ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வுகளுக்கான அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிலையங்களில் பொறியியல் சார்ந்த படிப்புகளைப் படிக்க விரும்புவோர், ஜேஇஇ மெயின் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி, ஏப்ரல் என இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஜனவரி 22ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஜனவரி 22, 23, 24, 28, 29 ஆகிய தேதிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான தேர்வு நடைபெறும். காலை 9 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது.
ஜனவரி 30ஆம் தேதி பி.ஆர்க் மற்றும் பிளானிங் படிப்புகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வு மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.
மேலும் இந்த ஆண்டில் இரண்டாவது முறை நடத்தப்படும் ஜெஇஇ தேர்வு, ஏப்ரல் 1 முதல் 8ஆம் தேதிக்கு இடையே ஏதாவதொரு நாளில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள மையங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 15 நகரங்களிலும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இந்தத் தேர்வுக்கான பாடத் திட்டம் குறித்த தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் இந்த இணையத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் தேர்ந்தெடுத்து படித்த மாணவர்கள் மட்டுமே ஜேஇஇ மெயின் தேர்வுகளை எழுத முடியும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் முதல் 2,50,000 மாணவர்கள் மட்டுமே ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுதத் தகுதி பெறுவர். அந்தத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே ஐஐடியில் பொறியியல் சார்ந்த பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க முடியும்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தேதிகளில் வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டால், ஜேஇஇ மெயின் தேர்வின் தேதிகளை தேசிய தேர்வு முகமை மாற்றாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, தேர்வு எழுத விருப்பமான நகரத்தை மாணவர்கள் தெரிவிக்கலாம். ஆனால் இறுதி முடிவை, மாணவர்கள் மற்றும் மையங்களின் எண்ணிக்கையைப் பொருத்து தேசிய தேர்வு முகமையே முடிவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட் தேர்வு விவரங்கள்
கேட் (GATE) தேர்வுகள் பிப்ரவரி 1, 2, மற்றும் 15,16 தேதிகளில் நடைபெறுகின்றன. கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் பல்வேறு கல்வி நிலையங்களில் நுழைவதற்குப் பயன்படுத்தப்படும்.
இளநிலைப் பட்டப்படிப்பின் மூன்றாவது அல்லது அதற்கும் மேலான ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு இளநிலை படிப்பை முடித்தவர்கள் கேட் தேர்வுகளை எழுதத் தகுதியானவர்கள்.
ஐஐடி மெட்ராஸில் உள்ள ஹூமானிடீஸ் படிப்புகளில் கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர முடியும்.
நீட் தேர்வு குறித்த அறிவிப்பு
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆண்டுதோறும் ஒருமுறை நடத்தப்படுகிறது.
வழக்கமாக மே அல்லது ஜூன் மாதங்களில் நடத்தப்படும் நீட் தேர்வு, இந்த ஆண்டு எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பை தேசிய தேர்வு முகமை இந்த வாரம் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வுக்கென தனிப்பட்ட இணையதளம் https://neet.nta.nic.in/ தொடங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள், தேர்வுத் தேதிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும்.
நீட் தேர்வு 2025-க்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, www.nmc.org.in என்ற தேசிய மருத்துவ ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் என்ன?
நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி (NIFT) என்ற ஆடை அலங்கார வடிவமைப்பு படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனத்துக்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
வடிவமைப்பு மற்றும் வடிவமைப்புத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உள்ளன.
இந்தத் தேர்வுக்கு விண்ணபிக்க கடைசி தேதி ஜனவரி 6. இதற்கான விண்ணப்பங்களை https://exams.nta.ac.in/NIFT/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். இந்தத் தேர்வு பிப்ரவரி 9ஆம் தேதி நடத்தப்படும்.
சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் (Joint CSIR_UGC NET) எனப்படும், தகுதியான விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வு உதவித்தொகை பெறுபவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, டிசம்பர் 30ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 2ஆம் தேதி இரவு 11.50 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.