ஒவ்வொரு திட்டத்திலும் உரிய நிதியை ஒதுக்காமல் அரசியல் பார்வையுடன் தமிழகத்தை மத்திய அரசு ஓரங்கட்ட நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அந்தக் கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: மக்கள் நம்பிக்கையுடன் வழங்கிய ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருந்தாலும், நாளொரு போராட்டத்தை முன்னெடுத்தே நம் உரிமைகளைப் பெறக்கூடிய வகையில் மத்திய அரசு தமிழகத்தை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களே, தங்களின் நியாயமான உரிமை, மாநில வரியில் உரிய பங்கு கிடைக்க மத்திய பாஜக அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட வேண்டியிருக்கிறது, இந்நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வு, பாஜக ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது.
சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தண்டிப்பதே தனது கொள்கையாகக் கொண்டுள்ள மத்திய அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான நிதியை விடுவிக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி, கடந்த ஜன.13-ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
தொடர்ந்து, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் கடந்த ஜன.27-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழியுடன் நேரில் சந்தித்தனர். அப்போது, 100 நாள் வேலைத்திட்ட நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க கோரி மனு அளித்தனர். தொடர்புடைய துறை அமைச்சரிடமும் வலியுறுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதி தொடங்கி, ஒவ்வொரு திட்டத்திலும் தமிழகத்துக்குரிய நிதியை பாஜக அரசு ஒதுக்குவதில்லை. அரசியல் பார்வையுடன் ஓரங்கட்ட நினைக்கிறது. இந்த நிலையிலும், தமிழக அரசு 100 நாள் வேலை திட்டத்தில் மாநில பங்கு நிதி மூலம் ஊதியம் வழங்கி வருகிறது.
ஆனால், மத்திய நிதிப் பங்களிப்பே இதில் முதன்யைானது என்பதால், மக்களுக்கு முழு அளவில் ஊதியம் வழ்ஙக இயலவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் நிலுவைத்தொகை ரூ.4,034 கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க, நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி.யும் வலியுறுத்தினார். ஆனால், உத்தரப்பிரதேசத்தை விட தமிழகத்துக்கு கூடுதல் நிதி விடுவிக்கப்படடுள்ளதாக திசை திருப்பும் பதில்களே மத்திய அரசிடம் இருந்து கிடைத்தன.
இந்நிலையில், 100 நாள் வேலை திட்ட நிதியை விடுவிக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் மார்ச் 29-ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, நாள்தோறும் உழைத்து நாட்டை முன்னேற்றும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.