சிறப்பு அழைப்பாளராகவன்றி ஒரு சாதாரண ரசிகனாக, திரையரங்கில் சென்று பார்த்தேன்.
தென்னிந்தியாவில் தயாரானாலும், ஈழத் திரைத்துறை, உலகத் தரத்தை எட்டியுள்ளது என மார்தட்டிச் சொல்லும் அளவு ஒரு முழுமையான ‘ஈழத் திரைப்படம்’இது.
உலகின் முன்னணி ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர் தொடர்பான பரபரப்புச் செய்திகளுக்கே, முக்கியத்துவம் கொடுத்துவரும் காலமிது. யார் அதிகமான அழிவை ஏற்படுத்தினார்கள் என்பதில்தான் போட்டியே. நாமும் கூட, அறிய முற்படுவது அத்தகைய செய்திகளையே.
ஆனால், இத்தகைய போர்களால், எத்தனை அப்பாவி மக்களது வாழ்வு நிர்மூலமாகி,அவர்களது கனவுகள் சிதைந்து போவதை எண்ணிப்பார்த்ததுண்டா? அவர்களுக்காக எப்போதாவது அனுதாபப் பட்டதுண்டா?
நாமும் அத்தகைய சூழலுக்குள்ளாகும் போதுதான் அதன் கொடூரம் புரியும்.
நமது மண்ணிலும் அத்தகைய ஒரு போர்ச் சூழல் இருந்ததை நாம் மறந்து ஒன்றரை தசாப்த காலமாகிறது. எனவே, ஒரு காலத்தேரில் ஏற்றி, நம்மை 1987ம் ஆண்டு காலகட்டதுக்கு அழைத்துச்செல்கின்றார் இயக்குநர் சோமீதரன்.
மட்டக்களப்பு-அமிர்தகழியில் பிறந்து, Balanathan Benjamin Mahendran என்ற பெயரில் எமது வானொலியின் முன்நாள் நாடகக் கலைஞராகவும் திகழ்ந்து, பின்நாளில் பாரதமே போற்றும் ஒரு திரைக்கலைச் சிற்பியாக வளர்ந்து, வாழ்ந்து மறைந்த பாலு மகேந்திராவின் ‘குருகுலத்தில்’ பட்டை தீட்டப்பட்ட ஒரு வைரம் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குநர் சோமீதரன்.
நாம் அமர்ந்திருப்பது ஒரு திரையரங்கு, முன்னால் இருப்பது ஒரு வெண்திரை என்பதை மறந்து, முதல் காட்சியிலேயே, அந்தக் கதைச்சூழலுக்குள் நாம் சென்றுவிடும் அதிசயத்தை முதல் முறையாக உணர்ந்தேன். அடுத்து என்ன நடக்குமோ? என்ற பதை பதைப்புடன் பார்வையாளனை 92 நிமிடங்கள் இருக்கையில் அமர வைத்த, சோமீதரனின் ‘காட்சி வடிவில் கதை சொல்லும்’ திறமை அவரை தேர்ந்த படைப்பாளன் என்பதை நிரூபித்துள்ளது.
இந்திய அமைதிப்படை-நமது மண்ணின் போராளிகள், இருசாராருக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஒரு அப்பாவிக் குடும்பம் என்ற கதைக்களத்தை கையாளும் போது, தானும் இந்த மண்ணில் பிறந்தவன் என்ற வகையில் உணர்ச்சிவசப்படாமல், இத்திரைப்படத்தை எங்கிருந்து தயாரிக்கிறோம் என்பதை ஆழமாக உணர்ந்து எந்தச் சர்ச்சைக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் திரைக்கதையை அமைத்த சோமீதரனின் சமயோசிதத்தைப் பாராட்டவேண்டும்.
முன்கதை என நீட்டி முழக்கிச் சொல்லவேண்டிய சொல்ல வேண்டிய இடங்களைக்கூட ஒன்றிரண்டு வசனங்களில் உணர்த்துகிறார். தென்னை ஓலையில் ஹெலிகொப்படர், மரக்கட்டைத் துப்பாக்கி விளையாட்டு என, வளரும் தலைமுறையின் சிந்தனையில், போர் ஏற்படுத்தியுள்ள தாக்கம், போர் மேகச் சூழலிலும் தென்னிந்தியத் திரைப்படங்கள் VHS-Cassette வடிவில் அவர்களது இரவுப்பொழுதுகளில் தரும் சிறிய மகிழ்ச்சி, அத்திரைப்படங்களுக்குள்ளும் இடைச் செருகலாய் வரும் போராளிகளின் பரப்புரை உத்தி, என சின்னச் சின்ன விடயங்களாகச் செதுக்கியுள்ளார்.
ஒரு திரைப்படக் கதையை அழகாகச் சொன்னாலும் எப்படி முடிப்பது என்று சில முண்ணனி இயக்குநர்கள் கூடத் தடுமாறியதுண்டு. ஆனால் சோமீதரன் மிக அழாக,அதிலும் ஒரு சிறிய சோகத்தை விதைத்துக் கதையை முடித்த விதம் அற்புதம்.
நடிக,நடிகையர் தேர்வு, ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு, என அனைத்தும் ஈழத்திரைத்துறையில் ஈடுபட விரும்பும் புதியவர்களுக்கு முன்மாதிரி.
ஒரு ஆச்சரியம்!
பெரும்பாலும் எந்த ஒரு திரைப்படத்தையும் பிரேதபரிசோதனை (postmortem)செய்வதுபோல் விமர்சனம் செய்யும் ‘Tamil Talkies’ (Blue சட்டை) மாறன் முதல் அனைத்து இந்திய விமர்சகர்களும் இத்திரைப்படத்தை மனமாறப் பாராட்டியுள்ளார்கள்.
என் கவலையெல்லாம்……!
திரைப்படங்களில் ஏற்கும் பாத்திரப் படைப்புகளால் ரசிகர் மனங்களில் Robinhood ஆக கொலுவீற்றிருப்பவர்களைக் கொண்டாடித் திரியும் தமிழக இளையசமூகம் இந்தப் படத்தை வரவேற்காவிட்டாலும் கவலையில்லை.
‘மசாலாப் பட நாயகர்களது’ கட்-அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்யும் அளவு தறிகெட்டுப் போன இளைதலைமுறை இங்கும் உருவாகியுள்ளதே? அவர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பார்களா? அல்லது,
நம்மவர் புலம் பெயர்ந்து வாழும் மண்ணிலெல்லாம், தென்னிந்திய ஜனரஞ்சக நடிகர்களது படங்களை முன்கூட்டியே பதிவு செய்து பார்க்கும் -சிலவேளை இதற்காகவே விமானமேறிப் பறந்து வந்து தமிழகத்தில் முதல்நாள் முதல் காட்சியை(அதிகாலை 5மணியாயினும்) பார்த்துவிடத் துடிக்கும் நம்மவர்கள் இந்தத் திரைப்படத்துக்கு ஆதரவு தருவார்களா? !!!
சிலவேளை காலம் கடந்து, உணர்ந்து, ஒருமுறை இத்திரைப்படத்தைப் பார்ப்போமே என அவர்கள் முடிவுசெய்வதற்குள், திரையரங்குகளை விட்டு விலகி OTT தளங்களில் இத்திரைப்படம் முடங்கிவிடக் கூடும்.
ஆனால் ஒன்று திரையரங்கில் பார்க்கும் நிறைவு நிச்சயம் OTTயில் கிடைக்காது.
பி.எச். அப்துல் ஹமீது
The post நீள்-இரா (Neelira) படம் பார்த்தேன்… | பி.எச். அப்துல் ஹமீது appeared first on Vanakkam London.