சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) என்பது இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரம் கொண்ட சர்வதேச நீதிமன்றமாகும்.
நவம்பரில், இஸ்ரேலின் பிரதமர், அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஹமாஸின் ராணுவத் தளபதி ஆகியோருக்கு எதிராக ஐசிசி பிடிவாரண்ட்களை பிறப்பித்துள்ளது.
ஐசிசி என்ன செய்கிறது?
அடாவடி தலைவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு பொறுப்புகூற செய்வதற்காக நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
யுகஸ்லாவியப் போர்கள் மற்றும் ருவாண்டா இனப்படுகொலைக்குப் பிறகு உலகத் தலைவர்கள் இந்த நீதிமன்ற உருவாக்கத்திற்கு அதிகளவில் அழுத்தம் கொடுத்தனர்.
ஒரு பிரச்னையில், நாட்டின் அரசால் வழக்குத் தொடர முடியாதபோது அல்லது விரும்பாதபோது மட்டுமே இந்த நீதிமன்றம் அந்த விவகாரத்தில் தலையிடும். நீதி பெற உதவும் கடைசி முயற்சியாக இந்த நீதிமன்றம் செயல்படும்.
நீதிமன்றத்தை நிறுவிய ரோம் சட்டம், நடைமுறைக்கு வந்த ஜூலை 1, 2002க்குப் பிறகு நடந்த குற்றங்களை மட்டுமே இந்த நீதிமன்றத்தால் விசாரிக்க முடியும்.
ரோம் சட்டம் 124 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 34 நாடுகள் இதில் கையொப்பமிட்டுள்ளனர். எதிர்காலத்தில் பலரும் இந்தச் சட்டத்தை அங்கீகரிக்கலாம்.
இருப்பினும் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐசிசியில் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி விசாரித்த வழக்குகள் என்ன?
மார்ச் 2012 இல், காங்கோ ஜனநாயகக் குடியரசில் செயல்பட்ட ஒரு ஆயுதக்குழுவின் தலைவரான ‘தாமஸ் லுபாங்காவுக்கு’ எதிராக நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பு அமைந்தது.
அந்நாட்டில் நடந்த மோதலில் குழந்தைகளைப் பயன்படுத்தியது தொடர்பான போர்க் குற்றங்களுக்காக, அவர் ‘குற்றவாளி’ என தீர்ப்பளிக்கப்பட்டது. ஜூலை மாதம், 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
ஐசிசியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட மற்றோர் முக்கிய நபர்,’லாரன்ட் பாக்போ’. இவர் ஐவரி கோஸ்டின் முன்னாள் அதிபர்.
2011 இல் கொலை, பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
உகாண்டாவின் கிளர்ச்சி இயக்கமான “லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மியின்” (Lord’s Resistance Army) தலைவர் ஜோசப் கோனி, ஐசிசியால் தேடப்பட்டவர்களில் ஒருவர் .
அவர் மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கடத்தியது மற்றும் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் சூடான் அதிபர் உமர் அல் பஷீருக்கு எதிராக நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது .
ஆப்பிரிக்க ஒன்றியத்தால் ஐசிசி விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் அதிக கவனம் செலுத்தியதற்காக ஐசிசியை ஆப்பிரிக்கா விமர்சித்தது.
ஆனால், எந்த சார்பு நிலையும் தங்களுக்கு இல்லை என ஐசிசி இந்த விமர்சனங்களை மறுக்கிறது.
சில வழக்குகள் பாதிக்கப்பட்ட நாட்டினால் சுயமாக ஐசிசிக்கு கொண்டு வரப்பட்டவை. சில வழக்குகளை ஐ.நா ஐசிசியின் கவனத்துக்கு கொண்டு வரும்.
2023ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஐசிசி பிடிவாரண்ட் பிறப்பித்தது . அவர் போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர் என்றும் யுக்ரேனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்துவதில் தொடர்பு கொண்டுள்ளார் என்றும் ஐசிசி குற்றம் சாட்டுகிறது.
நீதிமன்றம் எவ்வாறு விசாரிக்கின்றது?
சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய ஐசிசிக்கு சொந்தமாக போலீஸ் படை இல்லை.
அதனால் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் அவர்களை நீதிமன்றம் இருக்கும் ஹேக் நகருக்கு மாற்றுவதற்கும் ஐசிசி, தேசிய போலீஸ் சேவைகளை நம்பியிருக்க வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அல்லது ஐசிசியை அங்கீகரித்த நாடுகளால் ஒரு வழக்கு பரிந்துரைக்கப்படும்போது , வழக்கறிஞர் தனது விசாரணையைத் தொடங்குகிறார். அவர் தனிப்பட்ட நடவடிக்கைகளும் எடுக்கலாம், ஆனால் அந்த வழக்கை நீதிபதி குழு அங்கீகரித்திருக்க வேண்டும்.
ஐசிசியை அங்கீகரித்துள்ள நாடுகளால் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஒரு வழக்கு விசாரணைக்கு வரும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்து, மூன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவர் .
குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தண்டனை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
அமெரிக்கா ஏன் ஐசிசி உறுப்பினராக இல்லை?
அரசியல் காரணங்களால் தூண்டப்பட்ட அல்லது அற்பமான வழக்குகளுக்கு தங்கள் வீரர்கள் உட்படுத்தப்படலாம் என்று ஐசிசியை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்கா வாதிட்டது.
அமெரிக்கத் துருப்புக்களுக்கு வழக்கிலிருந்து 12 மாதங்கள் விலக்கு அளிக்கப்படும். ஆண்டுதோறும் அது புதுப்பிக்கப்படும் என்ற முடிவுக்கு ஜூலை 2002-ல் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இந்த முடிவு, மிகவும் விமர்சிக்கப்பட்டது.
ஜூன் 2004 இல், அமெரிக்கத் துருப்புக்கள், இராக் கைதிகளை துன்புறுத்தும் படங்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது வெளியான பின்னர், அப்போதைய ஐ.நா. பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் தூண்டுதலால், பாதுகாப்பு கவுன்சில் தான் அளித்த விலக்கைப் புதுப்பிக்க மறுத்தது.
அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் நீதிமன்றத்தின் செயல்பாடு பலவீனமானதாகக் கருதப்படுகிறது.
ஆனால் குறிப்பிட்ட வழக்குகளில் நீதிமன்றத்துடன் அமெரிக்க ஒத்துழைக்கின்றது.
யுக்ரேனில் ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
வேறு எந்த நாடுகள் ஐசிசியில் சேரவில்லை?
பல முக்கியமான நாடுகள் ஐசிசியின் அதிகார வரம்பில் இல்லை.
சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனீசியா மற்றும் துருக்கி உள்ளிட்ட சில இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
இஸ்ரேல், எகிப்து,இரான் மற்றும் ரஷ்யா உட்பட மற்ற நாடுகள் கையெழுத்திட்டுள்ளன, ஆனால் அதை அங்கீகரிக்கவில்லை.
ஒவ்வொரு நாட்டின் நீதிமன்றங்களையும் ஐசிசி எவ்வாறு பாதிக்கிறது?
உடன்படிக்கையில் சேரும் நாடுகள், அனைத்து குற்றங்களையும் தாங்களே விசாரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பலாம். இல்லையெனில் ஐசிசி நீதிமன்றமும் அதில் தலையிடலாம்.
சில அரசாங்கங்கள் ஏற்கனவே தங்கள் சொந்த நீதி அமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஐசிசிக்கு நிதி அளிப்பது யார் ?
உலக நாடுகள் ஐ.நா.விற்கு பங்களிப்பதைப் போலவே ஐசிசியில் பங்கேற்கும் நாடுகளும் தங்களது நாட்டின் பொருளாதார வசதியின் அடிப்படையில் ஐசிசிக்கு நிதி கொடுப்பர்.
குறிப்பாக அமெரிக்கா இல்லாததால், ஐசிசிக்கு மற்ற நாடுகள் அதிக நிதி செலுத்த வேண்டியுள்ளது.
ஐசிசிக்கு மிகப்பெரிய அளவில் நிதி வழங்கும் நாடுகளாக பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு