பட மூலாதாரம், Getty Images
2025ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதியன்று நடைபெற்ற நியூ யார்க் நகர மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு, அவரைப் பற்றி பெரிதும் பேசப்படுகிறது.
1892 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூ யார்க் நகரத்தின் இளம் மேயராக மம்தானி இடம்பெற்றுள்ளார்.
மேலும், அந்த நகரின் முதல் இஸ்லாமிய மேயராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்.
இந்நிலையில், மம்தானியின் வெற்றியுடன் சேர்ந்து, நியூ யார்க் நகரம் குறித்தும் பேசப்படுகிறது.
நியூ யார்க் நகரம் தன்னிச்சையாகவே ஒரு தனித்தன்மை கொண்ட நகரமாக உள்ளது.
அந்த நகரத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.
நியூ யார்க் நகரம் அரசியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இது அமெரிக்காவிற்கு இரண்டு அதிபர்களை வழங்கியுள்ளது: தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்.
நியூ யார்க் மக்கள் தொகையின் பன்முகத்தன்மை
இங்குள்ள மக்கள் தொகை மிகவும் பன்முகத்தன்மை கொண்டது. பல்வேறு இனங்கள் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
நியூ யார்க்கின் மக்கள்தொகையில் 48% பேர் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழியைப் பேசுகிறார்கள் என்று அரசாங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மக்கள் தொகையில் 37% பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள். மக்கள்தொகையை ஆழமாகப் பார்க்கும் போது அதன் பன்முகத்தன்மை முழுமையாக வெளிப்படுகிறது.
அரசாங்க புள்ளிவிவரங்கள் 2023 -ல் நியூ யார்க்கின் மக்கள் தொகை 8.5 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது என்று மதிப்பிடுகின்றன. இந்த மக்கள் தொகையில், 35.85% வெள்ளையர்கள், 22.7% பேர் கறுப்பின அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், மற்றும் 5.52% பிற இனங்களைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பூர்வீக அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மக்கள் அல்லது பசிபிக் தீவுவாசிகள் மற்றும் பல இன நபர்களாவர்.
8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையில், 1.25 மில்லியனுக்கும் அதிகமானோர் ஆசியர்கள். அதில் கிழக்கு ஆசியர்கள் 55.9%, தென்கிழக்கு ஆசியர்கள் 9.2%, தெற்காசியர்கள் 30.7% மற்றும் மத்திய ஆசியர்கள் 1.3% ஆகியோர் அடங்குவர்.

நியூ யார்க் இன்றைய நியூ யார்க்காக மாறியது எப்படி?
1625ஆம் ஆண்டு, டச்சுக்காரர்கள் வணிக நோக்கத்திற்காக இந்த நகரை உருவாக்கினர். அப்போது இதற்கு “நியூ ஆம்ஸ்டர்டாம்” என்று பெயர் இருந்தது.
பிறகு 1664ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் இந்த நகரத்தை கைப்பற்றினர். பின்னர், யார்க் டியூக்கின் நினைவாக இது ‘நியூ யார்க்’ என்று மறுபெயரிடப்பட்டது.
இன்று, நியூ யார்க் நகரம் பொருளாதாரம், கலை, கலாச்சாரம், ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளின் உலகளாவிய மையமாக வளர்ந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் மிகப்பெரிய நகரம்
அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணம் மொத்தம் 62 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.
அவற்றில், நியூ யார்க் மாவட்டமே அதிகமான மக்கள்தொகையைக் கொண்டது. இது நியூ யார்க் மாகாணத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டமாகும்.
உலக மக்கள்தொகை மதிப்பாய்வின்படி, நியூ யார்க் மாகாணத்தின் மக்கள் தொகை தோராயமாக 20 மில்லியன் ஆகும், இதில் 8.4 மில்லியனுக்கும் அதிகமானோர் நியூ யார்க் நகரில் மட்டும் வசிக்கின்றனர்.
ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அங்கு இவ்வளவு அதிக மக்கள் தொகை இருந்தும், எந்த ஒரு சமூகமும் ஆதிக்கம் செலுத்துவதில்லை.
“நியூ யார்க்” என்று அழைக்கப்படும் நகரத்தை உருவாக்கியது, பல்வேறு நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்த மக்கள் தான்.
பட மூலாதாரம், Getty Images
நியூ யார்க் எப்படி குடியேறிகளின் நகரமாக மாறியது?
டெலாவேர் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட லெனேப் மக்கள், சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை தங்களது வசிப்பிடமாக மாற்றினர். அதன் பிறகு, 1625ஆம் ஆண்டு டச்சு மற்றும் ஐரோப்பிய குடியேறிகள் இங்கு வந்தனர்.
முதலாம் உலகப் போரின் காலத்தில் தொடங்கிய, ‘பெரும் இடப் பெயர்வின்’ (The Great Migration) காரணமாக, ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
பின்னர், 1990களில், உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 1.2 மில்லியன் மக்கள் நியூ யார்க்கில் குடியேறினர்.
இவ்வாறு பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, இன்றைய நியூ யார்க் நகரம் உருவாகியது.
பன்முகத்தன்மை கொண்ட சமூகங்கள் அங்கு இருப்பதால், நியூ யார்க், “குடியேறியவர்களின் நகரம்” என்ற பெயராலும் அறியப்படுகிறது.
“நியூ யார்க் எப்போதுமே குடியேறியவர்களின் நகரமாக இருக்கும். இந்த நகரத்தை குடியேறியவர்கள் தான் கட்டினர். இன்று அதை குடியேறியவர்கள்தான் நடத்தி வருகின்றனர்”என்று தனது வெற்றி உரையில் மம்தானி குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
புதுமையை ஏற்றுக்கொள்ளும் நியூ யார்க்
இந்த நகரம் ஒரு தனித்துவமான வசீகரத்தைக் கொண்டுள்ளது. இது அனைவரையும் வரவேற்கிறது என்று கூறப்படுகிறது. யார் வேண்டுமானாலும் இங்கு வந்து தங்கள் வாழ்க்கையை புதிதாகத் தொடங்கலாம். அவர்களால் தங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் நியூ யார்க் நகரத்திற்குள் நுழைகிறார்கள் என அறியப்படுகிறது.
இந்த நகரம் பல பழைய நடைமுறைகளை உடைத்து,மாற்றத்தை விரைவாக ஏற்றுக்கொண்டு, அதன் மூலம், தனுக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டது.
அது தான் நியூ யார்கின் தனிச்சிறப்பு.
பட மூலாதாரம், Getty Images
பல வரலாற்று இடங்களைக் கொண்ட நகரம்
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் முதல், உலகின் பொருளாதாரத் தலைநகரம் என அழைக்கப்படும் வால் ஸ்ட்ரீட் வரை அனைத்தும் இந்த நகரத்தில் தான் அமைந்துள்ளன.
அமெரிக்காவின் முக்கிய பங்குச் சந்தைகளான நியூ யார்க் பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக் (NASDAQ) ஆகியவையும் இங்குதான் அமைந்துள்ளன.
உலகின் நான்காவது பெரிய சிலையான சுதந்திர தேவி சிலை, 86 மாடிகள் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடம், டைம்ஸ் சதுக்கம், சென்ட்ரல் பார்க், பிராட்வே நிகழ்ச்சிகள் என இவை அனைத்தும் நியூ யார்க் நகரின் அடையாளங்களாகும்.
இந்த நகரம் உலகின் பல நாடுகளில் இருந்து வந்து வாழும் மக்களுக்கு தாயகமாகவும் திகழ்கிறது.
பட மூலாதாரம், Getty Images
நியூ யார்க்கை உலுக்கிய ஆண்டு
ஆனால் 2001ஆம் ஆண்டு, இந்த நகரத்தை உலுக்கிய ஒரு கறுப்புப் பக்கமாக நினைவில் நிற்கிறது.
ஒரு காலத்தில், 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட உலக வர்த்தக மையம் நியூ யார்க் நகரத்தின் தனிச்சிறப்பாக இருந்தது. அதற்குள் இருந்த இரட்டை கோபுரங்கள் நகரத்தின் மிக உயரமான கட்டிடங்களாக இருந்தன.
ஆனால் 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி, பயங்கரவாதத் தாக்குதலில் அந்த இரண்டு கோபுரங்களும் தரைமட்டமாக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரம்
ஆனால் நகரம் தன்னை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளது.
“நியூ யார்க் நகர பொருளாதாரத்தின் நிலை ” என்ற தலைப்பிலான 2024ம் ஆண்டு அறிக்கை, அமெரிக்க பொருளாதாரத்தில் நியூ யார்க் 9 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
சவால்களுக்கும் குறைவில்லாத நகரம்
சாதனைகள் பல இருந்தாலும், இந்த நகரம் சில சவால்களையும் எதிர்கொள்கிறது.
இன அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அதிகரித்து வரும் வர்க்க வேறுபாடு ஆகியவை இன்னும் பிரச்னையாகவே உள்ளன.
கடந்த பத்தாண்டுகளில் நியூ யார்க் நகரில் வருமான சமத்துவமின்மை அதிகரித்துள்ளது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழிலாளர் பங்கேற்பில் உள்ள இன பாகுபாடுகள் சற்றே குறைந்தாலும், அவை இன்னும் கவலைக்குரிய அளவில் நீடிக்கின்றன.
இந்நிலையில், வருமான சமத்துவமின்மையை நீக்குவதாக வாக்குறுதி அளித்து மம்தானி ஆட்சிக்கு வந்துள்ளார். எனவே, இந்த சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு