0
அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து விரிவாகக் கலந்துரையாடினர்.
அந்தக் குழுக்களின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் நீதி அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்த உத்தேச சட்டமூலம் தொடர்பான முதலாவது சட்டமூலம் 2024 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தனர். அதன்போது, சட்டமூலம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய உயர் நீதிமன்றத்தினால் உள்வாங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்ட திருத்தங்கள், சட்டமூலத்தின் குழு நிலையின் போது மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சினால் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் கொள்கை ரீதியாக உள்வாங்கப்படவேண்டிய ஏனைய திருத்தங்கள் சேர்க்கப்பட்டு புதிய சட்டமூலம் வரைபு செய்யப்பட்டு வர்த்தமானி தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை பத்தாவது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தின் ஊடாக இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவுதல், பணக் கடன் வழங்கும் தொழில் மற்றும் நுண்நிதித் தொழில் என்பவற்றை ஒழுங்குபடுத்தல், அவற்றின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் சபையின் அமைப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பணிப்பாளர்கள் சபையின் அமைப்பில் நுண்நிதித் தொழில் வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்படாமை பிரச்சினைக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர சுட்டிக்காட்டினார். விசேடமாக நுண்நிதித் தொழிற்துறைக்கு ஒழுங்குபடுத்தல் இல்லாததால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இருப்பதன் முக்கியத்துவத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அல்லது மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் பிரதிநிதி ஒருவர் அல்லது அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் இந்தப் பணிப்பாளர் சபையில் அங்கத்தவராக இருப்பது பொருத்தமாகும் என கௌரவ உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.
அத்துடன், இந்த வரைபு ஆவணத்தில் உள்ளடங்கப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எந்தவொரு ஒழுங்குபடுத்தலும் இன்றி நுண்நிதித் தொழிற்துறை கீழ் மட்டத்தில் செயற்படுவதால் பாரியதொரு சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, அந்த சமூக நெருக்கடியையும் பாதிப்பையும் தவிர்ப்பதே இதன் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்வரும் காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமூலத்துக்குத் தேவையான திருத்தங்களை உள்வாங்குமாறு அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தியதுடன், சம்பந்தப்பட்ட திருத்தங்களை சட்டமூலத்தின் குழு நிலையின் போது முன்வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரும் கலந்துக்கொண்டனர்.