6
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் இன்றி வேகமாக வளர்ந்து வரும் ‘நிழல் வங்கி’ (Shadow Banking) துறையால் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரபுக்கள் சபை (House of Lords) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுமார் 16 டிரில்லியன் டொலர் மதிப்பை கொண்ட இந்த நிழல் வங்கித் துறை, பாரம்பரிய வங்கி அமைப்புகளுக்கு வெளியே இயங்கும் தனியார் கடன் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாகும். இத்துறையின் அளவில்லா வளர்ச்சி, 2008ஆம் ஆண்டு உலகை உலுக்கிய நிதி நெருக்கடியைப் போன்றதொரு கடும் நெருக்கடியை மீண்டும் உருவாக்கக்கூடும் என பிரபுக்கள் சபையின் நிதி ஒழுங்குமுறை குழு எச்சரித்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகள் முதலில் இங்கிலாந்தைத் தாக்கும் அபாயம் உள்ளதாகக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை, இவ்வாறான அபாயங்களை முன்கூட்டியே கையாள்வதில் நிதி அமைச்சு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அந்தக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள நிதியமைச்சு, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கான வலுவான கட்டமைப்புகள் தங்களிடம் உள்ளதாகவும், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.