2013 முதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு. 2017-19-ம் ஆண்டுகளில் நாட்டிலேயே அதிக பற்றாக்குறை மாநிலமாக தமிழகத்தை மாற்றினர். நெருக்கடியில் இருந்த தமிழகத்தை நாங்கள் மீட்டுள்ளோம். என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கல்லூரி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ஆஷாஅஜித் வரவேற்றார். ரூ.50 லட்சத்தில் நகரம்பட்டியில் வாளுக்குவேலி சிலை திறப்பு உட்பட ரூ.51.37 கோடியில் 46 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்த முதல்வர், சிவகங்கையில் ரூ.1.07 கோடியில் மருது சகோதரர்களுக்கு சிலைகள், காரைக்குடியில் ரூ.50 லட்சத்தில் சிலை உட்பட ரூ.164 கோடியில் 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் 53,039 பயனாளிகளுக்கு ரூ.161.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த மூன்றரை ஆண்டுகளில் சங்கரபதிகோட்டை புனரமைப்பு, மினி விளையாட்டு அரங்கு, நியோ ஐடி பூங்கா, சட்டக்கல்லூரி, செட்டிநாடு வேளாண் கல்லூரி உள்ளிட்ட திட்டப் பணிகள் இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிவகங்கையில் ரூ.89 கோடியில் புதிய ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம் கட்டப்படும். திருப்பத்தூரில் வாகன நெரிசலைத் தடுக்க, திண்டுக்கல்-காரைக்குடி சாலையில் ரூ.50 கோடியில் புறவழிச்சாலை, ரூ.30 கோடியில் காரைக்குடி மாநகராட்சிக்கு அலுவலகம் அமைக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவேதான், திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 20 சதவீதத்தைக்கூட நிறைவேற்றவில்லை என்று கூறுகிறார். இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? 2021 தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 389-ஐ நிறைவேற்றியுள்ளோம். மீதியுள்ள 116 வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுவோம். இதைத் தெரிந்தும் எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்களைக் கூறி வருகிறார். மற்றொரு கட்சித் தலைவரின் அறிக்கையை ‘காப்பி-பேஸ்ட்’ செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
2011, 2016 தேர்தல்களில் அதிமுக அறிவித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன, அதற்கான அரசாணை எண், பயனாளிகளின் விவரங்களைப் பட்டியலிட்டு, புத்தகமாக வெளியிட எதிர்க்கட்சித் தலைவர் தயாரா?
2011-ல் உபரி வருவாய் மாநிலமாக தமிழகத்தை திமுக விட்டுசென்றது. 2013 முதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு. 2017-19-ம் ஆண்டுகளில் நாட்டிலேயே அதிக பற்றாக்குறை மாநிலமாக தமிழகத்தை மாற்றினர். நெருக்கடியில் இருந்த தமிழகத்தை நாங்கள் மீட்டுள்ளோம்.
அதிமுக ஆட்சியில் அவர்களுக்கு இணக்கமான மத்திய அரசு இருந்தபோதும், மாநிலத்துக்காக எதையும் கேட்டுப் பெறவில்லை. பதவிக்காக மட்டுமே டெல்லிக்குச் சென்றனர்.
ஆனால், தற்போது மத்திய அரசு எங்களை எதிரிகளாகப் பாவித்து, மக்கள் நலத் திட்டங்களை முடக்குகிறது. மத்திய அரசின் ஓரவஞ்சனையை மீறித்தான், தமிழகத்தை முன்னேற்றி இருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் நிதியைக் கொண்டுதான் செயல்படுத்தி வருகிறோம். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர், தமிழகம் திவாலாகிவிட்டதாகக் கூறுகிறார். திவாலாக வேண்டும் என்பதுதான் அவரது எண்ணமா? அரசின் செலவுகளை வெட்டிச் செலவு என்கிறார். மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டங்களை வெட்டிச் செலவு என்று கூறி கொச்சைப்படுத்துகிறாரா? ஒவ்வொரு வீட்டுக்கும் திமுக அரசின் சாதனை சென்றடைந்து வருகிறது. அது தொடரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செங்கோல் வழங்கினார். அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கோவி.செழியன், சாமிநாதன், கார்த்தி சிதம்பரம் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிவகங்கையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கோவி.செழியன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., ஆட்சியர் ஆஷாஅஜித் உள்ளிட்டோர். படம்: எல்.பாலச்சந்தர்