ஊட்டி: நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும்,நாளையும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாவட்டத்தில் 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 283 இடங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசு அதிகாரிகளையும் உஷார் நிலையில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாதிப்பு குறித்து மக்கள் உடனுக்குடன் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் 3,500 முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர். ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற 197 பேரிடர்கால மீட்புக்குழுவினரும் தயாராக உள்ளனர். 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 0423-2450034, 2450035 என்ற எண்களில் அவசரகால தகவல்கள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டுமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடலூர், பந்தலூர், ஊட்டி,குந்தா தாலுகாக்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதியுடன் நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன.
சாலையில் விழும் மரங்களை உடனடியாக அகற்ற தீயணைப்பு, வனம் மற்றும் வருவாய்த் துறையினர், உரிய இயந்திரங்களுடன் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் கோவையில் இருந்து பேரிடர் குழுக்கள் வரவழைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று அரக்கோணம் பகுதியில் இருந்து ஆய்வாளர் பிரதீஸ் தலைமையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 30 பேர் ஊட்டி வந்துள்ளனர். இவர்கள் பந்தலூர், கூடலூர் பகுதிகளுக்கு செல்ல உள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் பிரதீஸ் கூறும்போது, “கன மழை மற்றும் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக தக்க உபகரணங்களுடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளோம்” என்றார்.