• Sat. Oct 12th, 2024

24×7 Live News

Apdin News

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி தீ விபத்து @ கவரைப்பேட்டை | passenger train collided with goods train caught fire in kavarapettai tn

Byadmin

Oct 12, 2024


சென்னை/திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரைப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்பு பணியில் திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு இன்று காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்றுக்கொண்டிருந்தது.

வெள்ளிக்கிழமை இரவு 8.27 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் சென்று வந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது திடீரென மோதியது. இதில், அந்த ரயிலில் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டதாக தெரிகிறது. இந்த விபத்தில், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ஆர்.பி,எஃப். போலீஸார் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து நடைபெற்ற இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வருகின்றனர். 22-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

விபத்து காரணம்: இந்த ரயில் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே வருவதற்காக பிரதான பாதையில் வருவதற்காக, பச்சை நிற சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அருகே வந்தபோது, மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு, கிளை பாதையில் (லுப் லைனில்) சென்று, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளனதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்: இந்த ரயிலில் சென்ற பயணிகள் தொடர்பாக தகவல் விவரம் அறியும் விதமாக, உதவி எண்ணை( 044-25354151, 044-2435499) ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



By admin