4
அஹமதாபாத் நரேந்த்ரமோடி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 96 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிகொண்ட இந்தியா உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இதன் மூலம் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சம்பியன் பட்டத்தை தக்க வைத்த முதலாவது நாடு, வரவேற்பு நாடு என்ற வகையில் சொந்த மண்ணில் சம்பியனான முதலாவது நாடு மற்றும் மூன்று தடவைகள் சம்பியனான முதலாவது நாடு என்ற மூன்று சாதனைகளை இந்தியா நிலைநாட்டி வரலாறு படைத்தது.

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கமான அஹமதாபாத் நரேந்த்ரமோடி விளையாட்டரங்கில் குழுமியிருந்த 90,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை மிகுந்த ஆரவாரத்துடனும் கரகோஷத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர், முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்தியாவின் அசுர அதிரடி துடுப்பாட்டம் அவருக்கு சீக்கிரம் புரியவைத்தது.

இறுதிப் போட்டியில் சஞ்சு செம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் ஆகிய மூவரும் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை தயவுதாட்சண்யமின்றி நையப்புடைத்து அதிரடியாக அரைச் சதங்களைக் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர்.

அதேவேளை. நியூஸிலாந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அவ்வணியின் பிரதான வீரர்கள் மூவரின் விக்கெட்களை அக்சார் பட்டேல் கைப்பற்றியதுடன் ஜஸ்ப்ரிட் பும்ரா 4 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து இந்தியாவின் வெற்றியை சுலபப்படுத்தினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது.
அஹமதாபாத் விளையாட்டரங்கில் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
சஞ்சு செம்சன். அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 43 பந்துகளில் 98 ஓட்டங்களைக் குவித்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அவர்கள் இருவரும் ஆறு ஓவர்களில் பகிர்ந்த 93 ஓட்டங்கள் இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பவர்ப்ளேயில் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.
இதேவேளை, அபிஷேக் ஷார்மா 18 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து இந்த வருட உலகக் கிண்ணத்தில் அதிவேக அரைச் சதம் குவித்தவர் என்ற சாதனைக்கு உரித்தானார்.
21 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் ஷர்மா 6 பவுண்டறிகள். 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து சஞ்சு செம்சன், இஷான் கிஷான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 48 பந்துகளில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சஞ்சு செம்சன் ஆட்டம் இழந்தார்.
இந்த உலகக் கிண்ணத்தில் தனது 3ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பெற்ற சஞ்சு செம்சன் 46 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன.
16ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 203 ஓட்டங்களைக் குவித்திருந்த இந்தியா அதன் பின்னர் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்தது.
இதனிடையே இஷான் கிஷான் 25 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார்.
ஷிவம் டுபே 8 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 255 ஓட்டங்களாக உயர்த்தினார்.
பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷாம் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
256 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
டிம் சீஃபேர்ட், ஃபின் அலன் ஆகிய இருவரும் 16 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு சிறு எச்சரிக்கையை விடுத்தனர்.
ஆனால், ஃபின் அலன் (9) ரச்சின் ரவிந்த்ரா (1) ஆகிய இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது நியூஸிலாந்துக்கு பேரிடியைக் கொடுத்தது.
தொடர்ந்து விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்த வண்ணம் இருந்தது.
ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தகொண்டிருக்க மறுபுறத்தில் அணியின் கௌரவத்தை காப்பாற்றுவதற்காக ஆரம்ப வீரர் டிம் சீஃபேர்ட் முயற்சித்தார்.
அவர் 26 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்று 5ஆவதாக ஆட்டம் இழந்தபோது நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை வெறும் 72 ஓட்டங்களாக இருந்தது.
இந் நிலையில் டெறில் மிச்செல் (17), மிச்செல் சென்ட்னர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மோசமான வீழ்ச்சியிலிருந்து ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.
மிச்செல் சென்ட்னர் 3 பவுண்டறிகள். 2 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தபோது நியூஸிலாந்துக்கு எல்லாமே முடிந்துவிட்டது.
பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆடநாயகன்: ஜஸ்ப்ரிட் பும்ரா
தொடர்நாயகன்: சஞ்சு செம்சன்