ஜன நாயகன் திரைப்படமே தனது கடைசித் திரைப்படமாக இருக்குமென நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்திருக்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப் பயணத்தில், பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து உச்சத்தைத் தொட்ட விஜயின் சினிமா பயணம் எத்தகையது? 100 ஆண்டுகளைத் தாண்டிச் செல்லும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் அவருடைய இடம் என்ன?
2009-ஆம் ஆண்டில் ஒரு தமிழ் வார இதழ் விஜய்யைப் பற்றி சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அந்த இதழுக்குப் பேட்டியளித்த விஜய்யிடம், ‘உங்களுக்கு என ஏதாவது பாணியிருக்கிறதா?’ எனக் கேட்டபோது இப்படிப் பதிலளித்தார்:
“அப்படியெல்லாம் ஏதுமில்லை. நான் படம் பார்க்கும்போது என்ன மாதிரியான படங்களை ரசிப்பேனோ, அதேபோன்ற படங்களில் நடிக்க வேண்டுமென நினைப்பேன். நான் ஒரு படம் பார்த்தால் அதில் ஹீரோ காதல் செய்ய வேண்டும், காமெடி செய்ய வேண்டும், சண்டை போட வேண்டும், சென்டிமென்ட் இருக்க வேண்டும், பஞ்ச் டயலாக் இருக்க வேண்டும். ஹீரோயிசம் இருக்க வேண்டும். அது போன்ற படங்களைத்தான் நான் செய்ய விரும்புகிறேன்”.
1992-இல் விஜயை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு வெளியான முதல் படமான நாளைய தீர்ப்பு திரைப்படத்திலிருந்து கடைசியாக வெளியான ‘GOAT’ திரைப்படம் வரை பார்த்தவர்களுக்கு விஜய் கிட்டத்தட்ட தான் சொன்னதைப் போலவே செய்திருக்கிறார் என்று புரிந்திருக்கும். ஆனால், இந்த ஒரு வழக்கமான பாணியில் தொடர்ந்து நடித்தபடியே எப்படி இவ்வளவு ரசிகர்களை வென்றார் என்பதில்தான் அவருடைய தனித்துவம் இருக்கிறது.
தமிழ்த் திரையுலகில் விஜயின் ஆரம்ப காலம் மிகச் சாதாரணமாகத்தான் துவங்கியது. சிறு வயதில் தன் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகருடன் அவர் இயக்கும் திரைப்படங்களின் ஷூட்டிங்கிற்குச் செல்வார் விஜய். அந்தப் படங்களில் ஏதாவது சிறிய பாத்திரங்கள் இருந்தால் அதில் நடிப்பார்.
பெரும்பாலும் அந்தப் படங்களின் கதாநாகனின் சிறுவயது வேடத்தில் நடித்திருப்பார். அப்படித்தான் வெற்றி, வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு ஆகிய விஜயகாந்த் படங்களில் விஜய்தான் சிறு வயது விஜயகாந்த்தாக நடித்தார். அந்தக் காலகட்டங்களில் விஜயகாந்த் ஆக்ரோஷமான, அநீதியைத் தட்டிக்கேட்கும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார்.
பட மூலாதாரம், Facebook/Actor Vijay
ஆனால், சிறுவயது விஜயகாந்தாக நடித்த விஜய், தனி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு காதலை மையமாகக் கொண்ட படங்களையே தேர்வு செய்தார். இன்னமும் சரியாகச் சொன்னால், பெரும்பாலும் கதாநாயகிகளை கவர்ச்சிகரமாகக் காட்டும், விடலைத்தனமான நாயகனைக் கொண்ட படங்களாகவே இவை அமைந்தன. ரசிகன், தேவா, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே போன்ற படங்கள் இதற்கு உதாரணங்கள்.
இப்படியே சென்று கொண்டிருந்த நிலையில்தான் அவருக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அந்தத் தருணத்தில்தான் இயக்குநர் விக்ரமன் ஒரு கதையைச் சொன்னார். பிடித்துப்போய் அதில் நடித்தார் விஜய். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப் படம் ‘பூவே உனக்காக’. விஜயின் இமேஜை மட்டுமல்ல கேரியரையே அந்தப் படம் மாற்றியமைத்தது.
ஆனால், அதற்குப் பிறகு மீண்டும் ஒரே மாதிரியான படங்களே அவருக்கு அமைந்தன. பூவே உனக்காக படத்தின் வெற்றிக்குப் பிறகு, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, ஒன்ஸ் மோர், நினைத்தேன் வந்தாய், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என்றென்றும் காதல், கண்ணுக்குள் நிலவு, ப்ரியமானவளே என காதலை மையமாகக் கொண்ட, மென்மையான ஹீரோ பாத்திரங்களிலேயே அவர் தொடர்ந்து நடிக்க வேண்டியிருந்தது.
பட மூலாதாரம், X/Actor Vijay
இதற்கு நடுவில் வந்த பகவதி, பத்ரி போன்ற படங்கள் அவரைச் சற்று வேறு மாதிரி காண்பித்தாலும் விஜயின் இமேஜ் என்னவோ மாறவில்லை. தூள் படத்தின் கதையை முதலில் இயக்குநர் தரணி விஜயிடம்தான் சொன்னார்.
ஆனால், விஜய் மறுக்கவே படம் விக்ரம் நடிக்க வெளியானது. ஆக்ஷனும் மசாலாவும் நிறைந்த அந்தப் படத்தில் நடிக்காததற்காக ரொம்பவுமே வருந்தினார் விஜய். கண்டிப்பாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமென முடிவுசெய்தார்.
“ஆக்ஷன் ஹீரோவாக மாற வேண்டுமென நினைத்தேன். முதலில் நான் அப்படித்தான் தயாரானேன். இடையில் பாதை மாறிவிட்டது. இருந்தாலும் ஆக்ஷன் ஹீரோவாக மாற வேண்டுமென நினைத்து மாற ஆரம்பித்தேன்,” என பேட்டி ஒன்றில் நினைவுகூர்கிறார் விஜய்.
அந்தத் தருணத்தில் இயக்குநர் ரமணா கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சாதாரண இளைஞன், மிகப் பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணைக் காதலித்து, பல தடைகளைத் தாண்டி திருமணம் செய்வதுதான் கதை. கதையின் ஒன் – லைன் வழக்கமான கதையைப் போல இருந்தாலும் திரைக்கதையில் ஒரு ஆக்ஷன் திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களையும் வைத்திருந்தார் ரமணா.
2003-ஆம் ஆண்டு தீபாவளிக்கு பிதாமகன், ஆஞ்சநேயா படங்களோடு வெளியான ‘திருமலை’ ஒரு ஹிட். விஜய்க்கு தான் செல்ல வேண்டிய பாதை புரிந்தது. கில்லி, மதுர, திருப்பாச்சி, சிவகாசி, ஆதி, போக்கிரி என ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய்.
பட மூலாதாரம், Facebook/Rajan Kurai Krishnan
படக்குறிப்பு, எம்.ஜி.ஆர்., ரஜினி ஆகியோரோடு ஒப்பிட்டால் விஜய்யின் படங்களில் சாகசங்களே எஞ்சியிருந்தன என்கிறார் பேராசிரியர் ராஜன் குறை.
தமிழ் சினிமாவில் விஜய் ஒரு உச்ச நட்சத்திரமாக உருவெடுத்த காலம், தமிழ் சினிமா பெரும் மாற்றங்களை சந்தித்துக்கொண்டிருந்த காலம். எம்.ஜி.ஆர். – சிவாஜியின் யுகம் முடிந்து, ரஜினி – கமலும்கூட தங்கள் உச்சகட்டத்தைக் கடக்க ஆரம்பித்திருந்த நேரம் அது. 24 மணி நேர தொலைக்காட்சிகளும் இணையமும் எல்லோரையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. இருந்தபோதும் விஜய் – அஜீத் என்ற காலகட்டத்தை இருவரும் உருவாக்கினர்.
ஆனால், முந்தைய உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர்., ரஜினி ஆகியோரோடு ஒப்பிட்டால் விஜயின் படங்களில் சாகசங்களே எஞ்சியிருந்தன என்கிறார் பேராசிரியர் ராஜன் குறை.
“தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆரின் காலகட்டம் என்பது நாயகனுக்கு தார்மீக உணர்வுகள் நிரம்பியிருந்த காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நியாயத்திற்காக ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று போராடுவார். அவர் படங்களில் சாகசம் நிறைய இருக்கும். ஆனால், அந்த சாகசம் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக இருக்கும்.”
“ரஜினிகாந்தின் காலம் வந்தபோதே இதெல்லாம் மாற ஆரம்பித்துவிட்டது. அவர் தானே சட்டத்தைக் கையில் எடுத்து செயல்படுவது போன்ற பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி நடந்துகொள்வதில் ஒரு சமூக நோக்கம் இருக்கும் என்றாலும் அதில் தனி மனித சாகசங்களே மேலோங்கியிருக்கும். விஜயின் காலம் வந்தபோது, சாகசம் மட்டுமே அதீதமான அளவில் இருந்தது. தார்மீக அம்சங்கள் குறைவாகவே இருந்தன.” என்கிறார் ராஜன் குறை கிருஷ்ணன்.
பட மூலாதாரம், X/Actor Vijay
போக்கிரி வரையிலான படங்களின் வெற்றி விஜயை தொடர்ந்து அதே திசையில் செலுத்தியது. ஆனாலும் குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, வேலாயுதம் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இதற்கு நடுவில் அவர் மாறுபட்டு நடித்த காவலன், நண்பன் போன்ற படங்கள் அவரது நடிப்பைக் கவனிக்க வைத்தன. ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்த பிறகும், காவலன் போன்ற நகைச்சுவையை மையமாகக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுக்கும் துணிவு அவருக்கு இருந்தது.
விஜயிடம் ஒரு அபாரமான நகைச்சுவை உணர்வு உண்டு என்கிறார் அவரை வைத்து புலி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிம்புதேவன். “விஜயிடம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு அம்சம், அவரிடமுள்ள மிகச் சிறப்பான நகைச்சுவை உணர்வு. தில்லுமுல்லு போன்ற ஒரு முழு நகைச்சுவை படத்தை அவரால் தர முடியும். படப்பிடிப்பின் இடைவெளியில் ஏதாவது ஒரு நகைச்சுவை காட்சியை நடித்துக் காட்டும்போது மிகவும் மிரட்சியாக இருக்கும்.” என்கிறார் அவர்.
2012-இல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படம் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதற்குப் பிறகு விஜய் தனது படங்களை மிகக் கவனமாகத் தேர்வுசெய்யத் துவங்கினார்.
பட மூலாதாரம், X/Actor Vijay
இதற்குப் பிறகு தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி, சர்க்கார், மெர்சல், பிகில், மாஸ்டர், பீஸ்ட் என அவரது படங்கள் மிகப் பெரிய திட்டமிடலோடு உருவாக்கப்பட்டன. இதில் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையென்றாலும் அவரது பட வெளியீடுகள் மிகுந்த கவனத்திற்கு உள்ளாயின. ஆனால், இந்தப் படங்கள் ஏதும் அவரது தனித்துவத்தை வெளிப்படுத்தவில்லை என்கிறார் ராஜன் குறை.
“விஜய் தனித்துவமிக்க படங்களில் நடிக்கவில்லை என்பதுதான் அவரது திரைப்படங்களின் முக்கியமான அம்சம். அவர் பல பிற மொழிப் படங்களின் ரீ – மேக்களில் நடித்தார். அதுவும் யார் வேண்டுமானாலும் நடிக்கக்கூடிய கதைகளை அவர் தேர்வுசெய்தார்.”
“விஜய் நடிக்கக்கூடிய எந்த ஒரு படத்தை எடுத்துக்கொண்டாலும், அந்தப் படத்தில் அஜீத்தோ, சூர்யாவோ, தனுஷோ யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இதற்கு முந்தைய காலகட்டங்களில் எம்.ஜி.ஆருக்காக, ரஜினிகாந்திற்காக கதைகளை உருவாக்குவார்கள். அதிலிருந்து விஜய் மாறுபட்டார்.” என்கிறார் ராஜன் குறை கிருஷ்ணன்.
ஆனால், விஜயை வைத்து திருமலை, ஆதி படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா இந்தக் கருத்தில் மாறுபாடுகிறார். விஜய் வெற்றி – தோல்வியைத் தாண்டி ரசிகர்களை மனதில் வைத்தே பாத்திரங்களையும் படங்களையும் தேர்வுசெய்தார் என்கிறார் அவர்.
“ஒரு திறமையான விவசாயிக்கு, தன் நிலத்தில் எதை, எப்படி விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நன்றாகத் தெரியும். அதன்படி பார்த்தால், விஜய் ஒரு நல்ல ஒரு திரை விவசாயி. தமிழ்த் திரையுலகில் திடீரென ஒரு பாணியிலான திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றிபெறும். பலரும் அந்த வகை படங்களை எடுக்கப் பார்ப்பார்கள்.”
“ஆனால், விஜய் அந்த வலையில் சிக்க மாட்டார். அவருக்கு என ஒரு தெளிவு இருக்கும். நம்மிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதில் சரியான கணிப்பு இருக்கும். கடந்த படத்தில் என்ன செய்தோம், அதை ரசிகர்கள் எப்படி ரசித்தார்கள், இந்தப் படத்தில் புதிதாக என்ன செய்வது என யோசிப்பார். அவர் மனதிற்குள்ளேயே ஒரு திட்டமிடல் இருக்கும்” என்கிறார் ரமணா.
பட மூலாதாரம், X/Chimbu Devan
படக்குறிப்பு, இயக்குநர் சிம்பு தேவன்
அதேபோல, ஒரு படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டால் அந்தப் படத்திலேயே மூழ்கியிருப்பார் விஜய் என்கிறார் சிம்புதேவன்.
“ஒரு படத்தின் படிப்பிடிப்பிற்கு வந்துவிட்டால், முழுக்க முழுக்க அந்தப் படத்திலேயே ஆழ்ந்துவிடுவார். வேறெதிலும் கவனம் சிதறாது. அதேபோல, ஒரு படம் தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது வேறு எங்காவது, ஏதாவது படத்தைப் பார்த்து, அதில் ஒரு காட்சி அவருக்குப் பிடித்திருந்தால், அதைக் குறிப்பிட்டு இதுபோல காட்சி இருக்கலாமா என கேட்பார்”
“இயக்குநரால் ஒரு காட்சியைச் சொல்லத்தான் முடியும். அதை சிறப்பாக செய்துகாட்டுவது நடிகர்கள் வசம்தான் இருக்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு காட்சியையும் மிகச் சிறப்பாக மேம்படுத்துவார். சண்டை, பாட்டு என ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்துவார். அதேபோல, ஒரு படத்தின் ஸ்க்ரிப்டிற்கு முழுவதும் சின்சியராக இருப்பார்.” என்கிறார் அவர்.
இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார் ரமணா. “ஒரு படத்தில் அவர் சொல்வதைப் போல, ஒரு தடவை முடிவுசெய்துவிட்டால், அதை அவர் மாற்றவே மாட்டார். ஒரு இயக்குநர், ஒரு கதை என அவர் தீர்மானித்த பிறகு, ஒட்டுமொத்த திரையுலகமும் அந்தப் படம் சரியாக வராது என்று சொன்னாலும் அதை மாற்றிக்கொள்ள மாட்டார். அவரிடம் இப்போதுவரை ஆச்சரியமளிக்கும் குணம் இது. சினிமாவில் மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும் அப்படித்தான் நடந்துகொள்வார்.” என்கிறார் ரமணா.
விஜய்க்கு முன்பு தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக இருந்த ரஜினியும் கமலும் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த தலைமுறையாக அடையாளம் காணப்பட்ட விஜய் தன் கடைசிப் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இந்தத் தருணத்தில் அவருடைய முதன்மைக் கதாபாத்திரமாக நடிக்க ஆரம்பித்த பிறகான 33 ஆண்டு காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, அவர் தமிழ் சினிமாவில் ஒரு உச்சத்தைத் தொட்டுவிட்டார் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க வாய்ப்பில்லை.
ஆனால், வர்த்தக ரீதியாக உச்சத்தைத் தொட்டவர் என்பதைத் தாண்டி விஜயின் பங்களிப்புகள் தமிழ் சினிமாவில் என்னவாக இருந்தன என்பதை இப்போது மதிப்பிடுவதைவிட, வருங்காலமே இன்னும் துல்லியமாக மதிப்பீடு செய்யும்.