ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலதிபர் அம்பானி ஆகியோர் பேசுவது போன்று வந்த போலி வீடியோ வெளியிடப்பட்ட முகநுால் பக்கத்தில் வந்த ‘லிங்க்’கில் இணைந்து, ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.33 லட்சத்தை இழந்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி. அதிநவீன பயிற்சியும் ஆங்கில அறிவும் கொண்ட இளைஞர்களைக் கொண்டு இந்த மோசடி நடப்பதால், நன்கு படித்த, ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களே இதில் ஏமாறுவதாகக் கூறுகிறார் அவர்.
அவர் செலுத்திய தொகையில் 15 லட்ச ரூபாய் தொகையை முடக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள சைபர் கிரைம் போலீசார், இதை இயக்குபவர்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகள் பெரும்பாலும் இந்தியாவில் இருப்பதால் அவற்றை மீட்பதற்கு வாய்ப்பிருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் லாரன்ஸ் டொமினிக் சேவியர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், 2 பேக்கரிகளையும் நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் குன்னுார் முன்னாள் நகர செயலாளராக இருந்த அவர், தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில பொதுச் செயலாளராக இருக்கிறார்.
இவர்தான் முகநுால் பக்கத்தில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து, அதில் வந்த ‘லிங்க்’கில் தொடர்புகொண்டு, அதில் கூறியபடி அடுத்தடுத்து பணத்தைச் செலுத்தி இறுதியில் ரூ.33 லட்சத்து 10,472 வரை செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். இதுதொடர்பாக இவர் கொடுத்துள்ள புகாரின்பேரில், பிஎன்எஸ் 318 (ஏமாற்றுதல்) பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, உதகை சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் பிரவீணா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கணினி வர்த்தகத்தில் 10 ஆண்டுகளும், தகவல் தொழில் நுட்பத்துறையில் 15 ஆண்டுகளும் தனக்கு அனுபவம் இருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்த லாரன்ஸ், சமீபகாலமாக ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் துவங்கி, நான்கைந்து மாதங்களுக்கு இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார் லாரன்ஸ். அதிநவீன தொழில்நுட்ப அறிவு, ஆங்கில அறிவுடன் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து, பயிற்சி கொடுத்து சைபர் அடிமைகளாக (Cyber Slave) மாற்றியே, இந்த மோசடிகளை அரங்கேற்றுவதாகக் கூறுகிறார் அவர்.
நன்கு படித்த, வசதி படைத்த, ஆன்லைன் தொழில் செய்பவர்களே பெரும்பாலும் இதில் குறி வைக்கப்படுவதாகவும் அவர் தகவல் தெரிவிக்கிறார். தான் ஏமாற்றப்பட்ட விதம் குறித்து லாரன்ஸ் சேவியர் மிக விரிவாக விளக்கினார்.
”நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலதிபர் அம்பானி ஆகியோர் பேசுவது போன்ற விளம்பரமுள்ள ‘லிங்க்’ முகநூலில் அடிக்கடி வந்து கொண்டேயிருந்தது. அதில்தான் முதலில் சென்று பார்த்தேன். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பம் என்பது எனக்கு வெகுசீக்கிரமே தெரிந்துவிட்டது. ஆனால் அதற்குள் வேறு ஒரு ‘லிங்க்’கை அனுப்பி அதில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய வைத்தார்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் திறன் படைத்தவர்கள் மட்டுமே, அவர்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு வர்த்தகம் செய்ய முடியும். மற்றவர்கள் அவர்களுடைய இலக்கு இல்லை!” என்கிறார் லாரன்ஸ். தொழில்நுட்ப ரீதியாக சரியாக பேசியதால் தனக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
விவரம் அறிந்தும் முதலீடு செய்தது ஏன்?
சிறிய தொகையில் தொடங்கிய முதலீடு படிப்படியாக அதிகரித்து பெரிய தொகையை முதலிடு செய்யும் வகையில் தன்னை இழுத்துச் சென்றுவிட்டதாக கூறுகிறார் லாரன்ஸ்.
”முதலில் நான் 20 ஆயிரம் ரூபாய்தான் முதலீடு செய்தேன். அதற்கு எனக்கு 50, 70, 90 என்று அமெரிக்க டாலரில் ரிட்டர்ன் வந்தது. அந்தத் தொகையை என்னால் எடுக்கவும் முடிந்தது. அப்படித்தான் அந்த ‘டிரேடு லிங்க்’குக்குள் என்னை இழுத்துச் சென்றனர்.
அடுத்து ரூ.50 ஆயிரம், ஒரு லட்ச ரூபாய் என்று கட்ட வைத்தார்கள். இரண்டு லட்ச ரூபாய் செலுத்தியபோது, ஒரு லட்ச ரூபாய் லாபம் காண்பித்தார்கள். இரு மாதங்களில் 100 சதவிகித லாபம் வந்தது. அதே நேரத்தில் நாம் செலுத்திய தொகைக்கு வர்த்தகம் நடந்து கொண்டிருப்பதைக் காண்பித்துக் கொண்டே இருந்தார்கள்.” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அதன்பின் வர்த்தக முறையை மாற்றி பெரிய தொகையை முதலீடு செய்ய வைத்தனர். நம்மால் நேரடியாக அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்ய முடியாது என்று கூறி, தொகையை வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் போடச் சொல்கிறார்கள். அவை தங்களின் ஏஜென்ட், புரோக்கர், மெர்ச்சன்ட்களின் வங்கிக் கணக்கு என்றார்கள்.
அதன்படி, அந்த கணக்கில் 2 லட்ச ரூபாய் பணம் செலுத்தினால் அடுத்த 10 நிமிடங்களில் நம் ஆன்லைன் வர்த்தகத்தில் 2 லட்ச ரூபாய்க்கு இணையான டாலர் மதிப்பில் நம் முதலீடு அதிகரித்திருப்பது தெரிகிறது. அதில்தான் நம் நம்பிக்கை அதிகமாகும்.” என்கிறார்.
“டிரம்ப் வந்தால் லாபம் வரும்”
இதுபற்றி விளக்கும் லாரன்ஸ், ”இன்றைக்கு உங்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும், டிரம்ப் வந்துவிட்டதால் இன்னும் சில நாட்களில் லாபம் எகிறும் என்று கூறி, மேலும் 5 லட்ச ரூபாய் முதலீடு செய்யச் சொல்வார்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் லாபமாகத் தெரியும் தொகையை நாம் எடுக்க விரும்பினால் இப்போது எடுக்காதீர்கள், எடுத்தால் வரக்கூடிய பெரிய லாபத்தை இழந்துவிடுவீர்கள் என்பார்கள்.” என்கிறார்.
”வாட்ஸ்ஆப் காலில்தான் பேசினார்கள். பிரிட்டன் அலுவலக முகவரியில் ஒப்பந்தம் அனுப்பி நம்ப வைத்தார்கள். நான் நன்றாக வர்த்தகம் செய்வதைப் பார்த்து, நிறுவனமே 5 லட்ச ரூபாய் கிரெடிட் தருவதாகச் சொன்னார்கள். இதில்தான் பலரும் சிக்குவர். அந்த 5 லட்ச ரூபாய்க்கு பெரிய லாபம் வந்திருப்பதைப் போல ஆன்லைன் வர்த்தகத்தில் காண்பித்தார்கள். பின்பு அந்த 5 லட்ச ரூபாயை ஒவ்வொரு லட்சமாகக் கட்டச் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் 70 ஆயிரம் டாலர்கள் அதாவது 54 லட்ச ரூபாய் லாபம் இருப்பதாகக் காண்பித்தார்கள்.” என்றார் லாரன்ஸ்.
எந்தத் தொகையுமே வராமல் இவ்வளவு பெரிய தொகையை செலுத்தியது ஏன்?
”எனக்கு வர்த்தகத்தில் லாபமாக வந்துள்ள 54 லட்ச ரூபாயை எடுத்துவிட்டதாகவும், அது செபி எனப்படும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கு (Securities and Exchange Board of India) போய்விட்டதாகவும், இனிமேல் ரிசர்வ் பாங்க் மூலமாகவே தொகை உங்களுக்கு மாற்றப்படும் என்றும் சொன்னார்கள். அதற்கு பரிவர்த்தனை வரி (Transaction Tax) 10 சதவிகிதம் கட்டச் சொன்னார்கள். அவர்கள் சொன்னதைப் போலவே செபியிலிருந்து மெயில் வந்தது. அதன்படி, ரூ.5.4 லட்சம் செலுத்தினேன்.” என்கிறார் லாரன்ஸ்.
செபியின் மோனோகிராம், டிஎன்ஜிஎஸ்டி எண்கள் அனைத்தும் அப்படியே அச்சு அசலாக இருந்ததாகவும் தெரிவிக்கும் அவர், தனக்கு செபியிலிருந்து 11 மெயில்கள் வந்ததாகச் சொல்கிறார். பரிவர்த்தனை வரி செலுத்தியபின் வந்த மெயிலில், உங்களுக்கான லாபத்தொகையை உங்கள் வங்கிக்கணக்குக்கு மாற்றவுள்ளதாகவும், அப்போது ஏதாவது இழப்பு நேர வாய்ப்புள்ளதால் அதற்கு 10 சதவிகித காப்பீட்டுத் தொகை செலுத்தச் சொல்லி மற்றொரு மெயில் வந்ததாகவும் தெரிவிக்கிறார் லாரன்ஸ்.
தொடர்ந்து அதுபற்றி விளக்கிய அவர், ”அதற்கும் 5.4 லட்ச ரூபாயைச் செலுத்திய பின், மீண்டும் லாபவரி (Capital Gains Tax) 15 சதவிகிதத் தொகையை கட்டச் சொன்னார்கள். தொழில் செய்யும் நண்பர்கள் பலரும் இந்த வரி கட்டாயம் என்று சொன்னதால், அனைத்து நகைகளையும் அடமானம் வைத்து 9 லட்ச ரூபாய் செலுத்தினேன். முற்றிலுமாக ஏமாற்றமடைந்த பின்பே, செபியிலிருந்து யாருக்கும் தனிப்பட்ட முறையில் மெயில் வராது என்று தெரியவந்தது.” என்றார்.
ஏமாறியதை உணர்ந்தது எப்படி?
”ஒரு கட்டத்தில் நான் செலுத்திய காப்பீடு, பரிவர்த்தனை வரிக்கான தொகைக்கு ரசீது அனுப்பச் சொன்னேன். அதன்பின் எந்த பதிலும் இல்லாத நிலையில் நான் சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தேன். இப்போதும் அதே எண்களில் அவர்கள் மோசடியைத் தொடர்கின்றனர்.” என்கிறார் அவர்.
தன்னைப் போலவே தனக்குத் தெரிந்த பலரும் பெரும் தொகையை இதே போன்ற மோசடியில் இழந்து இருப்பதாகவும் அவர்கள் யாரும் புகார் கொடுக்க முன் வரவில்லை என்றும் பிபிசி தமிழிடம் லாரன்ஸ் தெரிவித்தார். அறிமுகமாகும்போது ஒரு பெண்ணை வைத்துப் பேசியதாகவும், அதன்பின் ஒரு அட்வைசரை வைத்து விளக்கியதாகவும், வங்கிக் கணக்கிலிருந்து பணம் சென்றபின், வேறு சில நபர்கள் தன்னிடம் தொடர்புகொண்டு பேசி வந்ததாகவும் அவர் விளக்கமளிக்கிறார்.
போலீஸ் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
கடந்த அக்டோபரில் துவங்கி பிப்ரவரி மாதம் வரையிலும் இந்த குவாண்டம் ஏஐ எனப்படும் மோசடி ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாற்றமடைந்த இவர், தங்களிடம் மார்ச் மாதத்தில்தான் புகார் கொடுத்ததாக உதகை சைபர் க்ரைம் போலீசார் கூறுகின்றனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் பிரவீணா, ”அவர் வெவ்வேறு தளங்களில் ஆன்லைன் வர்த்தகம் செய்து சம்பாதித்து வந்துள்ளார். அவரை பல மாதங்களாக கண்காணித்து, அவருக்கு ஒரு போலியான ஆன்லைன் வர்த்தக தளத்தின் லிங்க்கை அனுப்பியுள்ளனர். மற்ற தளங்களைப் போலவே இருந்ததால் அவரும் நம்பி பணம் செலுத்தியுள்ளார்.” என்றார்.
”மற்ற தளங்களில் முதலீடு அதிகமாகவும், லாபம் குறைவாகவும் இருந்த நிலையில், இந்த தளத்தில் குறைந்த முதலீடுக்கு அதிக லாபம் கிடைத்ததாக நம்ப வைத்துள்ளனர். அதற்காக போலி ஐடியைத் தயாரித்து அவரை மோசடி வலையில் வீழ்த்தியுள்ளனர். அவர்கள் கொடுத்த மெயில் ஐடி, டெலிகிராம் எல்லாவற்றையும் ஆய்வு செய்தபோது, எல்லாமே வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டவை என தெரியவந்தது.” என்றார் பிரவீணா.
நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற மோசடியில் யாரும் புகார் கொடுத்ததில்லை என்று கூறிய காவல் ஆய்வாளர், அவர்கள் காண்பித்த ஆவணங்கள் எல்லாமே ஒரிஜினல் போலிருப்பதாலும், அவர்கள் தெரிவித்த ஆலோசனைகள் லாபம் சம்பாதிக்க ஏதுவாக இருந்ததாலும் எளிதில் யாரும் ஏமாற வாய்ப்புள்ளதாகக் கூறினார். லாரன்ஸ் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகள், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பெயரில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
”இதிலுள்ள ஒரே வாய்ப்பு, அவர் பணம் செலுத்திய வங்கிக்கணக்கு அனைத்தும் இந்தியாவில் இருப்பவை. அவர் புகார் கொடுத்ததும் சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கில் 15 லட்ச ரூபாயை முடக்கியுள்ளோம். ஆனால் இதில் குற்றவாளி என்று யாரையும் இப்போது குறிப்பிட முடியாது. தொகையை ஓரளவுக்கு மீட்கலாமே தவிர, மோசடி செய்பவர்களைத் தடுப்பது எளிதான விஷயமில்லை.” என்றார் காவல்ஆய்வாளர் பிரவீணா.
மீட்கப்படும் தொகையைப் பெறுவது எப்படி?
பரிவர்த்தனை செய்த ஐடியை வைத்து அந்த வங்கிக் கணக்கை முடக்கி விடுவதாகக் கூறும் போலீசார், மோசடி பற்றி நீதிமன்றத்தில் நிரூபித்து உத்தரவு பெற்ற பின், அந்த உத்தரவை வைத்து வங்கியில் முறைப்படி விண்ணப்பித்த பின்பே, பணம் செலுத்தியவரின் வங்கிக் கணக்குக்கு அது மாற்றப்படும் என்கின்றனர்.
இதற்கு முன்பாக நீலகிரியில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற முறையிலும் 6-7 பேர் புகார் கொடுத்து இருப்பதைக் குறிப்பிட்ட காவல் ஆய்வாளர் பிரவீணா, அந்த வழக்குகளிலும் வெளிநாட்டில் இருந்து மோசடி நடந்துள்ளதால் யாரையும் இதுவரை கைது செய்ய முடியவில்லை என்றார். இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது மட்டுமே, பணத்தைக் காத்துக் கொள்ளும் ஒரே வழி என்கிறார் அவர்.
மோசடியில் ஏமாற்றமடைந்த லாரன்ஸ், ”இதில் எந்த அரசாலும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் டிஜிட்டல் அரெஸ்ட் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதுபோல, இத்தகைய மோசடி குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.” என்கிறார்.