குன்னூர்: குன்னூர் கோடேரி கிராமத்தில் ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் உள்ளதாக வந்த தகவலை அடுத்து, வட்டாட்சியர் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட குன்னூர் சட்டபேரவை தொகுதியில், கோடேரி கிராமம், பாகம் 210-ல் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை, 12-வது வார்டு உறுப்பினர் மனோகரன் ஆய்வு செய்ததில் குறைகளை கண்டறிந்தார்.
அதில், குறிப்பிட்ட வாக்குச் சாவடிக்கு உட்பட்டு 12, 17-ம் எண் வார்டுகள் மட்டுமே உள்ள நிலையில், 11, 12, 17 வார்டுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், 9, 10 வார்டுகளின் வாக்காளர்களும் இதில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்தது.
மேலும், வீட்டு எண் 10-ல் 9 பேர், 9-ல் 14 பேர், 11-ல் 79 பேர், 12-ல் 33 பேர் என குளறுபடி இருந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த வாக்காளர் பெயர்கள் பல பகுதிகளில் சிதறியுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து வெளியேறியவர்களின் பெயர்கள் தற்போதும் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து மனோகரன் கூறும் போது, “இது போன்ற வாக்காளர் பட்டியலை வைத்து கொண்டு, அரசியல் கட்சியினர் குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது. 818 வாக்காளர்கள் உள்ள இந்த வாக்குச் சாவடியில் வாக்காளர் பட்டியலில் வார்டு வரையறை கூட செய்யா மல் குளறுபடிகள் இருப்பது, தேர்தல் அலுவலர்களின் அலட்சியமா அல்லது தரவுகள் பதிவேற்றும் போது ஏற்படும் கவனக்குறைவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். டேட்டா பதிவுகளில் உள்ள தவறுகளை சரி செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.
அதிகாரி உறுதி: இந்த புகாரை அடுத்து குன்னூர் வட்டாட்சியர் ஜவகர் தலைமையில் அதிகாரிகள் கோடேரி கிராமத்தில் ஆய்வு செய்தனர். குன்னூர் வட்டாட்சியர் ஜவகர் கூறும்போது, “இங்குள்ள வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு செய்து, அதில் உள்ள குழப்பங்களை தீர்க்கும் வகையில், பார்ம்-8-ல் விண்ணப்பித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.