சென்னை: வகுப்பு வாத, மத வெறி சிந்தனையோடு நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வு, விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நேற்று வழக்கறிஞர்களிடம் கேட்டறிந்து கொண்டிருந்த போது, டெல்லி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் (71) என்பவர், தலைமை நீதிபதியை நேரடியாக தாக்கும் நோக்கத்துடன், காலணியை வீசிய இழி செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
காலணியை வீசிய வழக்கறிஞர் “சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது” என தொடர்ந்து கத்தி கூச்சலிட்டுள்ளார். அங்கிருந்த பாதுகாவலர்கள் வழக்கறிஞரை உடனடியாக வெளியேற்றியுள்ள போதும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காமல், சுதந்திரமாக வெளியில் சுற்ற அனுமதித்திருப்பது எந்த வகையிலும் ஏற்கதக்கதல்ல.
மூடப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் சனாதனக் கருத்தியலின் தீய விளைவுகளை எதிர்த்து, ஆன்மிக தளத்திலும், சமூகக் களத்திலும் புரட்சியாளர்கள் பலர் சமூக நீதி, சமத்துவ கருத்துகளை முன்வைத்து நீண்ட போராட்டம் நடத்தி வந்துள்ளார். இதனை முழுமையாக உள்வாங்கி, மதச்சார்பற்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்டு, குடிமக்களின் கண்ணிய வாழ்வுரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பு சட்டம் தீண்டாமையை கடுங்குற்றச் செயலாக அறிவித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலராக திகழ்ந்து வரும் உச்ச நீதிமன்றம், அதன் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் வழிவழியாக பாதுகாத்து வரும் மரபுக்கும் மாண்புக்கும் களங்கம் ஏற்படுத்தி, சனாதன, மனுதர்ம கருத்துகளில் வெறி பிடித்து, தாக்குதல் நடத்திய குற்றவாளியின் பயங்கரவாதச் செயல் சட்டப்படி, கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய கடுங்குற்றமாகும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோரை ராகேஷ் கிஷோரின் வெறிச் செயல் பாதிக்காமல் இருக்கலாம், அவர்கள் குற்றவாளியை மன்னித்து விடும், உயர்ந்த பட்ச மனிதாபிமானம் கொண்டவர்களாகவும் இருக்கலாம்.
ஆனால், உச்ச நீதிமன்றம் நவீன ஜனநாயக வாழ்வின் அறம் சார்ந்த அடையாளமாகும். வகுப்புவாத, மத வெறி சிந்தனையோடு அதனை தாக்கிய குற்றவாளி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, அவர் சட்டத்தின் சந்து, பொந்துகளில் நுழைந்து தப்பி விடாமல் தடுத்து, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தையும், டெல்லி காவல் துறையினையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.