• Wed. Jul 22nd, 2026

24×7 Live News

Apdin News

நீட் தேர்வு: ‘டெல்லி போராட்டம் நம்பிக்கை தருகிறது’ – இறந்த தமிழக மாணவர்களின் குடும்பத்தினர்

Byadmin

Jul 22, 2026


அனிதாவின் சகோதரர் மணிரத்னம்

பட மூலாதாரம், Maniratnam

படக்குறிப்பு, அனிதாவின் சகோதரர் மணிரத்னம்

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் தற்கொலை பற்றிய விவரங்கள் உள்ளன. உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.

“எங்கள் வீட்டில் பெண் குழந்தை வேண்டும் என்று மிக நீண்ட காலம் காத்திருந்து ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் அனிதா. 10 ஆண்டுகளைக் கடந்தும் அனிதாவின் மரணம் எங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் பாதித்துள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார், அனிதாவின் சகோதரர் மணிரத்னம்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால், நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்களை எடுக்காத காரணத்தால் அவரால் தான் விரும்பிய மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. இதைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி அனிதா தற்கொலை மூலம் உயிரிழந்தார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கைத் தொடர்ந்தவர் அனிதா.

அனிதாவின் மரணம் தமிழ்நாட்டின் சமூக-அரசியல் மட்டத்தில் பெரும் விவாதமாக மாறியது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்தன. இன்றும் தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்புப் போராட்டங்களின் மையமாக அனிதா திகழ்கிறார்.

நீட் தேர்வுக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்த திமுக, இந்த விவகாரத்தில் அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டங்கள் மிகப் பெரிய விவாதப் பொருளாக இருந்தன. அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான காரணங்களுள் ஒன்றாக நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் கருதப்படுகின்றன.

By admin