0
இயக்குநரும் , நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்து பெப்ரவரி 21 ஆம் திகதியன்று வெளியான ‘டிராகன்’ திரைப்படம், இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
‘ஓ மை கடவுளே’ எனும் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து- ‘லவ் டுடே’ வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதன் முதன்முறையாக இணைந்த திரைப்படம் ‘டிராகன்’. வெளியீட்டுக்கு முன்னரே படத்தை ரசிகர்களிடம் திரைப்படத்தை பட மாளிகையில் காண வேண்டும் என்ற ஆவலை படக் குழுவினர் சிறப்பாக கொண்டு சேர்த்தனர். படம் வெளியான பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததால் படத்தின் வசூல் அதிகரிக்கத் தொடங்கியது.
இன்றைய பட்டதாரி இளைஞர்களின் மனநிலையை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்ததாலும் போலி கல்வி சான்றிதழ் தொடர்பாக கதையின் நாயகனுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதும் ரசிகர்களுக்கு பிடித்திருந்ததால் இப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்று வசூலில் சாதனை படைக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வெளியான பத்து நாட்களுக்குள் இந்த திரைப்படம் நூறு கோடி ரூபாய் வசூலித்து, சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘லவ் டுடே’ திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியது. அதே நிறுவனத்தின் சார்பில் மீண்டும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படமும் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இதனால் இந்தக் கூட்டணி ‘ராசியான வெற்றி கூட்டணி’ என்ற நல்ல பெயரை திரையுலகில் சம்பாதித்திருக்கிறது. இதற்காக படக் குழுவினருக்கு திரையுலக வணிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தையும் , அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் பெயரிடப்படாத புதிய படத்தையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.