ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாடின்றி விண்வெளியில் பயணித்த ராக்கெட் பகுதி ஒன்று நிலவில் மோதியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த மோதலால், நிலவில் உள்ள பிரபலமான ஐன்ஸ்டீன் பள்ளத்திற்கு அருகே புதிய பள்ளம் உருவாகியிருக்கலாம். இதனால் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு உதவக்கூடிய தனித்துவமான ஆய்வு வாய்ப்பு விஞ்ஞானிகளுக்குக் கிடைத்துள்ளது.
ஃபால்கன் 9 ராக்கெட்டின் காலியான மேல் பகுதி, புதன்கிழமை மணிக்கு சுமார் 8,700 கிலோமீட்டர் வேகத்தில் நிலவைத் தாக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
இந்த மோதலால் உருவான குறுகிய நேர ஒளிர்வை, உயர்தர தொலைநோக்கிகள் இருந்தாலும் தொழில்முறை அல்லாத வானியலாளர்கள் கண்டறிவது கடினமாக இருந்திருக்கும். இருப்பினும், அமெரிக்கக் கண்டங்களில் உள்ள பெரிய வானியல் ஆய்வு மையங்கள் இந்த நிகழ்விலிருந்து கிடைத்த தகவல்களை தற்போது ஆய்வு செய்து வருகின்றன.
இந்த மோதலின் முழுமையான விளைவுகள் என்ன, அதிலிருந்து என்னென்ன அறிவியல் தகவல்களைப் பெற முடியும் என்பதைக் கண்டறிய இன்னும் சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்.
ஆனால், கோள்களின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் புவியியல் விஞ்ஞானிகளுக்கு, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த மோதல் ஓர் அறிவியல் பரிசாக அமைந்துள்ளது
பட மூலாதாரம், Reuters
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் பல்வேறு விண்வெளி பயணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் வடிவமைப்பின்படி, ராக்கெட்டின் சில பகுதிகள் மீண்டும் பூமிக்குத் திரும்பும். ஆனால், சில பகுதிகள் விண்வெளியிலேயே பிரிந்து விடப்படுகின்றன.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஃபுளோரிடாவில் இருந்து விண்ணில் பாய்ந்த அந்த ராக்கெட், இரண்டு நிலவுவில் தரையிறங்கும் விண்கலங்களை விண்வெளிக்குச் சுமந்து சென்றது.
அந்த விண்கலங்களை பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேற்றி, நிலவை நோக்கிய பாதையில் செலுத்துவது ராக்கெட்டின் பணியாக இருந்தது. அந்தப் பணியை அது வெற்றிகரமாக நிறைவேற்றியது.
அதன்பிறகு, சுமார் ஐந்து மாடி கட்டடத்தின் உயரம் கொண்டதும், குறைந்தபட்சம் 4,000 கிலோகிராம் எடையுடையதுமான ராக்கெட்டின் மேல் பகுதி தேவையில்லாததாக மாறியது. அது விண்வெளியில் மிதந்தபடி இருந்தது.
அடுத்த 18 மாதங்களில், பூமி, நிலவு மற்றும் சூரியனின் மென்மையான ஈர்ப்பு விசைகளும், சூரிய ஒளியால் ஏற்படும் மிகச் சிறிய தள்ளும் சக்தியும் அதன் பாதையை படிப்படியாக மாற்றின.
இந்த ராக்கெட் பாகத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த வானியலாளர்கள், இந்தச் சிறிய மாற்றங்களே அதை நிலவை நோக்கிய பாதையில் செலுத்தியிருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், அது நாளுக்கு நாள் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Mark Garlick/Science Photo Library via Getty Images
படக்குறிப்பு, பல தசாப்தங்களாகப் பூமியைச் சுற்றியுள்ள விண்வெளியில் விண்வெளிக்கழிவுகள் குவிந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
புதன்கிழமை இந்திய நேரப்படி நண்பகல் 12.05 மணியளவில் இந்த மோதல் நிகழ்ந்திருக்கலாம். உலகின் பல பகுதிகளில் அப்போது பகல் நேரமாக இருந்ததால், மோதலால் உருவான சிறிய ஒளி தொலைநோக்கி மூலமாகக் கூட கண்டறிவது மிகவும் கடினமாக இருந்திருக்கும்.
இருள் சூழ்ந்த பகுதிகளில் வானத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தொழில்முறை அல்லாத வானியலாளர்களுக்கும் அந்த ஒளியை காணும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஏனெனில், அது ஒரு வினாடியின் சிறிய பகுதி நேரமே நீடித்திருக்கும். மேலும், அந்த மோதல் நிகழ்ந்த பகுதி நிலவில் சூரிய ஒளி நேரடியாகப் படும் பகுதியில் இருந்தது.
இதனால், மோதலால் உருவான தூசிப் படலத்தை கூட அவர்கள் தெளிவாகக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அந்தத் தூசிப் படலம் சுமார் 100 கிலோமீட்டர் உயரம் வரை எழுந்திருக்கலாம் என்றும், பல நிமிடங்கள் நீடித்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த விண்கலங்களும் இந்த மோதலை நேரடியாகப் பதிவு செய்யும் சரியான இடத்தில் அப்போது இல்லை. தென் கொரியாவின் டானுரி விண்கலத்துக்கு மட்டுமே அதற்கான சிறந்த வாய்ப்பு இருந்தது. மோதல் நிகழ்ந்த பகுதிக்கு அருகே அது சில நேரத்திற்கு முன்பே கடந்து சென்றிருந்தது.
இந்த மோதல் தொடர்பான காட்சிகள் கிடைத்திருந்தாலும், அவற்றை ஆய்வாளர்கள் முழுமையாகப் பகுப்பாய்வு செய்த பிறகே வெளியிடப்படும் என்று டானுரி குழுவினர் தென் கொரிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
வரும் நாட்களில், நாசாவின் லூனார் ரீகானைசன்ஸ் ஆர்பிட்டர் அந்தப் பகுதியை புகைப்படம் எடுக்கும் நிலையில் இருக்கும். இதன் மூலம், மோதலுக்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிட்டு புதிய பள்ளம் அல்லது சேதத்தின் தடயத்தை விஞ்ஞானிகள் கண்டறிய முடியும்.
இந்த மோதல் தொடர்பான முதல் அறிவியல் தகவல்களும் படங்களும், அப்போது இரவு நேரமாக இருந்த அமெரிக்காவில் உள்ள சக்திவாய்ந்த தொலைநோக்கிகளிலிருந்து கிடைக்கக்கூடும். ஆனால், 3,85,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் சூரிய ஒளி படும் பகுதியில் 14 மீட்டர் அளவுள்ள ஒரு பொருள் மோதியதை கண்டறிவது மிகவும் கடினம். இருந்தாலும், அதை கண்டுபிடிப்பது முற்றிலும் சாத்தியமற்றது அல்ல.
தரவுகளை ஆய்வு செய்து, படங்களைச் சுத்தப்படுத்தி தெளிவுபடுத்தும் பணிக்கு சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் அல்லது வாரங்கள் வரை கூட ஆகலாம்.
எனினும், புதிய பள்ளத்தின் படங்களை நிலவைச் சுற்றும் விண்கலங்கள் பதிவு செய்வதை விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஏனெனில், மோதிய ராக்கெட் பகுதியின் அளவு, வேகம் மற்றும் அது மோதிய துல்லியமான இடம் ஆகிய அனைத்தும் ஏற்கனவே தெரிந்தவை.
இதனால், இது ஒரு சாதாரண விபத்தாக இல்லாமல், அரிதான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அறிவியல் பரிசோதனையாக மாறியுள்ளது.
கோள்களின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு இது ஒரு கனவு வாய்ப்பாகும். ஏனெனில், மோதலால் பள்ளங்கள் எவ்வாறு உருவாகின்றன, பாறைகள் மற்றும் தூசிகள் எவ்வளவு தூரம் சிதறிச் செல்கின்றன, நிலவின் உட்பகுதியில் அதிர்வுகள் எவ்வாறு பரவுகின்றன என்பதற்கான தங்களது மாதிரிகளை சோதித்துப் பார்க்க இந்த நிகழ்வு உதவும்.
இது எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கும் நடைமுறை ரீதியாக முக்கியமான தகவல்களை வழங்கும்.
ஒரு மோதலால் எவ்வளவு அளவு பாறைகளும் தூசிகளும் மேலே எழுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், பாதுகாப்பான நிலவு தரையிறங்கும் விண்கலங்களையும் எதிர்கால நிலவு தளங்களையும் வடிவமைக்க பொறியாளர்களுக்கு உதவும். மேலும், பறக்கும் சிதறல்கள் எவ்வளவு தூரம் செல்லக்கூடும், அருகிலுள்ள நிலப்பரப்பு எவ்வளவு அதிரக்கூடும் என்பதையும் அவர்கள் கணிக்க முடியும்.
பட மூலாதாரம், NASA
படக்குறிப்பு, ஐன்ஸ்டீன் பள்ளம் 180 கிலோமீட்டருக்கும் அதிகமான அகலம் கொண்டது,
இந்த மோதலால் நிலவின் மேற்பரப்புக்கு அடியில் இருந்து வெளியேறியுள்ள பாறைகள் மற்றும் தூசிப் பொருட்கள், நிலவின் புவியியல் அமைப்பு குறித்து புதிய தகவல்களை வழங்கக்கூடும். மேலும், சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி–நிலவு அமைப்பு எவ்வாறு உருவானது என்பது குறித்த விஞ்ஞானிகளின் புரிதலையும் மேம்படுத்த உதவலாம்.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் நிலவில் மோதுவது இது முதல் முறை அல்ல. 1959-ஆம் ஆண்டு முதல், பல டஜன் விண்கலங்கள் நிலவில் மோதியுள்ளன. அவற்றில் சில விபத்துகளாக நிகழ்ந்தவை. பல அறிவியல் ஆய்வுகளுக்காக திட்டமிட்டு மோதவிடப்பட்டவை.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக, மனிதர்களால் உருவாக்கப்பட்ட விண்வெளிக் குப்பைகள் அமைதியாக விண்வெளியில் குவிந்து கொண்டிருக்கின்றன என்பதற்கான நினைவூட்டலாக இந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன.