• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

நீதித்துறைக்கு சவால் விடும் ‘தலைமறைவு’ நித்யானந்தா: பெண் சீடர் முன்ஜாமீன் வழக்கில் நீதிபதி கருத்து | Nithyananda challenging the judiciary by absconding: HC Madurai

Byadmin

Oct 22, 2024


மதுரை: தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் நித்யானந்தா என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பிடதியைச் சேர்ந்த நித்யானந்தாவின் சீடர் சுரேகா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘கணேசன் என்பவருக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை நித்யானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக என் மீதும், தர்மலிங்கம், ரதி ஆகியோர் மீதும் தேனி மாவட்டம் சேத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எங்கள் மீது பொய்யான புகாரின் பேரில் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக இன்று (அக்.22) விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து புகார்தாரர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இடத்தின் உரிமையாளர் கணேசன் ஏற்கெனவே நித்யானந்தா வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ளார். மைசூர் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நித்யானந்தாவின் சீடர்கள் கணேசனை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது’ எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர் நீதிபதி, “நித்யானந்தா தலைமறைவாக இருந்து இந்திய நீதித்துறைக்கு சவால் விட்டு வருகிறார். அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடியாணை உள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை. ஆனால், அவரது சொத்துகளை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? மனுதாரர் வழக்கறிஞராக இருப்பதால் சம்பந்தப்பட்ட இட விவகாரத்தில் இனி தலையிட மாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்தால், முன் ஜாமீன் வழங்க பரிசீலிக்கப்படும். விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.



By admin