பட மூலாதாரம், Getty Images
நமது நுரையீரலின் தன்மை, நமது முழு உடல்நலத்தைப் பற்றிய பல விஷயங்களையும் வெளிப்படுத்துகிறது. அதிர்ஷ்டவசமாக, நம்மால் நுரையீரலை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளவும் முடியும்.
உங்கள் நுரையீரலுக்கு எத்தனை வயதாகிறது என்று எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா?
ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும், மாசுபாடு ஏற்படுத்தும் பொருட்கள், நுண்ணுயிரிகள், தூசி, ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்கள் எனப் பலவற்றுக்கு நுரையீரல் ஆளாகின்றது. இதனால் அதற்கு வேகமாக வயதாகக்கூடும். அதைவிட முக்கியமாக, நமது உடலில் உள்ள மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திலும் நுரையீரல் தாக்கம் செலுத்துகிறது.
2025ம் ஆண்டில் மே மாதத் தொடக்கத்தில், மனித நுரையீரல் செயல்பாடு, நமக்கு வயதாவதற்கு ஏற்றவாறு எவ்வாறு மாறுகிறது என்பதை மதிப்பிட்ட ஒரு முக்கிய ஆய்வை சர்வதேச சுவாச நிபுணர்கள் குழு வெளியிட்டது.
20ஆம் நூற்றாண்டில் சுமார் 30,000 ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நுரையீரல் செயல்பாடு நமது 20-களின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை உச்சத்தை அடைகிறது என்பதைக் காட்டியது. பெண்களின் நுரையீரல் திறன் பொதுவாக ஆண்களை விட சில ஆண்டுகள் முன்னரே உச்ச நிலையை அடைந்து பின்னர் குறையத் தொடங்குகிறது.
இந்த ஆய்வை வழிநடத்திய பார்சிலோனாவின் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த்-இன் பேராசிரியர் ஜூடித் கார்சியா-அய்மெரிசின் கூற்றுப்படி, வயதாவதோடு உயிரியல் ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு இயல்பு தான் இது. ஆனால் புகைபிடித்தல், காற்று மாசுபாடு, ஆஸ்துமா போன்ற நோய்கள் அதிகரித்தால், இந்த சரிவு மேலும் தீவிரமானதாக மாறுகிறது.
அதற்குப் பதிலாக, அந்த உச்ச வயதில் உங்கள் நுரையீரல் திறன் சிறப்பாக இருந்தால், பிற்காலத்தில் நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் பிற நுரையீரல் பிரச்னைகளுக்கு எதிராக அதிக எதிர்ப்புத் திறன் உங்களுக்கு கிடைக்கும் என அவர் கூறுகிறார்.
நுரையீரல் ஆரோக்கியம், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு, உடல் எடை, மூளை உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளின் நலனிலும் முக்கியத் தாக்கம் செலுத்துகிறது.
சரி, உங்கள் நுரையீரல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது? அவற்றின் நிலையை மேம்படுத்த உங்களால் ஏதாவது செய்ய முடியுமா?
நுரையீரல் ஆரோக்கியத்தை அளவிட,ஆராய்ச்சிகளில் விலையுயர்ந்த கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், வீட்டிலேயே ஒரு எளிய முறையில் உங்கள் நுரையீரலை சோதிக்கலாம்.
அதற்குத் தேவையானவை :
ஒரு பெரிய பிளாஸ்டிக் பாட்டில், ஒரு வாளி அல்லது குளியல் தொட்டி, மற்றும் ஒரு நீளமான ரப்பர் குழாய். (இந்தச் செயல்முறையில் தண்ணீர் கொஞ்சம் சிதறலாம், எனவே அதற்கேற்ப உங்கள் வீட்டில் கைகழுவும் இடத்திலோ அல்லது வெளியிலோ செய்வது நல்லது)
செய்முறை:
1. முதலில் 200 மில்லி தண்ணீரை அளந்து, பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி, பேனா கொண்டு அந்த நீர் மட்டத்தை குறியிடவும்.
2. மீண்டும் 200 மில்லி தண்ணீர் சேர்த்து, புதிய நீர் மட்டத்தை குறிக்கவும். பாட்டில் நிரம்பும் வரை இந்தச் செயல்முறையைத் தொடரவும்.
3. இப்போது வாளி அல்லது குளியல் தொட்டியைத் தண்ணீரால் நிரப்பி, ஏற்கெனவே நீர் நிரம்பிய பாட்டிலை அதில் தலைகீழாக மூழ்கடிக்கவும்.
4. பாட்டிலை அந்த நிலையில் வைத்துக்கொண்டு, ரப்பர் குழாயை பாட்டிலின் கழுத்துக்குள் வைக்கவும். அது இறுக்கமாகப் பொருந்த வேண்டியதில்லை.
5. ஆழமாக மூச்சை எடுத்து, குழாயின் வழியாக பாட்டிலுக்குள் ஊதவும்.
6. காற்று உள்ளே செல்வதற்கு ஏற்ப பாட்டிலிலிருந்து தண்ணீர் வாளிக்கு மாறும். உங்களால் எவ்வளவு தூரம், பாட்டிலிலி கோடிட்ட இடத்துக்கு ஏற்றவாறு நீரை வெளியேற்ற முடிகிறதோ அதனை எண்ணுங்கள்.
7. வரிகளின் எண்ணிக்கையை 200 மில்லியால் பெருக்கவும். (உதாரணமாக: மூன்று வரிகள் என்றால் 600 மில்லி). இதுவே உங்கள் முக்கிய நுரையீரல் திறன் (Vital Lung Capacity), அல்லது Forced Vital Capacity – FVC ஆகும்.
“இந்தச் சோதனை, நீங்கள் வெளியே மூச்சாக விடக்கூடிய காற்றின் அளவைப் பரிசோதிக்கிறது. இதையே முக்கிய [நுரையீரல்] திறன் (vital capacity) என்று அழைக்கிறோம்,” என்று கென்ட் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி சுவாச மருத்துவ மையத்தின் தலைவர் ஜான் டிக்கின்சன் விளக்குகிறார்.
“இந்தச் சொற்றொடரை முதன்முதலில் 1840களில் அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் ஹட்சின்சன் பயன்படுத்தினார். குறைந்த அளவிலான காற்றையே மூச்சாக விடக்கூடியவர்களுக்கு குறைந்த ஆயுட்காலம் இருப்பதை அவர் கவனிக்கத் தொடங்கினார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க நுரையீரல் சங்கத்தின் கூற்றுப்படி, வயதானதன் விளைவாக, புகைபிடிக்காத ஆரோக்கியமானவர்களிடம் கூட எப்ஃவிசி (FVC) பத்தாண்டுகளுக்கு சுமார் 0.2 லிட்டர் குறையக்கூடும். ஆராய்ச்சியின்படி, ஒரு சாதாரண ஆரோக்கியமான எப்ஃவிசி (FVC) மூன்று முதல் ஐந்து லிட்டர் வரை இருக்கும்.
வீட்டில் செய்யப்படும் இந்தச் சோதனையில் குறைந்த அளவீடுகள் வந்தாலும் அதைப் பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்று டிக்கின்சன் கூறுகிறார்.
“நிறையப் பேருக்கு தங்கள் நுரையீரலை முழுவதும் காலி செய்வதில் சிரமம் இருக்கும். அதனால் தவறாக குறைவான அளவீடுகள் கிடைக்கக்கூடும்,” என்று அவர் விளக்குகிறார்.
அதே நேரத்தில், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதன் செயல்திறன் குறைவதை தடுக்கவும் பல வழிகள் உள்ளன. ஆரோக்கியமாகவும் சீராகவும் முதுமை அடைய வேண்டும் என நீங்கள் விரும்பினால், இது மிக முக்கியமான ஒரு படியாகும்.
நுரையீரல், உங்கள் ஆரோக்கியத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது?
ஆராய்ச்சிகளின்படி, வயதாகும் போது, நமது நுரையீரல் திசுக்களின் நெகிழ்ச்சி குறைகிறது, உதரவிதானம் (diaphragm) போன்ற சுவாச தசைகள் பலவீனமடைகின்றன, மேலும் விலா எலும்புக் கூண்டில் ஏற்படும் மாற்றங்கள், அது விரிவடைந்து சுருங்கும் திறனை கட்டுப்படுத்துகின்றன.
“நுரையீரல் செயல்பாடு அதிகமாகக் குறைந்தால், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் வெளிப்படலாம்,”இது நாள்பட்ட அடைப்பு நுரையீரல் நோய் (COPD) எனப்படும், குறைந்த நுரையீரல் செயல்பாடு நிலையை அடையாளப்படுத்தும் ஒரு நிலைக்கு வழிவகுக்கலாம்”” என்று கார்சியா-அய்மெரிச் கூறுகிறார்.
ஆனால், நுரையீரலின் ஆரோக்கியம் பாதித்தால்,நுரையீரல் மட்டும் நோய்களுக்கு ஆளாவதில்லை.
அது உயர் இரத்த அழுத்தம், ஆட்டோ இம்யூன் நோய்கள் (autoimmune diseases), வளர்சிதை மாற்றக் கோளாறுகள், பலவீனம், மேலும் அறிவாற்றல் வீழ்ச்சி (cognitive decline) போன்ற பல்வேறு பிற நோய்களுடனும் தொடர்புடையதாக இருக்கிறது.
வயதாகும்போது உங்கள் நுரையீரல் திறன் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிய தகவலை வெளிப்படுத்தலாம்.
பட மூலாதாரம், Getty Images
கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் டான் பௌடிஷ் கூறுவதாவது, இதற்கான ஒரு காரணம் நுரையீரல் இதயம் மற்றும் இரத்த ஓட்டத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைந்திருப்பதோடு, அவர் “நுரையீரல்–நோயெதிர்ப்பு அச்சு” (lung-immune axis) என்று அழைக்கும் வழியில், பரந்த நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துடனும் ஆழமான தொடர்பு கொண்டுள்ளது.
“நுரையீரலில் கோடிக்கணக்கான நோயெதிர்ப்பு செல்கள் உள்ளன. அவை காற்று மாசுபாட்டின் துகள்களை நீக்குதல், தொற்றுகளை எதிர்த்துப் போராடுதல், தொடர்ந்து உள்ளிழுத்து வெளிவிடுவதால் ஏற்படும் சேதங்களைச் சரிசெய்தல் போன்ற முக்கிய பணிகளைச் செய்கின்றன,” என்று அவர் விளக்குகிறார்.
பௌடிஷின் கூற்றுப்படி, இந்த நோயெதிர்ப்பு செல்கள் நுரையீரலில் தேங்கும் துகள்களை முற்றிலும் அகற்ற முடியாவிட்டால், அது அதிகளவிலான அழற்சியைத் தூண்டுகிறது.
இதனால் நுரையீரல் ஃபைப்ரோசிஸ் எனப்படும் நுரையீரல் வடுவுக் குறைபாடு உருவாகலாம். இதில் நுரையீரல் விறைப்பாகி, செயல்பாடு குறைகிறது. மேலும், நுரையீரலில் உருவாகும் அழற்சி, சுவாச நோய்த்தொற்றுகளுக்கு உடல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதையும் பாதிக்கும். நோயெதிர்ப்பு செயல்பாடு உடலுக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
குறைந்த நுரையீரல் செயல்பாடு, இதய நோய், எலும்பு மெலிதல் (ஆஸ்டியோபோரோசிஸ்), டைப் 2 நீரிழிவு, நினைவாற்றல் குறைபாடு போன்ற வயது சார்ந்த பிற நோய்களுக்கு முன்னதாகவே தோன்றும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த தொடர்பின் சரியான தன்மை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. நமது நுரையீரலில் உருவாகும் அழற்சிகள் உடல் முழுவதும் பரவக்கூடும் என பௌடிஷ் நம்புகிறார்.
ஆரோக்கியமான நுரையீரலின் நன்மைகள்
நமது நுரையீரலுக்கும் , உடலின் ஆரோக்கியத்துக்கும் இடையில் இருவழி உறவு உள்ளது.
‘நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால், பிற்கால வாழ்க்கையில் நீண்ட காலம் நோயின்றி வாழும் வாய்ப்பு அதிகரிக்கும்’ என்று பௌடிஷ் கூறுகிறார்.
“வயதுக்கேற்ப நுரையீரல் திறன் குறைந்தாலும், நுரையீரல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்பவர்களுக்கு இது கவலைக்குரியதல்ல,” என்று டிக்கின்சன் கூறுகிறார். “ஆரோக்கியமான நுரையீரல், வாழ்நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கவும், கார்பன் டை ஆக்சைடை நீக்கவும் போதுமான திறனை கொண்டுள்ளது. ஆனால் இந்த சரிவு விகிதம் அதிகரித்தால், நமது உடல்நலமும் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படலாம்.”
நுரையீரல் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கவலைப்பட்டால், சரியான நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனைக்காக மருத்துவரை அணுக வேண்டும் என்று டிக்கின்சன் பரிந்துரைக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
இதில், ஸ்பைரோமீட்டர் எனப்படும் கருவியில் சுவாசிப்பதன் மூலம், உங்கள் சுவாசத்தின் அளவும் வேகமும் அளவிடப்படும்.
ஒரு ஸ்பைரோமீட்டர் உங்கள் எப்ஃவிசியை (FVC) மருத்துவத் தர துல்லியத்துடன் கணக்கிடும்.
அதோடு, கட்டாய வெளியேற்ற அளவு (FEV1) அதாவது ஆழ்ந்த மூச்சை எடுத்த பின் ஒரு வினாடியில் நீங்கள் வெளியேற்றக்கூடிய காற்றின் அளவையும் அளவிடும்.
மேலும், எப்ஃஈவி1 (FEV1) மற்றும் எப்ஃவிசி (FVC)க்கிடையேயான விகிதத்தையும் கணக்கிடும். இது உங்கள் காற்றோட்டத்தில் ஏதாவது தடை உள்ளதா என்பதை காட்டக்கூடும். இந்த அனைத்து அளவீடுகளும் சேர்ந்து, உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தின் முழுமையான தகவலையும் வழங்கும்.
“சிறந்த முறையில், எந்த அறிகுறிகளும் இல்லாதவர்களுக்கு, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நுரையீரல் செயல்பாட்டை மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்ய பரிந்துரைப்பேன். ஆனால், அசாதாரணமான மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்,” என்று டிக்கின்சன் கூறுகிறார்.
உங்கள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துதல்
நீங்கள் உங்கள் நுரையீரலின் நிலையை அறிந்தவுடன், நுரையீரல் திறனை மேம்படுத்தவும், வயதாவதால் வரும் சரிவைத் தணிக்கவும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
உதாரணமாக, வழக்கமான உடற்பயிற்சி காற்றுப்பாதை வீக்கத்தைக் குறைத்து, சுவாச தசைகளின் வலிமையும் சகிப்புத்தன்மையும் அதிகரிக்கிறது.
உணவில் உப்பைக் குறைப்பதும் பயனுள்ளதாகும், ஏனெனில் அதிகப்படியான உப்பு நுரையீரல் வீக்கம் மற்றும் ஃபைப்ரோசிஸ் (நுரையீரல் வடுவுக் குறைபாடு) ஆகியவற்றை மோசமாக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், மீன் எண்ணெய்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் C, E நிறைந்த உணவு நுரையீரல் சுவர்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது என்று கருதப்படுகிறது.
எந்தவொரு அழற்சி உண்டாக்கும் ரசாயனங்களையும் உட்கொள்ளாமல் இருக்க புகைபிடிப்பதையும், மின்சார சாதனம் மூலம் புகைபிடிப்பதையும் முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று பௌடிஷ் பரிந்துரைக்கிறார்.
மினசோட்டா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் டேனியல் கிரெய்க்ஹெட்டின் கூற்றுப்படி, நுரையீரல் செயல்பாட்டைப் பராமரிக்க மற்றொரு முக்கியமான வழி ஆரோக்கியமான எடையை வைத்திருப்பதும் அதிகப்படியான உடல் கொழுப்பைத் தவிர்ப்பதுமாகும்.
“வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு, நுரையீரல் காற்றால் முழுமையாக நிரம்பும் திறனைத் தடுக்கக்கூடும்,” என்று கிரெய்க்ஹெட் எச்சரிக்கிறார்.
ஆனால் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த இன்னொரு வழியும் உள்ளது. 1990களின் நடுப்பகுதியிலிருந்து, சுவாச தசை பயிற்சி (Inspiratory Muscle Training – IMT) எனப்படும் முறை அறியப்படுகிறது. இதில், எதிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு சாதனத்தின் வழியாக சுவாசிக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
இந்த ஐஎம்டி (IMT) முறை, விளையாட்டு வீரர்கள் மற்றும் பாடகர்கள் முதல், ஆஸ்துமா மற்றும் COPD போன்ற சுவாசிப்பதில் சிரமம் கொண்டவர்கள் வரை பலரின் சுவாச தசை வலிமையை அதிகரிக்கப் பயன்படுகிறது.
ஆராய்ச்சிகளின்படி, ஐஎம்டி (IMT) உடற்பயிற்சி திறனை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
ஐஎம்டி (IMT) -க்கான தரமான முறை என்பது பவர்பிரீத் (Powerbreathe) எனப்படும் மருத்துவ சாதனத்தின் மூலம் செய்யப்படுகிறது.
இது இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) மற்றும் பிற சுகாதார அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சாதனமாகும்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) இதை கோவிட்டில் இருந்து மீள்வதற்கு ஆதரவாக பரிந்துரைத்துள்ளது. மேலும், உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் இது அறுவை சிகிச்சைக்கு முன் மறுவாழ்வு (prehabilitation) சிகிச்சைகளில் அதாவது, சிகிச்சைக்கு முன்பே நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, குணமடையும் வாய்ப்பை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல், நுரையீரல் ஃபைப்ரோசிஸ் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் இருந்தவர்களுக்கு ஆதரவாகவும் பயன்படுகிறது.
கிரெய்க்ஹெட்டின் கூற்றுப்படி, சுவாச தசை வலிமையை மேம்படுத்த தினமும் இரண்டு முறை, ஒவ்வொரு முறையும் 30 மூச்சுகள் எடுக்கும் ஐஎம்டி(IMT) சிகிச்சை போதுமானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
பவர்பிரீத் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மருத்துவ அதிகாரி சப்ரினா பிரார், இந்த சாதனம் மூலம் ஐஎம்டி(IMT) செய்வதை கை, கால் தசைகளுக்கான பளுதூக்குதல் பயிற்சியுடன் ஒப்பிடுகிறார்.
“உடலில் உள்ள வேறு எந்த தசையையும் வலுப்படுத்துவது போலவே, சுவாசிக்க பொறுப்பான தசைகளை வலுப்படுத்துவதும் அவற்றின் சகிப்புத்தன்மையையும் வலிமையையும் அதிகரிக்கும். இதனால் வயது காரணமாக ஏற்படும் நுரையீரல் செயல்பாட்டு சரிவு குறையும்,” என்று பிரார் கூறுகிறார்.
“இதன் நோக்கம், உதரவிதானம் (diaphragm) மற்றும் விலா எலும்புகளுக்கிடையேயான தசைகளைச் செயல்படுத்துவதும், பின்னர் நுரையீரல் வலிமை மேம்படும் போது எதிர்ப்பை காலப்போக்கில் படிப்படியாக அதிகரிப்பதுமாகும்,” என்று அவர் விளக்குகிறார்.
மற்றொரு எளிய வழி, பாடுவது அல்லது காற்றின் மூலம் இயங்கும் இசைக்கருவி வாசிப்பது.
நியூயார்க் நகரிலுள்ள லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்துமா உள்ளவர்களின் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த, அவர்களுக்கு காற்றின் மூலம் இயங்கும் பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொடுப்பதன் மூலம் இந்த அணுகுமுறையை முன்னோடியாகப் பயன்படுத்தியுள்ளனர்.
சில விஞ்ஞானிகள், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதற்காக ஒக்கரினா எனப்படும் ஒரு வகை புல்லாங்குழலின் மின்னணு பதிப்பையும் வடிவமைத்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், பயிற்சி பெற்ற பாரம்பரிய பாடகியாகவும் இருக்கும் மெட்டே காஸ்கார்ட், சிஓபிடி (COPD) நோயாளிகளுக்குப் பாடுவது எவ்வாறு உதவக்கூடும் என்பதை ஆராயும் பல சோதனைகளில் பங்கேற்றுள்ளார்.
மேலும், பாடுவதால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நுரையீரல் சேதங்களை மீட்டெடுக்கலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று காஸ்கார்ட் கூறுகிறார்.
இருந்தாலும், சுவாச தசைகளைச் சிறப்பாகப் பயன்படுத்தும் நமது திறனை மேம்படுத்துவதன் மூலம், பாடுவது நுரையீரல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
“பாடலின் முக்கிய அம்சம் நீண்ட சொற்றொடர்களைப் பாடும் திறன் ஆகும். இதற்காக உதரவிதானம், விலா எலும்புகளுக்கிடையிலான தசைகள், வயிற்றுத் தசைகள் ஆகியவற்றின் கட்டுப்பாடும் நெகிழ்வும் அவசியம்,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால், நீங்கள் எத்தகைய நுரையீரல் பயிற்சி செய்தாலும், அது உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதன் மூலம், வாழ்க்கையின் சவால்களை ஒவ்வொரு மூச்சிலும் சமாளிக்க உதவும் என்பது உறுதி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு