பட மூலாதாரம், Getty Images
டெல்லியை சேர்ந்த திவ்யா ஷர்மா மருத்துவராக வேண்டும் என கனவு கண்டார். ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சி அடையாததால், தன்னுடைய மாற்றுத் திட்டத்தை நோக்கி நகர்ந்தார்.
அவருடைய மாற்று படிப்பாக ஆயுர்வேத படிப்பு இருந்தது. தற்போது அவர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை படித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும் என முயற்சிக்கின்றனர்.
அதில் பலர் தேர்ச்சியடைகின்றனர், ஆனால் பலர் தோல்வியும் அடைகின்றனர். அந்த தோல்வி அவர்களை கனவுகளை நோக்கி பயணிப்பதிலிருந்து நிறுத்திவிடுமா? இல்லை.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதது ஒருவருடைய பாதையை அடைத்துவிடுவதில்லை என திவ்யாவின் அனுபவம் காட்டுகிறது. மருத்துவ துறையில் உள்ள மற்ற பல வழிகளின் ஆரம்பமாக அது இருக்கலாம்.
2020ம் ஆண்டு திவ்யா 12ம் வகுப்பை முடித்தார். அதன்பின், தொடர்ந்து இரு ஆண்டுகள் நீட் தேர்வை எழுதினார். 2020ம் ஆண்டு, அவர் மற்ற 13 லட்சம் மாணவர்களுடன் சேர்ந்து நீட் தேர்வை எழுதினார், ஆனால் 7,50,000 மாணவர்கள் தான் அதில் தேர்ச்சியடைந்தனர்.
மற்ற மாணவர்கள் என்ன ஆகின்றனர்?
மீண்டும் நீட் தேர்வை எழுதுவது தன்னுடைய அடுத்த வாய்ப்பாக இருந்ததாக திவ்யா கூறுகிறார்.
“முதல் முறை நீட் தேர்வெழுதியபோது ஒரு சில மதிப்பெண்களில் வாய்ப்பை தவறவிட்டேன். இரண்டாவது முயற்சியில் நீட் தேர்வில் தேர்ச்சியடைவேன் என நினைத்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. என்றாலும், இரண்டாவது முயற்சியில் பல மாணவர்கள் தேர்ச்சியடைகின்றனர்.” என்றார்.
எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு இந்தியாவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வே நீட் தேர்வு. நீட் தேர்வை தாண்டி மாணவர்கள் மருத்துவ துறையில் என்ன படிக்கலாம்?
மற்ற வாய்ப்புகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
தேசிய மருத்துவ ஆணையத்தின்படி, இந்தியாவில் 13 லட்சத்து 86 ஆயிரத்து 190 அலோபதி மருத்துவர்கள் உள்ளனர்.
மத்திய ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்தின்படி, ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சிகிச்சையாளர்கள் உள்ளனர்.
மருத்துவ துறை பற்றி பேசும்போது நம் மனதில் முதலில் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம்தான் வரும். ஆனால், எம்பிபிஎஸ் படிப்பை தாண்டி மருத்துவ துறையில் மற்ற பல நல்ல வாய்ப்புகளும் உள்ளன.
பிபிசி ஹிந்தியிடம் பேசிய கல்வியாளரும் வேலைவாய்ப்பு ஆலோசகருமான அமித் திரிபாதி, “சுகாதார துறையில் வெறும் 15-20% பேர் மட்டும் தான் மருத்துவர்கள். மாறாக 80-85% பேர் மற்ற சுகாதார பணியாளர்கள்தான் உள்ளனர்.
இதில், செவிலியர், கதிரியக்கவியல், ஆய்வக தொழில்நுட்பம், பிசியோதெரபி, மருந்தியல், அறுவை சிகிச்சை அரங்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியவையும் வளர்ந்துவரும் துறைகளான சிரோப்ராக்டிக் (chiropractic – முதுகெலும்பு மற்றும் தசை மண்டலக் கோளாறுகளைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் ஒரு மாற்று மருத்துவ முறை) மற்றும் அழகியல் மருத்துவம் (cosmetic medicine) ஆகியவையும் அடங்கும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதது ஒருவருடைய எதிர்காலத்தை முடித்துவிடாது.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
துணை மருத்துவப் படிப்புகள்
மோஷன் எஜுகேஷன் எனும் பயிற்சி மையத்தில் நீட் தேர்வு பிரிவுக்கான தலைவரும் இணை இயக்குநருமான அமித் வர்மா கூறுகையில், “நீட் தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறவில்லையென்றால் பல துணை மருத்துவப் படிப்புகள் ஒரு வாய்ப்பாக இருக்கும்.” என்றார்.
நீட் தேர்வை மட்டும் நம்பியிருக்காமல் மாற்று வாய்ப்புகள் குறித்தும் திட்டமிட வேண்டும் என்றும், குறிப்பாக துணை மருத்துவப் படிப்புகளை ஒரு வாய்ப்பாக கொள்ள வேண்டும் எனவும் அமித் வர்மா கூறினார்.
துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் இணை சுகாதார படிப்புகளை வழங்கும் பல புகழ்பெற்ற கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும் (industry partner) நிறுவனம் விரோஹன்.
அதன் இணை நிறுவனர் நளின் சலுஜா கூறுகையில், இதில் பல படிப்புகளுக்கு மாணவர்கள் தனியாக தயாராக வேண்டியதில்லை என்பது மாணவர்களுக்கு ஆதரவான விஷயங்களில் ஒன்று என குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “பி.எஸ்சி நர்சிங், பிசியோதெரபி, இணை சுகாதாரம் (Allied Healthcare) போன்றவை 11 மற்றும் 12ம் வகுப்புகளின் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த பாடங்களைத்தான் நீட் தேர்வுக்கும் மாணவர்கள் படிக்க வேண்டும்.” என்றார்.
“வழக்கமாக இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் வெளியாகின்றன. நீட் தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல், இந்த படிப்புகளுக்கு மாணவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். இதன்மூலம், அந்த படிப்புகளுக்கு இடம் கிடைக்காமல் போவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம்.” என்றார் நளின் சலுஜா.
என்னென்ன படிப்புகள் உள்ளன?
பட மூலாதாரம், Getty Images
எந்த துணை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும் என கேட்டதற்கு அமித் திரிபாதி இந்த அறிவுரையை வழங்கினார்:
பி.எஸ்சி நர்சிங்: உலகளவில் சுகாதார துறையில் மிகவும் நிலையான ஒரு வேலையாக இது கருதப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு (NICU), அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் அவசர சூழல்களில் செவிலியர்களின் தேவை மிக அதிகம். மேலும், வெளிநாடுகளிலும் இதற்கான குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த படிப்பில் சேருவதற்கு மாநில அளவிலான/கல்லூரி அளவிலான நுழைவுத்தேர்வுகள் உள்ளன. சில இடங்களில், தகுதி அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. செவிலியர்களுக்கு ஆரம்ப ஊதியம் ரூ.25,000 – ரூ. 40,000 ஆக உள்ளது. அனுபவத்தின் அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும்.
இளநிலை பிசியோதெரபி(BPT): விளையாட்டு, நரம்பியல் மற்றும் எலும்பு மருத்துவம் ஆகிய துறைகளில் பிசியோதெரபி மருத்துவத்திற்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதில் சேருவதற்கு மாநில அளவில் வெவ்வேறு நுழைவுத்தேர்வுகள் உள்ளன. சில சமயங்களில் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (CUET) அல்லது நீட் தேர்வு ஆகியவற்றின் மதிப்பெண்களும் தேவைப்படலாம். பிசியோதெரபி மருத்துவ சிகிச்சையாளர்கள் பல்வேறு மருத்துவமனைகள், மருந்தகங்களில் பணிபுரியலாம், அல்லது தாங்களே அதற்கான மையங்களை நடத்தலாம்.
இளநிலை மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்(BMLT): நோயியல், செயற்கை கருத்தரிப்பு ஆகியவற்றிலும் மருத்துவமனைகளிலும் இதற்கான தேவை அதிகமாக உள்ளது. கோவிட்- 19 பெருந்தொற்றுக்குப் பிறகு இதற்கான தேவை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்த படிப்புக்கான சேர்க்கை தகுதி அடிப்படையிலோ அல்லது அந்தந்த கல்லூரி/பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும்.
இளநிலை கதிரியக்கவியல்/இமேஜிங் (B.sc radiology /Imaging): சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ மற்றும் எக்ஸ்-ரே போன்றவை எடுப்பதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவை. இத்துறையில் அனுபவத்திற்கு ஏற்ப ரூ.60,000 – ரூ. 1,00,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை, தகுதி அடிப்படையிலோ அல்லது கல்லூரி அளவிலான நுழைவுத்தேர்வு அடிப்படையிலோ மேற்கொள்ளப்படுகிறது.
இளநிலை மருந்தியல் (B. pharm): இந்தியாவின் மூன்றாவது பெரிய துறையாக மருந்து தொழில் உள்ளதாக குறிப்பிடும் அமித் திரிபாதி, இந்த 4 ஆண்டு படிப்பு மருந்துகளின் உலகம் குறித்த அறிவை வழங்குவதாக குறிப்பிட்டார். மருந்துகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்தும் அவை மக்களுக்கு எப்படி வழங்கப்படுகின்றன என்பது குறித்தும் இதில் கற்றுத் தரப்படுகின்றன. ஆரம்ப சம்பளமாக ரூ. 20,000- ரூ. 35,000 வரை வழங்கப்படுகின்றது, அனுபவத்திற்கு ஏற்ப சம்பளமும் அதிகரிக்கப்படும். மாநில அளவிலான நுழைவுத் தேர்வு அல்லது தகுதியின் அடிப்படையில் இதற்கான சேர்க்கை நடைபெறும்.
வாழ்க்கைத் தொழில் சார்ந்த படிப்பு (Bachelor of Vocational): மிக குறைவான செலவு கொண்ட இந்த படிப்பு, உடனடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. கதிரியக்கவியல், அறுவை சிகிச்சை அரங்கு, டயாலிசிஸ் மற்றும் அவசர சிகிச்சை போன்றவற்றில் இதற்கான தேவை உள்ளது. ஆனால் நர்சிங் அல்லது பிசியோதெரபி ஆகியவற்றைவிட இந்த படிப்பை வேலைகளுக்கு ஏற்றுக்கொள்வது குறைவாகவே உள்ளது. தகுதி அடிப்படையில் மட்டுமே இதற்கான சேர்க்கை நடைபெறும்.
காஸ்மட்டாலஜி, அழகியல் மருத்துவம்: இது வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை. தோல், முடி, லேசர் சிகிச்சை, வயதாவதற்கான அறிகுறிகளை தடுத்தல், சுருக்கங்களைக் குறைப்பதற்கான போடாக்ஸ் (botox) சிகிச்சை, உடல் உறுப்புகளில் ஃபில்லர்களை செலுத்திக்கொள்ளுதல் போன்றவை இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. இவற்றுக்கென நகரங்களில் கிளினிக்குகள் திறக்கப்படுகின்றன.
இதுதவிர BAMS (ஆயுர்வேதம்), BHMS (ஹோமியோபதி), BUMS (யுனானி) போன்ற படிப்புகளும் உள்ளன.

கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஒரு மாணவர் எதை படிக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்வது என கேள்வி எழலாம். ஒரு படிப்பை தேர்வு செய்வதற்கு முன்பாக சில முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அமித் வர்மா.
- முதலாவதாக, ஒரு படிப்பின் மீது அந்த மாணவருக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். நோயாளிகளை கவனித்துக்கொள்ளுதல், ஆய்வகம் சார்ந்த வேலைகள், எந்திரங்களை கையாளுதல் அல்லது ஆய்வின் மீது விருப்பம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
- அதன்பின், தேர்ந்தெடுக்கும் படிப்புகளுக்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை கவனிக்க வேண்டும்.
- ஒரு படிப்பு எந்தளவுக்கு ஏற்கப்படுகின்றது, அதற்கான மதிப்பு என்ன என்பதை அறிய வேண்டும். மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரி UGC-AICTE அல்லது தகுதிவாய்ந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும்.
- மேலும், அக்கல்லூரி ஏதேனும் மருத்துவமனையில் தொழில்பயிற்சி (internship) அளிக்கிறதா, இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.
- அக்கல்லூரியில் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு எப்படி இருந்துள்ளது என்பது குறித்த தரவுகளையும் பார்க்க வேண்டும்.
- கட்டணம் எவ்வளவு, படிப்பு காலம் என்ன என்பதை பார்க்க வேண்டும்.
எங்கு வேலை செய்யலாம்?
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளன.
- நோய் கண்டறிதல் ஆய்வகங்களில் நல்ல வேலைகள் உள்ளன.
- மறுவாழ்வு மையங்களில் இதற்கான வாய்ப்புகள் உள்ளன.
- நல காப்பகங்கள் மற்றும் தனியார் கிளினிக்குகளிலும் இதற்கான வேலைகள் உள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு