சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் கிழக்கு வங்கக் கடலில் நேற்று (அக். 25) காலை நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி உள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து, வடக்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து 28ம் தேதி காலை தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். மேலும், வடக்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப் புயலாக 28ம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கக்கூடும்.
அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வரையிலும் இடையடையே 110 கிலோ மீட்டர் வரையிலும் வீசக்கூடும். இந்த புயலுக்கு மோந்தா என பெயரிடப்பட்டுள்ளது.
இதேபோல், நேற்று தென் கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு திசையிலும் பிறகு, தெற்கு – தென்மேற்கு திசையிலும் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளைக் கடக்கும்.
மழைக்கான வாய்ப்பு: தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27ம் தேதி: நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
28ம் தேதி: வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று முதல் வரும் 30ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.