• Wed. Apr 2nd, 2025

24×7 Live News

Apdin News

நீண்​டதூரம் செல்​லும் வகை​யில் தூங்​கும் வசதி​யுடன் 50 வந்தே பாரத் ரயில்​களை தயாரிக்க சென்னை ஐசிஎஃப் ஆலை திட்​டம் | Chennai ICF plans to manufacture 50 Vande Bharat trains with sleeping facilities

Byadmin

Mar 31, 2025


சென்னை: சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தற்போதுவரை பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இங்கு வந்தே பாரத் ரயில் தயாரிப்பு நடந்து வருகிறது. தெற்கு ரயில்வேயில் 8 வழித்தடங்கள் உட்பட இதுவரை 75-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை நாட்டின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

வந்தே பாரத் ரயில்கள் இருக்கை வசதி கொண்டவை. இதனால், பகலில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதற்கிடையில், தூங்கும் வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் புதிய ரயில், விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் 50 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஐ.சி.எஃப். அதிகாரிகள் கூறியதாவது:

நீண்ட தூரம் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். இதைத் தொடர்ந்து 50 ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட திட்டம் மேற்கொள்ளப்பட்டு, வரும் நிதியாண்டில் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான பட்டியலை பல்வேறு ரயில்வே மண்டலங்களும் வாரியத்திடம் அளித்து வருகின்றன. 16 பெட்டிகள், 20 பெட்டிகள், 24 பெட்டிகள் என 3 வகையான ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் மெக்கானிக்கல் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டுவிடும்.

மின்னணு பணி முடிவடைய சற்று காலம் எடுக்கும். எனவே, இரண்டு முதல் 3 ஆண்டுகளில் 50 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, வந்தே பாரத் வகை ரயில்களை, ரயில்வேயின் இதர தொழிற்சாலைகளிலும் தயாரிப்பதற்கான கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.



By admin