வழித்தோன்றல்கள் ஆகும்.
அவற்றின் பழங்கால மூதாதையர்கள் இப்போது அழிந்துவிட்டனர். அவற்றின் மிக நெருங்கிய உயிருள்ள உறவினராகச் சாம்பல் நிற ஓநாய் உள்ளது. அது இன்றும் காடுகளில் அலைந்து திரியும் ஒரு சக்திவாய்ந்த வேட்டையாடும் விலங்கு.
ஆனால் ஓநாய்கள் எப்போது நம்முடன் மிக நெருக்கமாக வாழத் தொடங்கின? உலகம் முழுவதும் இத்தனை மக்களால் நாய்கள் ஏன் நேசிக்கப்படுகின்றன?
நாய்கள் மனிதர்களுடன் பழகத் தொடங்கியது எப்படி?
நாய் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு என்று நம்பப்படுகிறது.
2017ஆம் ஆண்டில், பழங்கால நாய் டி.என்.ஏ. பற்றிய ஒரு ஆய்வு, அவை 20,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஒரே இடத்தில் ஓநாய்களில் இருந்து பரிணாமம் அடைந்திருக்கலாம் என்று கண்டறிந்தது. முன்னர், நாய்கள் ஆயிரக்கணக்கான மைல் இடைவெளியில் வாழ்ந்த இரண்டு ஓநாய் கூட்டங்களில் இருந்து பழக்கப்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாம்பல் நிற ஓநாய் தான் வீட்டு நாய்களுக்கு மிக நெருங்கிய உயிருள்ள உறவினர்.
ஆனால் முதல் நாய்கள் ஓநாய்களிடமிருந்து எவ்வாறு பழக்கப்படுத்தப்பட்டன என்ற கதை, தொடர்ந்து ஆராயப்பட்டு, தீவிரமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயமாகும். இதில் பல கோட்பாடுகள் உள்ளன.
உதாரணமாக, ஒரு முக்கியமான கோட்பாடு என்னவென்றால், மனிதர்கள் ஓநாய் குட்டிகளைப் பிடித்து வளர்ப்பதன் மூலமும், காலப்போக்கில் ஆக்ரோஷம் குறைந்த குட்டிகளை வேட்டையாட உதவுவதற்காகத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்ததன் மூலமும் ஓநாய்களைப் பழக்கப்படுத்தினர் என்று கூறுகிறது.
மற்றொரு முக்கியமான கோட்பாடு, ஓநாய்கள் அடிப்படையில் தங்களைத்தானே பழக்கப்படுத்திக் கொண்டன என்று கூறுகிறது. மிகவும் துணிச்சலான, பயமற்ற ஓநாய்கள் உணவைத் தேடி மனித குடியிருப்புகளை அணுகின. ஒரு கட்டத்தில், இந்த உறவு பலனளிக்கிறது என்பதை மனிதர்கள் உணரத் தொடங்கினர். மிகவும் தைரியமான, பயமில்லாத ஓநாய்கள் பிழைத்து இனப்பெருக்கம் செய்தன. இந்த ‘பழகும்’ பண்புகள் இயற்கைத் தேர்வின் காரணமாகப் பல தலைமுறைகளாகக் கடத்தப்பட்டன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் மரபியல் நிபுணரும் பரிணாம மரபியல் பேராசிரியருமான கிரெகெர் லார்சன், இது ஒரு தற்செயலான சந்திப்பு என்றும், இது ஒருவருக்கொருவர் உதவ முடியும் என்பதை நாம் உணர்ந்தபோது தொடங்கியது என்றும் நம்புகிறார்.
“நாம் ஓநாய்களைப் பழக்கப்படுத்தினோம் என்று சொல்வது, நம் வாழ்க்கையில் பெரும்பாலான உறவுகளில் இல்லாத ஒரு திட்டமிட்ட நோக்கத்தைக் குறிக்கிறது. எனவே, நாம் என்ன செய்கிறோம் என்று அறிந்திருந்தோம், ஒரு திட்டம் வைத்திருந்தோம், புத்திசாலித்தனமாகச் செயல்பட்டோம் என்று நாம் அதற்குக் காரணம் கற்பிப்பது போலத் தோன்றுகிறது,” என்று பேராசிரியர் லார்சன் விளக்குகிறார்.
இந்த உறவின் ஆரம்பத்தில் மேம்பட்ட வேட்டை போன்ற பரஸ்பர நன்மைகள் இருந்ததாக அவர் கூறுகிறார். “அந்த ஓநாய்கள் நம்மைத் தங்களுக்கு உரியவர்களாகப் பார்த்தால், அவை காவலாளிகளாகச் செயல்படுகின்றன. அதனால் நாம் பயனடைந்தோம் என நினைக்கிறேன். இது எல்லாவற்றையும் சற்று பாதுகாப்பாக ஆக்குகிறது. ஓநாய்களின் பார்வையில், உணவு விநியோகம் அதிகச் சீரானதாக இருந்தது,” என்று பேராசிரியர் லார்சன் மேலும் கூறுகிறார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, மனிதர்கள் நாய்களைப் பயன்படுத்தும் விதம், குகைகளைக் காக்கும் காலத்திலிருந்து மாறி, இப்போது விமான நிலையங்களில் பைகளை மோப்பம் பிடிப்பது உட்பட பல பாத்திரங்களை ஏற்றுள்ளது.
வேறுபட்ட வடிவங்களில் நாய்கள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, வேட்டையாடுதல் அல்லது மந்தைகளை காத்தல் போன்ற குறிப்பிட்ட பண்புகளுக்காக மனிதர்கள் நாய்களைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்கினர். அவற்றின் தொழில், குகைகளைக் காத்த நாட்களிலிருந்து கணிசமாக மாறிவிட்டது. இப்போது வழிகாட்டி நாய்களாகப் பணியாற்றுவது முதல் விமான நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்களை மோப்பம் பிடிப்பது வரை பல பாத்திரங்களை அவை ஏற்றுள்ளன.
இயற்கைத் தேர்வில் மனிதர்களின் இந்தத் தலையீடுதான் இன்று நூற்றுக்கணக்கான வெவ்வேறு நாய் இனங்கள் இருப்பதற்குக் காரணம். விலங்குகள் மற்றும் மனித உறவுகள் பற்றி ஆய்வு செய்யும் அறிவியலாளர் ஜான் பிராட்ஷாவின் கூற்றுப்படி, மற்ற பாலூட்டிகளை விட அதிக அளவிலான வேறுபட்ட வடிவங்களில் நாய்கள் உள்ளன.
வரலாற்றில் ஒரு கட்டத்தில், நாய்களின் பங்கு வெறும் உதவி செய்வதிலிருந்து குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறுதல் அடைந்தது.
2020ஆம் ஆண்டில், பிரிட்டனில் உள்ள நியூகாசில் பல்கலைக்கழகம் மேற்கொண்ட செல்லப்பிராணிகளின் கல்லறைக் கற்களின் பகுப்பாய்வு, முதல் பொது செல்லப்பிராணிகளின் கல்லறை திறக்கப்பட்ட 1881 ஆம் ஆண்டிலிருந்து செல்லப்பிராணிகள் மீதான நமது அணுகுமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை வெளிப்படுத்தியது.
ஆராய்ச்சியின் படி, விக்டோரியா காலக் கல்லறைகளில் செல்லப்பிராணிகள் பெரும்பாலும் தோழர்கள் (companions) அல்லது நண்பர்கள் என்று குறிப்பிடப்பட்டன. ஆனால் பிற்காலப் புதைப்புகளில் அந்த விலங்குகளை குடும்ப உறுப்பினர்களாகப் பாவித்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு செல்லப்பிராணிகளை குடும்ப உறுப்பினர்களாகக் குறிப்பிடுவது அதிகரித்திருப்பதை அது குறிப்பிட்டது.
இந்த ஆராய்ச்சி, 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் செல்லப்பிராணிகளுக்கு மரணத்திற்கு பிறகான வாழ்க்கை குறித்த நம்பிக்கை அதிகரிப்பதையும் ஆவணப்படுத்தியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாய்கள் மீதான அணுகுமுறைகள் மாறியதைக் கண்டறிந்தது.
நாய்கள் தவிர்க்க முடியாத அளவுக்கு அழகானவையா?
கார்னெல் பல்கலைக்கழக கால்நடை மருத்துவக் கல்லூரியின் கூற்றுப்படி, நாய்க்குட்டிகள் தங்கள் தாய் மற்றும் உடன்பிறப்புகளுடன் இருக்க வேண்டிய சிறந்த காலம் எட்டு முதல் 12 வாரங்கள் ஆகும். இது அவற்றின் சமூகமயமாக்கல் மற்றும் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காலமாகும்.
இதற்கிடையில், அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தின் 2018 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வு, நாய்கள் இந்த காலகட்டத்தில்தான் அவற்றின் அழகின் உச்சத்தை அடைகின்றன என்று தெரிவித்தது.
“நாய்கள் தங்கள் தாயால் கைவிடப்படுவதற்கும், தாங்களாகவே உயிர்வாழ முற்றிலும் திறனற்ற நிலையில் இருக்கும் இந்த முக்கிய காலகட்டத்தில்தான், அவை மனிதர்களுக்கு மிகவும் அழகாகத் தோன்றுகின்றன. இதனால் மனிதர்கள் அவற்றைக் கவனித்து, வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளிக்க வாய்ப்புள்ளது,” என்று பேராசிரியர் லார்சன் கூறுகிறார்.
2019ஆம் ஆண்டின் ஓர் ஆய்வு, நாய்கள் தங்கள் கண்களைச் சுற்றி தசைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இது ‘நாய்க்குட்டி கண்கள்’ (puppy dog eyes) போன்ற வெளிப்பாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது, இது மனிதர்களை ஈர்க்கிறது என்று ஆய்வு கூறுகிறது. இது வளர்ப்பு நாய்கள் மனிதர்களுடன் பிணைப்பை உருவாக்க உதவியது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
“மனிதர்கள் நட்பானவர்கள் என்று ஒரு நாய்க்குட்டி அறிந்தவுடன், உயிர் பிழைக்க அதன் சிறந்த வாய்ப்பு ஒரு நபருடன் இணைந்திருப்பதுதான் என்று அதன் உள்ளுணர்வு சொல்கிறது,” என்று விலங்குகள் மற்றும் மனித உறவுகள் பற்றி ஆய்வு செய்யும் அறிவியலாளர் பிராட்ஷா கூறுகிறார்.
பெரும்பாலான மக்கள் தங்கள் நாய்கள் தங்களை பதிலுக்கு நேசிக்கின்றன என்று நம்புகிறார்கள். மனிதர்கள் மீதான பாசமே ஒரு நாயின் பெரும்பாலான நடத்தையைத் தூண்டுகிறது என்பதற்கு இப்போது விஞ்ஞானிகளிடம் ஆதாரம் உள்ளது.
எமோரி பல்கலைக் கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி மற்றும் உளவியல் பேராசிரியர் கிரகரி பெர்ன்ஸ், நாய்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான உறவைப் பற்றி ஆய்வு செய்கிறார். அவர் நாய்களுக்குச் செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (fMRI) இன் போது அமைதியாக உட்காரப் பயிற்சி அளித்துள்ளார். இது அவற்றின் மூளையைக் கவனிக்க உதவுகிறது. அவரது ஆராய்ச்சி, மூளையின் ஒரு பகுதி (நேர்மறையான எதிர்பார்ப்புகளுடன் தொடர்புடையது) பரிச்சயமான மனிதனின் வாசனையால் பெரும்பாலும் தூண்டப்படுவதாகக் கண்டறிந்துள்ளது.
எனவே, நாம் அவற்றை நேசிப்பதைத் தவிர்க்க முடியாமல் இருக்கலாம், இந்த உணர்வு பரஸ்பரமாகவும் இருக்கலாம்.
இந்தக் கட்டுரை, பிபிசி ரேடியோ 4-இன் ‘ஒய் வி டு தட்?’ மற்றும் ‘நேச்சுரல் ஹிஸ்டரிஸ்’ ஆகிய நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது.