பட மூலாதாரம், X/Shehbaz Sharif
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, தெற்காசிய பிராந்திய ஆசிரியர்
-
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதற்கு காரணமான அரசியல் மாற்றங்கள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
இதில், ஒரு காலத்தில் எதிரியாக இருந்த பாகிஸ்தானுடன் வங்கதேசத்திற்கு நெருக்கம் அதிகரித்திருப்பதும் அடங்கும்.
பல ஆண்டுகளாக நிலவி வந்த குழப்பமான உறவுகளுக்குப் பிறகு, இரு நாடுகளும் முதல் முறையாக நேரடியான வர்த்தகத்தை கடந்த மாதம் தொடங்கின.
வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து 50,000 டன் அரிசியை இறக்குமதி செய்தது.
அதனையடுத்து, நேரடி விமானங்கள் மற்றும் ராணுவத் தொடர்புகளும் புத்துயிர் பெற்றுள்ளன, விசா நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு விஷயங்களில் இருநாடுகளும் ஒத்துழைப்பதாகவும் தகவல்கள் உள்ளன.
இந்தியாவின் நிலப் பரப்பால் பிரிக்கப்பட்ட இந்த இரு நாடுகளும் ஆழமான, வலி மிகுந்த வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளன.
பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான பகை 1971 ஆம் ஆண்டில் தொடங்கியது.
அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்று அறியப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடங்கியது.
வங்கதேசம் உருவாவதற்கு வழிவகுத்த ஒன்பது மாதப் போரின்போது வங்காள கிளர்ச்சியாளர்களை இந்தியா ஆதரித்தது.
அந்த காலகட்டத்தின் வடுக்கள் ஆழமாக பதிந்திருந்தாலும், பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் கூட்டணி நாட்டை ஆட்சி செய்த 2001 மற்றும் 2006 க்கு இடையிலான காலகட்டத்தில் வங்கதேசம் பாகிஸ்தானுடன் நல்லுறவைக் கொண்டிருந்தது.
இந்தியா – வங்கதேச உறவில் மந்தம்
2009 ஆம் ஆண்டு முதல் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சியின் போது இச்சூழல் மாறியது. அவர் இந்தியாவால் வலுவாக ஆதரிக்கப்பட்டு, பாகிஸ்தானிடம் இருந்து விலகியதுடன் ஒரு இடைவெளியையும் கடைபிடித்தார்.
ஆனால் அவரது ஆட்சியை எதிர்த்து உருவான மக்கள் எழுச்சியையடுத்து, அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிப்படைய தொடங்கியுள்ளது.
“கடந்த 15 ஆண்டுகளாக, பாகிஸ்தான் – வங்கதேச உறவு சற்று கடினமான பாதையில் இருந்தது, இப்போது அந்த உறவு “இரண்டு சாதாரண அண்டை நாடுகளின்” நிலைக்குத் திரும்புவதாகத் தெரிகிறது ” என்று முன்னாள் மூத்த வங்காளதேச தூதர் ஹுமாயுன் கபீர் கூறுகிறார்.
மேம்பட்டு வரும் இந்த இரு நாடுகளின் உறவு, பாகிஸ்தானுடன் நெடுங்காலமாக விரோதமான உறவைக் கொண்ட இந்தியாவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றது.
மறுபுறம், ஹசீனா வெளியேறியதில் இருந்து வங்கதேசத்திற்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு தேக்கமடைந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அவரை ஒப்படைக்குமாறு முன்வைக்கப்பட்ட வங்கதேசத்தின் கோரிக்கைகளுக்கு இந்தியா பதிலளிக்கவில்லை.
ஹசீனாவோ, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மூலோபாய நடவடிக்கை
வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை மீட்டெடுப்பது ஒரு மூலோபாய நடவடிக்கை என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர்.
“பாகிஸ்தானும் வங்கதேசமும் தற்போது தந்திரமான உறவைக் கொண்டுள்ளன. ஒன்றாக இணைந்து, இந்தியாவின் மேலாதிக்கத்திற்கு எதிராக ஒரு சிக்கலை உருவாக்க விரும்புகின்றன,” என்கிறார் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் மூத்த உறுப்பினரான பாகிஸ்தான் கல்வியாளர் ஆயிஷா சித்திகா.
அதேபோல், இரு நாட்டு உறவுகளில் நேரடி வர்த்தகத்தைத் தொடங்குவதைத் தவிர வேறு பிற முன்னேற்றங்களும் உள்ளன.
வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மது யூனுஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சமீபத்திய மாதங்களில் பலமுறை வெவ்வேறு மன்றங்களில் சந்தித்துள்ளார்.
கூடுதலாக ராணுவ உறவும் வளர்ந்து வருகிறது.
ஜனவரி மாதம், உயர்மட்ட வங்கதேச ராணுவக் குழு ஒன்று பாகிஸ்தானுக்கு ஒரு அரிதான பயணத்தை மேற்கொண்டது.
அப்போது செல்வாக்கு மிக்க ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருடன் அக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
பின்னர் பிப்ரவரி மாதம் கராச்சி கடற்கரையில் பாகிஸ்தான் ஏற்பாடு செய்த பன்னாட்டு கடற்படை பயிற்சியில் வங்கதேச கடற்படையும் பங்கேற்றது.
2003 மற்றும் 2006 க்கு இடையில் வங்கதேசத்திற்கான இந்தியத் தூதராக இருந்த வீணா சிக்ரி, வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கத்தை, “ஏற்கனவே நிகழ்ந்தது போன்ற” தருணம் என்று விவரிக்கிறார்.
அவர் வங்கதேசத்தில் பணிபுரிந்த காலத்தில், “இந்திய கிளர்ச்சியாளர்கள் ஐஎஸ்ஐ [பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனம்] மற்றும் வங்கதேச ராணுவத்தின் ஒரு பிரிவின் ஆதரவுடன் வங்கதேசத்திற்குள் பயிற்சி பெறுகிறார்கள்” என்று இந்தியா மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டியது, என்று நினைவுகூர்ந்தார்.
“நாங்கள் வங்கதேச அதிகாரிகளுக்கு அதற்கான ஆதாரங்களை வழங்கினோம்,” என்றும் வீணா சிக்ரி தெரிவித்தார்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் உள்ள அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை அப்போது மறுத்தனர்.
வங்கதேசம் – பாகிஸ்தான் உறவில் மறுமலர்ச்சி
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்கள் முன்பு வங்கதேசத்திலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட முடிந்தது.
ஆனால், ஹசீனாவின் அவாமி லீக் 2009 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, அவரது அரசாங்கம் இந்தக் குழுக்களை ஒடுக்கியது மற்றும் அவர்களின் தளங்களைத் தகர்த்தது.
எனவே வங்கதேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ உறவுகளின் மறுமலர்ச்சி “இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கவலை” என்கிறார் சிக்ரி.
“இது ராணுவ உறவு மட்டுமல்ல. வங்கதேச சுதந்திரப் போரின் போது பாகிஸ்தானை ஆதரித்த ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற பங்களாதேஷ் இஸ்லாமியக் கட்சிகளுடனும் பாகிஸ்தானுடன் உறவுகளை புதுப்பிக்கின்றன,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
மூத்த ஐஎஸ்ஐ அதிகாரிகள் டாக்காவுக்குச் சென்றதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை யூனுஸ் நிர்வாகத்தின் பத்திரிகை அலுவலகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
வங்கதேசத்தில் உள்ள இந்திய கிளர்ச்சிக் குழுவின் முகாமை மீண்டும் திறக்க பாகிஸ்தான் செயற்பாட்டாளர்கள் பணியாற்றி வருவதாகக் கூறப்படும் செய்திகள் “அடிப்படையற்றவை” என்றும் அது கூறியுள்ளது.
வங்கதேசத்தில் ஐஎஸ்ஐயின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய இந்தியாவின் கவலைகள் குறித்தான பிபிசியின் கேள்விகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலளிக்கவில்லை.
அதேபோல், நெருங்கிய பொருளாதார மற்றும் மொழியியல் உறவுகளைக் கருத்தில் கொண்டு, வங்கதேசம் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்பதை வங்கதேச அரசியல்வாதிகள் அறிந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1971 போரில் நடந்தது என்ன?
இதுகுறித்து இந்தியாவில் அச்சம் இருந்தபோதிலும், 1971 போர் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை பாகிஸ்தானுடனான உறவுகளை இயல்பாக்க முடியாது என்று வங்கதேச தூதர்கள் வாதிடுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
போரின் போது, வங்கதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர்.
90,000 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள் இந்திய – வங்கதேச கூட்டுப் படையிடம் சரணடைந்தனர். பாகிஸ்தானில் ஒரு அவமானகரமான அத்தியாயமாகப் பார்க்கப்படும் இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது.
போரின் போது நடந்த அட்டூழியங்களுக்கு பாகிஸ்தான் முறையான மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வங்கதேசம் கோரியுள்ளது, ஆனால் பாகிஸ்தான் அவ்வாறு செய்ய விருப்பம் காட்டவில்லை.
“சுதந்திரப் போரின் போது நடந்த குற்றங்களை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், 1971 க்கு முந்தைய சொத்துகளை இரு நாடுகளுக்கும் இடையே பிரிப்பது பற்றிய விஷயத்தையும் பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு சந்திப்புகள் பலவற்றில் நாங்கள் எழுப்பியுள்ளோம்”என்று முன்னாள் வங்கதேச தூதர் கபீர் கூறினார்.
“1971ல் நடந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் மக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வங்கதேச மக்களின் தேவையே இருதரப்பு உறவுகளில் உள்ள முக்கிய முட்டுக்கட்டை” என்பதை இக்ராம் சேகல் போன்ற முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள்.
எனினும், வங்கதேச சுதந்திரப் போராட்டத்தின் போது உருது பேசும் மக்கள் மீது நடத்திய தாக்குதல்களையும் வங்கதேசம் கவனத்தில் கொண்டு தீர்க்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் வலியுறுத்துகிறார்.
“(கிழக்கு பாகிஸ்தானில்) உருது பேசிய மக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளுக்கு நான் சாட்சியாக இருந்தேன்” என்று தற்போது கராச்சியில் வசிக்கும் சேகல் பிபிசியிடம் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
வல்லுநர்கள் கூறுவது என்ன?
வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளின் மீது கடந்த கால வரலாறு நிழலாடினாலும், இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதில் முதலில் கவனம் செலுத்தலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருதரப்பு வர்த்தகம் தற்போது 700 மில்லியன் டாலருக்கும் (540 மில்லியன் யூரோவுக்கும்) குறைவாக உள்ளது.
அது பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளது.
“பாகிஸ்தானின் 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை, நீண்ட காலத்துக்கு வங்கதேசத்துக்கு ஒரு நிலையான சந்தையாக இருக்கும்,” என்கிறார் டெலாவர் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்தின் இணைப் பேராசிரியரான சப்ரின் பெக்.
தற்போது, இரு தரப்பிலும் அதிக சுங்க வரிகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.
வணிகங்களும் ஏற்றுமதியாளர்களும் விசா மற்றும் பயண தடைகளை எதிர்கொள்கின்றனர் என்று சப்ரின் பெக் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், “மேம்பட்ட இருதரப்பு அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் இந்த தடைகளை குறைக்கும்” என்று பெக் குறிப்பிடுகிறார்.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார் ஏப்ரல் மாதம் வங்கதேசத்துக்கு பயணம் செய்யும் போது இந்த விவகாரங்கள் சிலவற்றைக் குறித்து விவாதிக்கப்படலாம்.
இந்த ஆண்டின் இறுதியில் வங்கதேசம் பொதுத் தேர்தல்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய அரசாங்கம் வெளியுறவுக் கொள்கைகளில் வேறுபட்ட முன்னுரிமைகளைக் கொண்டிருக்கலாம்.
ஆனால், என்ன நடந்தாலும், இந்தியாவின் பங்கு அதிகமாக உள்ளது.
ஏனென்றால் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு, ஒரு நிலையான மற்றும் நட்புறவுடன் உள்ள வங்கதேசம் அவசியம் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு