பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) பற்றாக்குறை காரணமாக சிறப்பு ரயில்கள் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டதாக ரயில் பயணிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ரயில் ஓட்டுநர்கள் முறையாக நியமனம் செய்யப்படாததால் தற்போதுள்ள ரயில் ஓட்டுநர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக அகில இந்திய லோகோ தொழிலாளர் சங்கத்தினர் (AILRSA) கூறுகின்றனர்.
ஆனால், “போதிய ரயில் ஓட்டுநர்கள் பணியில் உள்ளதால் தினசரி ரயில்கள் தங்கு தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது. அதை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று ரயில்வே துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் நிறுத்தம்?
நெல்லையிலிருந்து தென்காசி மதுரை வழியாகவும் சிவகங்கை வழியாகவும் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், நெல்லை – மேட்டுப்பாளையம், நெல்லை – தாம்பரம், நெல்லை – எழும்பூர் ஆகிய சிறப்பு ரயில்கள் பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இந்தச் சிறப்பு ரயில்கள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் தைப்பூசத்திற்கு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படாத நிலையில் அடுத்து வரும் மாசி பெருந்திருவிழா, கோடை விடுமுறை ஆகியவற்றுக்கும் சிறப்பு ரயில்களை இயக்குவது சந்தேகம் என ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதோடு, சரக்குப் போக்குவரத்தில் வரும் மார்ச் 31 வரை ரயில்வே வாரியத்தில் இருந்து இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத நிலைக்கு மதுரை ரயில்வே கோட்டம் தள்ளப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) மற்றும் ரயில் கார்டுகள் பற்றாக்குறை காரணமாக ரயில்கள் இயக்கத்தில் கடும் சிக்கல் நிலவுவதாக ரயில் பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல்லை – சென்னை இடையே மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை அகல ரயில் பாதை பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மேலும் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு நெல்லை ரயில் நிலையத்தில் போதுமான ரயில்கள் உள்ளன. ஆனால் ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாகக் கூடுதல் ரயில்களை இயக்க முடியாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே கூடுதல் ரயில் ஓட்டுநர்கள் மற்றும் கார்டுகளை உடனடியாக நியமனம் செய்து சிறப்பு ரயில்களை தொடர்ந்து இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே பயனாளிகள் ஆலோசனைக்குழு சொல்வது என்ன?
பட மூலாதாரம், Getty Images
ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) பற்றாக்குறை காரணமாக நெல்லையில் இருந்து இயக்கப்படும் மூன்று சிறப்பு வாராந்திர ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார் தெற்கு ரயில்வே பயனாளிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜன்.
இதுகுறித்துப் பேசியவர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்காசி, மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்த நெல்லை-மேட்டுப்பாளையம், நெல்லை-தாம்பரம், நெல்லை-எழும்பூர் ஆகிய மூன்று சிறப்பு வாராந்திர ரயில்கள் இரண்டு வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
மேலும், ரயில் நிறுத்தப்பட்டதற்குப் போதிய ரயில் ஓட்டுநர்கள் இல்லாததே காரணம் என ரயில் பயணிகள் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
அதுகுறித்துப் பேசிய பாண்டியராஜன், “விசாரித்த வரை நெல்லை, செங்கோட்டை உள்ளிட்ட டெப்போக்களில் அத்தியாவசியமான தொழிலாளர்களில் (லோகோ பைலட், துணை லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், கார்டு, சிக்னல் கன்ட்ரோலர் அடங்கிய குழு) பற்றாக்குறை இருப்பதாகத் தெரிய வந்தது. இந்தப் பற்றாக்குறை வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சரி செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.
அதோடு, ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக சரக்கு ரயில்கள் ஆங்காங்கே ரயில் ஓட்டுநர் இல்லாமல் நிறுத்தப்பட்டதால் அதைச் சரி செய்வதற்குப் பயணிகள் ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் அங்கு மாற்றப்பட்டுள்ளதே, இந்தப் பற்றாக்குறை ஏற்படக் காரணம் எனவும், தென் மாவட்டங்களில் 50 ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் பாண்டியராஜன் தெரிவிக்கிறார்.
ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை குறித்து ரயில் ஓட்டுநர்கள் சங்கம் மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்கிறார் அவர். ஆனால், சங்கத்தினர் ஆரம்பத்தில் இருந்தே அமைதியாக இருந்ததால் தற்போது ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை அதிகரித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
சிறப்பு ரயில்கள் நிறுத்தப்படக் காரணம், மேட்டுப்பாளையம் நெல்லை இடையே ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததே என்று ரயில்வே துறை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் பாண்டியராஜன்.
“ஏனெனில், ஞாயிற்றுக்கிழமை ரயில் இயக்கப்படுவதால் இந்தச் சிறப்பு ரயிலுக்கு பயணிகள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. இந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் இந்த ரயிலை பயன்படுத்தும் பயணிகள் மாற்று ரயிலில் செல்கின்றனர். இதனால் அவற்றில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.”
ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக ரயில் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், ரயில்வே துறை உடனடியாக ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை விஷயத்தில் கவனம் செலுத்தி, சரி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார் பாண்டியராஜன்.
இதன்மூலம், ரயில் பயணிகளுக்குத் தேவையான சிறப்பு வாராந்திர ரயில்கள் மற்றும் விழாக்கால சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
‘பணிச்சுமையால் மனித தவறுகள் நடக்க அதிக வாய்ப்பு’
கடந்த சில ஆண்டுகளாக ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) முறையாக நியமிக்கப்படாததால் 20,000 ரயில் ஓட்டுநர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தப் பற்றாகுறையால் பணியில் உள்ள ஓட்டுநர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து கடும் மன அழுத்தத்துடன் வேலை செய்து வருவதாகக் கூறுகிறார் அகில இந்திய லோகோ தொழிலாளர்கள் சங்கத்தின் இணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்திய ரயில்வே துறையில் 2018ஆம் ஆண்டில் இருந்து முறையாக ரயில் ஓட்டுநர்களை நியமிக்காததால் பல ஆயிரம் ரயில் ஓட்டுநர் (லோகோ பைலட்) பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போதுள்ள ரயில் ஓட்டுநர்கள் 14 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்வதற்கு நிர்பந்திக்கப்படுகிறோம்.
ரயில் ஓட்டுநர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய ரயில்வே துறை சார்பில் 5 ஆயிரம் பேரை நியமிப்பதாக அறிவிப்பு வெளியானது. 14 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் 5 ஆயிரம் பேருக்கு மட்டும் அறிவிப்பு வெளியானதையடுத்து ஓட்டுநர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஜூலை 4ஆம் தேதி 15 ஆயிரம் பேருக்கு அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கான தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை,” என்றார்.
மேலும், ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் வாராந்திர சிறப்பு ரயில்கள் மற்றும் விழாக்கால சிறப்பு ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படுவதாகக் கூறுகிறார் அவர். அதையும் மீறி ரயில்கள் இயக்கப்படும்போது தற்போது பணிபுரியும் ஓட்டுநர்கள் சுமார் நான்கு இரவுகள் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
“சமீபத்தில் ரயில்வே வாரியம் நடத்திய ஆய்வில் 92 சம்பவங்களின் அடிப்படையில் ரயில் ஓட்டுநர்கள் நான்கு இரவுகள் தொடர்ந்து வேலை செய்தது தெரிய வந்துள்ளது. தொடர் இரவு பணியால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது, மனிதத் தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இரவுநேர தொடர் பணிகளைக் கொடுக்க வேண்டாம் என ரயில்வே அமைச்சகத்திற்கு ரயில் வாரியம் கடிதம் எழுதியது.
ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து 36 மணிநேரம் பணி செய்வதைக் கண்டித்து இந்தியா முழுவதும் பணியில் உள்ள ரயில் ஓட்டுநர்கள் மற்றும் பணியில் இல்லாமல் ஓய்விலுள்ள ரயில் ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 36 மணிநேரம் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,” என்றார் பார்த்தசாரதி.
மேலும், “நாடாளுமன்றத்தில் ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை தொடர்பாகக் கேள்வி எழுப்பினால் உரிய பதில் அளிப்பதில்லை. ஒருவேளை நிதிச் சுமையைக் குறைப்பதற்காக ரயில் ஓட்டுநர்களை நியமனம் செய்யாமல் ரயில்வே துறை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. விடுமுறை அளிக்காமல் தொடர்ந்து பணி செய்வதால் ரயில் ஓட்டுநர்களுக்கு வாராந்திர விடுமுறை கிடைப்பதில்லை. அவசரத் தேவைக்கும் விடுப்பு எடுக்க முடியவில்லை,” என்று குற்றம் சாட்டுகிறார் அவர்.
ரயில் ஓட்டுநர்கள் தொடர்ந்து பணி செய்வது தொடர்பாக டிவிஷனல் லேபர் கமிஷனிடம் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ரயில் ஓட்டுநர்களுக்கு உரிய விடுப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், ஆனால் இதுவரை அந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை எனவும் குறிப்பிடுகிறார் பார்த்தசாரதி.
கடந்த ஜூன் 1ஆம் தேதி 46 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது ரயில்வே துறை நடவடிக்கை எடுத்ததாகவும், இது தொடர்பாக இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை அந்த கமிட்டி பயனற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதோடு, “ரயில் ஓட்டுநர்கள் மிகுந்த மன உளைச்சலுடன் ஓய்வில்லாமல் பயணிக்கிறோம். தூக்கமின்மை மற்றும் உடல்நலம் பாதிப்பால் மனிதத் தவறுகள் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறையை உடனடியாகச் சரி செய்ய அரசு முன்வர வேண்டும்” எனவும் பார்த்தசாரதி கோரிக்கை வைத்துள்ளார்.
ரயில்வே துறை விளக்கம்
போதிய ரயில் ஓட்டுநர்கள் பணியில் இருப்பதால் தினசரி ரயில் சேவை பாதிக்கப்படாமல் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார் தென்னக ரயில்வே மதுரை கோட்ட செய்தித் தொடர்பாளர் கோபிநாத்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசிய அவர், “வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் சீசன் இல்லாததால் பயணிகள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை. அதுவே அந்த ரயில்கள் மட்டும் நிறுத்தப்படக் காரணம்” என்று தெரிவித்தார்.
மேலும், ரயில் ஓட்டுநர்கள் தேவைக்கு ஏற்ப உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் துணை லோகோ பைலட்களுக்கான தேவை உள்ளதாகவும் கூறிய அவர், அதைச் சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
மேற்கொண்டு பேசிய அவர், “தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதே போல் சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனால்தான் தானியங்கள், உணவுப் பொருட்கள், நிலக்கரி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி ரயிலில் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
சில நேரங்களில் துணை லோகோ பைலட்கள் விடுப்பில் சென்று விடுவதால் லோகோ பைலட்களுக்கு விடுமுறை அளிக்க முடியாத நிலை இருக்கிறது. இதனால்தான் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார்.
“இரவு நேரங்களில் கூடுதலாகப் பணி செய்யும் மற்றும் பணி நேரத்தைவிடக் கூடுதலாகச் சேவையாற்றும் லோகோ பைலட்களுக்கு, அதற்கு ஏற்றவாறு ரயில்வே துறை கூடுதலாகப் பணம் வழங்கி வருகிறது. அவ்வப்போது ஏற்படும் பற்றாக்குறையின்போது ரயில் சேவை பாதிக்காமல் இருக்க ரயில் ஓட்டுநர்கள் கூடுதலாகப் பணியாற்றுவது பாராட்டுக்குரியது.
துணை லோகோ பைலட்கள் சிலர் பயிற்சியில் உள்ளனர், ஓட்டுநர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி மற்றும் மருத்துவப் பரிசோதனை முடிவுக்காகச் சிலர் காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பணிக்கு வந்துவிட்டால் பற்றாக்குறை ஏற்படாது, அதற்கு ரயில்வே துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.” என்கிறார் கோபிநாத்.
கொரோனா பேரிடருக்குப் பிறகு ரயில் ஓட்டுநர்களுக்கான தேர்வு நடைபெற்றுப் பல புதிய ரயில் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தென்னக ரயில்வே மதுரை கோட்ட செய்தித் தொடர்பாளர் கோபிநாத் குறிப்பிட்டார்.
மேலும், “இரவு நேரங்களில் தொடர்ந்து பணியில் இருக்கும் ரயில் ஓட்டுநர்களை தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் நேரடியாகக் கண்காணித்து வருகிறார். இவ்வாறு பணி செய்யும் ஓட்டுநர்கள் தொடர்பாக தினசரி டெல்லி அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி தொடர் பணி செய்யும் ஓட்டுநர்களுக்குத் தேவையான உடல் பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகின்றன.
ரயில் ஓட்டுநர்கள் யாருக்கும் நான்கு இரவுகள் தொடர் பணி வழங்கப்படுவதில்லை, தொடர் பணி வழங்கப்பட்டால் சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்படும். அதாவது ஒரு லோகோ பைலட் 8 மணிநேரம் தொடர்ந்து பணி செய்தால் அவருக்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் நல்ல ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது,” என்று குறிப்பிட்டார் அவர்.
மேலும், “ரயில் ஓட்டுநர்களுக்கு பணிச்சுமை இருப்பதாகத் தெரியவில்லை, இருப்பினும் ரயில் ஓட்டுநர்கள் கோரிக்கையை ஏற்று பற்றாக்குறையைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தென்னக ரயில்வே மதுரை கோட்ட செய்தி தொடர்பாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு