• Tue. Nov 5th, 2024

24×7 Live News

Apdin News

நீதிமன்ற வாக்குமூலங்களில் சாட்சிகளின் சாதி, மதம் குறிப்பிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு | Adjournment of case seeking ban on mention of caste, religion of witnesses in court affidavits

Byadmin

Nov 4, 2024


மதுரை: விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளின் வாக்குமூலங்களில் சாட்சிகளின் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட தடை விதிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மதுரை உலக நேரியைச் சேர்ந்த கோகுல் அபிமன்யு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளின் வாக்குமூலத்தில் சாட்சி அளிப்பவரின் சாதி மற்றும் மதம் குறிப்பிடப்படுகிறது. இதனை விசாரணை நீதிமன்றம் ஒரு நடைமுறையாக கொண்டுள்ளது. இதனால் நீதிபதியும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்ட நபரின் சாதி மற்றும் மதம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்கின்றனர். சாட்சி அளிக்கும் நபரின் சாதி மற்றும் மத அடையாளங்கள் இன்றியே அந்த வழக்கை கையாளலாம். சாதிக்கும், மதத்துக்கும் அதில் எவ்விதமான பங்கும் இல்லை. உச்ச நீதிமன்றமும் விசாரணை நீதிமன்றம் வாக்குமூலம் பெறும்போது சாதி மற்றும் மத அடையாளத்தை சேகரிக்க தேவையில்லை எனக் குறிப்பிட்டும், விசாரணை நீதிமன்றங்களில் இந்த நடைமுறை தொடர்கிறது.

அதோடு ஒரு நபரின் சாதி மற்றும் மத அடையாளத்தை பொதுவெளியில் வெளிப்படுத்துவது அவரது தனிப்பட்ட உரிமையை மீறும் செயலாகும். எனவே, விசாரணை நீதிமன்றங்கள் சாட்சிகளின் வாக்குமூலம் பெறும்போது, அவர்களின் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட தேவையில்லை எனவும், எந்த ஆவணங்களிலும் சம்பந்தப்பட்டவர்களின் சாதி மற்றும் மத அடையாளத்தை குறிப்பிடத் தேவையில்லை எனவும் உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், மரியகிளட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “உரிமையியல் வழக்குகளில் சாட்சிகளின் சாதி, மத அடையாளத்தை குறிப்பிட தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது. ஆனால் குற்றவியல் வழக்குகளில் அது போன்ற வழிகாட்டுதல்கள் இல்லை. தற்போது இந்த விவகாரம் குற்றவியல் விதிக்குழுவின் பரிசீலனையில் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நவ.25-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



By admin