• Tue. Oct 28th, 2025

24×7 Live News

Apdin News

நீர் வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு | Surplus water released from Puzhal Lake again

Byadmin

Oct 28, 2025


திருவள்ளூர்: நீர் வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், 21.20 அடி உயரமும் கொண்டது. இந்த ஏரிக்கு, வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 15-ம் தேதி முதல் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வந்தது.

தொடக்கத்தில் விநாடிக்கு 200 கன அடி என, திறக்கப்பட்டு வந்த உபரி நீரின் அளவு, படிப்படியாகஅதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்த நிலையில் நேற்று முன் தினம் காலை 6 மணி நிலவரப்படி, விநாடிக்கு 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலான மழை இல்லாததால் புழல் ஏரிக்கு நீர் வரத்து குறைந்து வந்ததால், நேற்று காலை புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பதை நிறுத்தினர் நீர் வள ஆதாரத் துறையினர்.

இச்சூழலில், தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இன்று காலை 6 மணி நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,707 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம் 18.49 அடியாகவும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து நீர் வரத்து விநாடிக்கு 556 கன அடியாகவும் உள்ளது.

ஆகவே, இன்று காலை 8 மணியளவில், புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீரை திறந்துள்ளனர் நீர் வள ஆதாரத் துறையினர். அந்த உபரி நீர் விநாடிக்கு 250 கன அடி என, திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தின் அளவைப் பொறுத்து, புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என, நீர் வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், புழல் ஏரி உபரி நீர் கால்வாயின் இருபுற கரைகள் ஓரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.



By admin