படக்குறிப்பு, குழந்தை பருவ மறதி என்பது பெரியவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் கொள்ள இயலாமையைக் குறிக்கிறது.கட்டுரை தகவல்
எழுதியவர், மரியா சக்காரோ
பதவி, பிபிசி உலக சேவை
நாம் பிறந்த அந்த நாள், நாம் எடுத்து வைத்த முதல் அடி, நாம் பேசிய முதல் வார்த்தைகள் அனைத்தும் நம் வாழ்வின் முக்கியமான தருணங்கள். ஆனாலும் அவற்றில் எதையும் நாம் நினைவில் கொள்வதில்லை. ஏன்?
நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் உளவியலாளர்கள் பல்லாண்டுகளாக இந்தக் கேள்விக்கு விடைகாண போராடி வருகின்றனர்.
வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளில் இருந்து குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் கொள்ள இயலாமை ‘குழந்தைப் பருவ மறதி நோய்’ என்று அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக அதை விளக்கும் முயற்சியில் பல கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியரான நிக் டர்க்-பிரவுன், “இந்த விவாதம் இரண்டு முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. நாம் நமது குழந்தைப் பருவத்தின் தொடக்க ஆண்டுகளில் நினைவுகளை உருவாக்குகிறோம், ஆனால் பின்னர் அவற்றை நம்மால் அணுக முடியவில்லையா? அல்லது நாம் வளரும் வரை அத்தகைய நினைவுகளை உருவாக்குவதில்லையா?” என்று கூறுகிறார்.
பேராசிரியர் டர்க்-பிரவுனின் கூற்றுப்படி, ‘கடந்த தசாப்தம் வரை, குழந்தைகள் நினைவுகளை உருவாக்கும் திறன் இல்லாதவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். குழந்தைகளால் பேச்சு மூலம் தொடர்பு கொள்ள முடியாது என்பது அல்லது தாங்கள் யார் என்பதைப் பற்றிய முழுமையான புரிதலை அவர்கள் வளர்த்துக் கொள்ளாதது தான் காரணம்’ என சிலர் கூறினார்கள்.
பட மூலாதாரம், Science Photo Library via Getty Images
படக்குறிப்பு, மூளைக்குள் இருக்கும் கடல் குதிரை வடிவிலான ஹிப்போகேம்பஸ் எனும் பகுதி நினைவாற்றலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மற்றொரு கோட்பாடு, ‘புதிய நினைவுகளை உருவாக்கும் மூளைப் பகுதியான ஹிப்போகேம்பஸ் (Hippocampus) இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாததால், நான்கு வயது வரை நம்மால் நினைவுகளை உருவாக்க முடியாது’ என்று அவர் விளக்குகிறார்.
பேராசிரியர் டர்க்-பிரவுனின் கூற்றுப்படி, “குழந்தைப் பருவம் முழுவதும் இது தொடர்கிறது. எனவே, நமது ஆரம்பகால அனுபவங்களைச் சேமிக்க முடியாமல் போகலாம், ஏனெனில் அவ்வாறு செய்வதற்குத் தேவையான அமைப்பு அப்போது நம்மிடம் இருப்பதில்லை.”
குழந்தையின் மூளையை ஸ்கேன் செய்தல்
இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேராசிரியர் டர்க்-பிரவுன் வெளியிட்ட ஓர் ஆய்வு அவரது கருத்துக்கே முரணாகத் தெரிகிறது.
குழந்தைகளின் ஹிப்போகேம்பஸ் செயல்பாட்டை அளவிடுவதற்கு, நான்கு மாதங்கள் முதல் இரண்டு வயது வரையிலான 26 குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்யும் செயல்முறையில் பேராசிரியர் டர்க்-பிரவுனின் குழு ஈடுபட்டது. அப்போது அந்தக் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக சில புகைப்படங்களையும் அவர்கள் காட்டினார்கள்.
பின்னர் அவர்கள் குழந்தைகளுக்கு, முன்பு காட்டிய ஒரு புகைப்படத்துடன் சேர்த்து புதிய புகைப்படம் ஒன்றைக் காட்டினர். இரண்டு படங்களில் குழந்தைகள் எதை அதிகம் பார்த்தார்கள் என்பதை பகுப்பாய்வு செய்ய குழந்தைகளின் கண் அசைவுகளை கணக்கில் கொண்டனர்.
குழந்தைகள் ஒருவேளை பழைய புகைப்படத்தை அதிகம் பார்த்தார்கள் என்றால், (முந்தைய ஆய்வுகளில் பரிந்துரைக்கப்பட்டபடி) குழந்தைகளால் அந்தப் படத்தை நினைவில் வைத்துக் கொள்ளவும் அதை அடையாளம் காணவும் முடிந்தது என்பதற்கான அறிகுறியாக ஆராய்ச்சியாளர்கள் இதை எடுத்துக் கொண்டனர்.
பட மூலாதாரம், 160/90
படக்குறிப்பு, குழந்தைகள் விழித்திருக்கும் போதும் சுறுசுறுப்பாக இருக்கும் போதும் அவர்களின் மூளையை ஸ்கேன் செய்யும் ஒரு முறையை பேராசிரியர் டர்க்-பிரவுனும் அவரது குழுவினரும் கொண்டுவந்தனர்.
குழந்தைகள் ஆரம்பத்தில் ஒரு படத்தைப் பார்த்தபோது அவர்களின் ஹிப்போகேம்பஸ் செயல்பாடு அதிகமாக இருந்தால், குறிப்பாக குழந்தையின் வயது 12 மாதங்களுக்கு மேல் இருந்தால், அவர்கள் பின்னர் அதை நினைவில் வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இதன் பொருள், ஒரு குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போது, ஹிப்போகேம்பஸ் ஏதோ ஒரு வகையான நினைவை சேமித்து வைக்கக்கூடும்.
இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டாலும் கூட, குழந்தைகள் உண்மையில் ஹிப்போகேம்பஸில் நினைவுகளை உருவாக்குகிறார்களா என்பதைத் தீர்மானிப்பதில் தனது குழுவின் ஆய்வு ‘முதல் படி’ என்று பேராசிரியர் டர்க்-பிரவுன் கூறுகிறார்.
“அவ்வாறு அந்த நினைவுகள் சேமிக்கப்படுகின்றன என்றால், அவை எங்கே போயின? அவை இன்னும் அங்கே இருக்கின்றனவா? அவற்றை நாம் அணுக முடியுமா போன்ற முக்கியமான கேள்விகளை இது எழுப்புகிறது” என்கிறார் டர்க்-பிரவுன்.
2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, குட்டிகளாக இருக்கும்போது ஒரு புதிர்ப்பாதையிலிருந்து (Maze) தப்பிப்பது எப்படி என்பதைக் கண்டுபிடித்த எலிகள், வளர்ந்தபிறகு அந்த நினைவை இழந்துவிட்டன. இருப்பினும், ஆரம்பக் கற்றலில் ஈடுபட்டிருந்த ஹிப்போகேம்பஸ் பகுதிகளை செயற்கையாகத் தூண்டுவதன் மூலம் அந்த நினைவாற்றலை மீண்டும் பெறலாம்.
மனிதக் குழந்தைகள் பிற்கால வாழ்க்கையில் (எப்படியோ) செயலற்றதாகிவிடக்கூடிய நினைவுகளைச் சேமித்து வைக்கிறார்களா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியல் பேராசிரியரான கேத்தரின், ‘குழந்தைகளுக்கு நினைவுகளை உருவாக்கும் திறன் உள்ளது, குறைந்தபட்சம் பேசத் தொடங்கும் நேரத்திலாவது’ என்று நம்புகிறார்.
“சிறு குழந்தைகள் நர்சரி வகுப்பிலிருந்து திரும்பி வருவார்கள், அங்கு நடந்த ஒன்றை விவரிப்பார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை அவர்களால் விவரிக்க முடியாது. எனவே நினைவுகள் அப்படியே இருக்கின்றன. அவை ஒட்டிக்கொள்வதில்லை,” என்று அவர் வாதிடுகிறார்.
“காலப்போக்கில் அந்த நினைவுகளை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொள்கிறோம், அவை மிக விரைவாக மங்கிவிடுகின்றனவா, அவை எந்த அளவுக்கு நனவான நினைவுகள், அவற்றைப் பற்றி நாம் உண்மையிலேயே பிற்காலத்தில் சிந்திக்க முடியுமா என்பதே முக்கியமான கேள்விகள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், ullstein bild via Getty Images
படக்குறிப்பு, குழந்தைகள் பிற்காலத்தில் அணுக முடியாத நினைவுகளை உருவாக்குகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவை போலியான நினைவுகளாக இருக்க முடியுமா?
பேராசிரியர் கேத்தரினின் கூற்றுப்படி, “மக்கள் தங்கள் முதல் நினைவு என்று நம்பும் ஒன்று உண்மையில் அவர்களின் முதல் நினைவா என்பதைத் தீர்மானிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இது குழந்தைப் பருவ மறதி பற்றிய நமது புரிதலை மேலும் குழப்புகிறது.”
நம்மில் சிலருக்கு, நாம் குழந்தையாக இருந்தபோது நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் நினைவுக்கு வரலாம்.
“அத்தகைய நினைவுகள், உண்மையான அனுபவங்களின் அடிப்படையிலான துல்லியமான நினைவுகளாக இருக்க வாய்ப்பில்லை.” என பேராசிரியர் கேத்தரின் கூறுகிறார்.
“நினைவைப் பற்றிய விஷயம் என்னவென்றால், அது எப்போதும் மறுகட்டமைப்பை சார்ந்தது தான். எனவே யாராவது உங்களிடம் ஏதாவது சொன்னால், அதைப் பற்றிய போதுமான தகவல்கள் உங்களிடம் இருந்தால், முற்றிலும் உண்மையானதாக உணரக்கூடிய ஒன்றை மூளையால் மீண்டும் உருவாக்க முடியும்,” என்று அவர் விளக்குகிறார்.
“நாங்கள் இங்கே உண்மையில் பார்ப்பது விழிப்புணர்வு நிலை, அதைப் பற்றி துல்லியமாக விவரிப்பது என்பது முடியாத விஷயம்” என்று கேத்தரின் கூறுகிறார்.
பேராசிரியர் டர்க்-பிரவுனின் கூற்றுப்படி, ‘குழந்தை பருவ மறதி நோயைச் சுற்றியுள்ள மர்மம், நாம் யார் என்பதன் சாரத்தைப் பேசுகிறது’.
“இது நமது அடையாளத்தைச் சார்ந்தது. வாழ்க்கையின் முதல் சில வருடங்களில் நடந்தவற்றை நாம் மறந்துவிடுகிறோம் என்ற கருத்து, தனிநபர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கு கடுமையான சவால்களை விடுக்கிறது என்றே நான் நம்புகிறேன்.” என்கிறார் பேராசிரியர் டர்க்-பிரவுன்.