பட மூலாதாரம், Getty Images and UGC
-
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
‘வீட்டு மின்சார கட்டணமாக 1.61 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்’ என்று செப்டம்பர் 3-ஆம் தேதி வந்த குறுந்தகவலால் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது.
‘மனித தவறு காரணமாகவே அதீத மின் கட்டணம் பதிவாகிவிட்டது. தற்போது பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது’ என, நெல்லை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
நெல்லை கூலித் தொழிலாளி வீட்டில் மின்சாரத்தை அளவிடுகையில் தவறு எவ்வாறு நடந்தது? இதுபோன்ற சிக்கல் வரும் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் வீட்டுக்கு வரும் மின்சார கட்டணம் அசாதாரணமாக உங்களுக்குத் தோன்றினால் உடனே செய்ய வேண்டியது என்ன?
நெல்லை சம்பவம்
திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி மின்வாரிய கோட்டத்தின் கீழ் வரும் மருதகுளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷெபா. கூலி தொழிலாளியான கணவர் மாரியப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, 3 குழந்தைகளுடன் ஷெபா வசித்து வருகிறார். அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி மின்சார கட்டணம் தொடர்பாக குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
அதில், ‘மின் கட்டணமாக ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 ரூபாய் செலுத்த வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷெபா, உறவினர்கள் மூலம் மூலக்கரைப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, தொழில்நுட்ப கோளாறு மற்றும் மனித தவறு காரணமாக அதிகப்படியான மின்கட்டணம் வந்திருந்ததைக் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, மின்அளவீட்டில் திருத்தம் செய்து மாரியப்பனின் வீட்டுக்கு மின் கட்டணமாக 494 ரூபாய் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
“மாரியப்பன் இறந்துவிட்டதால் அவரது மனைவி தான் குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்தக் கட்டணத்தால் அவருக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது. மறுநாளே (செப்டம்பர் 4) பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது” என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.
தவறு நேர்ந்தது எங்கே?
“மின் கட்டணமாக 1.61 கோடி ரூபாயைக் காட்டும் அளவுக்கு என்ன நடந்தது?” என திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் கேட்டது.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அதிகாரி, “மின் கணக்கீட்டுக்கு ஊழியர் செல்லும்போது செல்போனில் லொகேஷனை ஆன் செய்ய வேண்டும். பிறகு மின்வாரியத்தின் பிரத்யேக செயலியில் நுகர்வோர் எண்ணைப் பதிவிட வேண்டும். அப்போது நுகர்வோரின் மின்பயன்பாட்டு விவரங்கள் காட்டப்படும்” எனக் கூறுகிறார்.
“மின் நுகர்வு அலகை (unit) செயலியில் பதிவிட வேண்டும். மாரியப்பனின் வீட்டு மின் கணக்கீட்டில் 1409.00 யூனிட் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இரண்டு பூஜ்ஜியங்களையும் சேர்த்து காட்டியதால் பிரச்னை ஏற்பட்டுவிட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் மின் யூனிட்டுகளை மாரியப்பன் குடும்பத்தினர் பயன்படுத்தியதாகக் காட்டப்பட்டு விட்டதாகக் கூறும் அதிகாரி, “மேற்பார்வை பொறியாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது.” எனவும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
‘பூட்டிய வீட்டுக்கு 7 லட்சம் கட்டணம்’
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் மலர் வியாபாரம் செய்து வரும் முருகேசனுக்கு கடந்த ஜனவரி மாதம் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. குல்லிசெட்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரத்தில் இவருக்கு வீடு உள்ளது.
கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் இவரது வீடு பூட்டிக் கிடந்துள்ளது. உறவினர் ஒருவர் மட்டும் அவ்வப்போது பராமரிப்புக்கு சென்று வந்துள்ளார். ஆனால், கடந்த ஜனவரி மாதம் அவரது வீட்டுக்கு மின் கட்டணமாக 7 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது.
வழக்கமாக, தனது வீட்டுக்கு சராசரியாக 120 ரூபாய் வரை மின்கட்டணத்தை அவர் செலுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக ராமராஜபுரம் மின் பகிர்மான கழகத்தில் புகார் மனு ஒன்றையும் முருகேசன் அளித்துள்ளார். அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அளவீடு செய்யும்போது கூடுதலாக 64 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை பயன்படுத்திவிட்டதாக தவறுதலாக சேர்த்துவிட்டது தெரியவந்துள்ளது.
மின்வாரிய தலைவர் கூறியது என்ன?
திருநெல்வேலி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது.
“நான்கு நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் கவனத்துக்கு வந்தது. ஆய்வு செய்தபோது 494 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் எனத் தெரியவந்தது. வழக்கத்துக்கு மாறாக, அசாதாரணமாக மின்சார கட்டணம் வந்தால் அதை கணினி மென்பொருளில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்” எனக் கூறுகிறார்.
பட மூலாதாரம், FB/Radhakrishnan
“ஆளே இல்லா வீடுகளில் தவறாக மின் கணக்கீடு செய்யப்பட்டதாக அறிய வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.
“தமிழ்நாடு முழுவதும் 3.46 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதுபோன்ற பிரச்னைகள் வருவது என்பது மிகமிக அரிதானது. மின் கட்டணத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக கட்டணம் வந்து அதற்குரிய காரணங்கள் இல்லாமல் இருந்தால் அவை நீக்கப்பட்டுவிடும்” எனவும் அவர் பதில் அளித்தார்.
‘ஊழியர் பற்றாக்குறையே காரணம்’
ஊழியர் பற்றாக்குறை காரணமாகவே இதுபோன்ற தவறுகள் நடப்பதாகக் கூறுகிறார், மத்திய மின் ஊழியர் அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் ஜெய்சங்கர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மின்வாரியத்தில் சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மின் கணக்கீட்டாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று மின் அளவீடு செய்வதில் சிக்கல் உள்ளது. அதன் காரணமாக மின் பயன்பாட்டை அளவிட பல இடங்களில் அவுட்சோர்ஸிங் முறை கடைபிடிக்கப்படுகிறது. ” என்றார்.
ஊழியர் பற்றாக்குறை குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, “மின்வாரியத்தில் 400 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1800 பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கணக்கீட்டாளர்களை நிரப்புமாறு கூறியுள்ளோம். படிப்படியாக ஆட்களை எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன” என்று பதில் அளித்தார்.
தவறு எவ்வாறு நடக்கிறது?
பிபிசி தமிழிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய அதிகாரி, மின் கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்தார்.
“முன்புபோல எதையும் அட்டையில் எழுதுவது இல்லை. நுகர்வோர் செல்போன் எண்ணை பதிவேற்றி வைத்திருப்பதால் நுகர்வோருக்கு குறுந்தகவல் சென்றுவிடுகிறது. அனைத்தும் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மின் கணக்கீட்டுக்குச் செல்லும் ஊழியர், தனது செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்வாரிய செயலியைப் பயன்படுத்துகிறார். அப்போது ஏதாவது அழைப்பு வந்தால் கணக்கிடுவதில் சிரமம் ஏற்படுகிறது” என்றார் அவர்.
பட மூலாதாரம், UGC
“கணக்கீட்டுக்கு செல்லும் நபரின் செல்போன் முகப்பில் (screen) பழுது இருந்தாலும் தட்டச்சு செய்வதில் தவறு ஏற்படுகிறது” எனக் கூறிய அந்த அதிகாரி, “மாறாக, தனியாக சிம் கார்டு பொருத்தப்பட்ட செல்போன்களை பிரத்யேகமாக வழங்கினால் இதுபோன்ற தவறுகளைக் களைய முடியும்” என்றார்.
தீர்வு என்ன?
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நுகர்வோர் நலன் காக்கும் வகையில் சில சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி,
- வழக்கத்துக்கு மாறாக அதிக கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தகவல் வந்தால் TANGEDCO என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், நுகர்வோர் மின் இணைப்புக்கான 10 இலக்க எண்ணைப் பதிவிட வேண்டும்.
- செயலியில் புகார் தெரிவிப்பதற்கு முன்பு கட்டண விவரம், நுகர்வோர் எண் ஆகியவற்றைத் தயாராக வைத்திருத்தல் அவசியம்.
- மின்வாரியத்தின் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை எண்ணான 1912 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
- மின்தடை, மின் கட்டண பிரச்னை, மின் விபத்துகள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ‘மின்னகம்’ என்ற சேவை மையம் செயல்படுகிறது. இதற்கென பிரத்யேகமாக 94987 94987 என்ற குறைதீர் எண் உள்ளது.
- மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணிநேர சேவை மையமாக மின்னகம் செயல்படுகிறது.
- மின்னகத்தில் மின்சாரம் சார்ந்த 37 விதமான புகார்களைப் பதிவு செய்யலாம் என, கடந்த ஜூன் மாதம் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மின்னகத்தில் அளிக்கப்பட்ட 34,32,084 புகார்களில் 34,24,677 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும், செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம்” எனக் கூறுகிறார், மத்திய மின் ஊழியர் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர்.
“ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நுகர்வோர் குறைதீர் கமிட்டி ஒன்று செயல்படுகிறது. அங்கு கட்டணம் தொடர்பாக புகார் கொடுத்தால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.
“சில புகார்களில் கட்டணத்தின் அளவைப் பார்த்த உடனே தவறு நடந்திருப்பது தெரிந்துவிடும்” எனக் கூறும் ஜெய்சங்கர், “புகாரின் அடிப்படையில் அதனை கணினியில் சரிசெய்துவிடுகின்றனர். நேரடியாக மின்வாரியத்தின் உயர் அதிகாரிகளுக்கு இ-மெயில் மூலமும் புகார் அளிக்கலாம்” எனவும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு