• Sat. May 10th, 2025

24×7 Live News

Apdin News

“நெல்லை நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | The library to be built in Nellai will be named after Qaide Millat – CM Stalin

Byadmin

May 9, 2025


திருச்சி: “திருநெல்வேலியில் அமைக்கப்படும் நூலகத்துக்கு காயித மில்லத் பெயர் சூட்டப்படும். சென்னைப் பல்கலைக் கழகத்தில், இசுலாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும்” என்று திருச்சியில் நடந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 9) திருச்சி எம்ஐஇடி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு தொடக்க விழாவில் பேசியது: “கடந்த நான்காண்டுகளில், சிறுபான்மையின மக்களுடைய சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்காக ஏராளமான திட்டங்களை, சாதனைகளை படைத்திருக்கிறோம். அண்மையில்கூட, நங்கநல்லூரில் ‘தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ கட்டப்படும் என்று அறிவித்தேன். பலரும் என்னிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

இதேபோல், நம்முடைய திராவிட மாடல் அரசில் ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து, இசுலாமிய மக்களின் உரிமைகளை காக்க குரல் கொடுத்து வரக்கூடிய இயக்கம் தான் திமுக. அதே நம்பிக்கையுடன் தான் நீங்களும் சில கோரிக்கைகளை இந்த மாநாட்டு மூலமாக, தீர்மானங்களாக வடித்தெடுத்து சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் என்னுடைய கவனத்துக்கு வந்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் சட்டமன்றத்தில் நான் அறிவித்திருக்கிறேன். அந்த நூலகத்திற்கு கண்ணியத்திற்குரிய காயித மில்லத் பெயர் சூட்டப்படும். சென்னைப் பல்கலைக் கழகத்தில், இசுலாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கையை தமிழக அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இந்த கோரிக்கையை ஏற்று இதை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

1973-ல் இருந்து இதுவரைக்கும் எட்டு மாநாடுகள் நடத்தி, முடித்து, இப்போது ஒன்பதாவது மாநாட்டை நான் தொடங்கி வைத்திருக்கிறேன். மறைந்த முதல்வர் கருணாநிதி முத்தமிழ் வித்தகர். ஆனால், நான், முத்தமிழின் சுவையையும் ரசிக்கக்கூடியவன் நான், ஒரு ரசிகனாக இருக்கக்கூடியவன் நான். நான் பெரிதும் ரசித்த, கவிக்கோ அப்துல் ரகுமானின் பெயரை இந்த அரங்கத்திற்கு சூட்டியிருக்கிறீர்கள். அவர் மறையவில்லை. தன்னுடைய தமிழ்க் கவிதைகளால் என்றைக்கும் நம்மோடு வாழ்ந்துகொண்டு இருப்பார் என்பதற்கு அடையாளம்தான் இது.

கவிக்கோ என்றதும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னதுதான் எனக்கு நியாபகத்துக்கு வருகிறது, “வெகுமானம் எதுவேண்டும் என்று கேட்டால், அப்துல் ரகுமானை தான் கேட்பேன்” என்று கருணாநிதி சொன்னார். இதைவிட பெரிய பாராட்டு நிச்சயமாக இருக்க முடியாது. அப்படிப்பட்ட கவிக்கோ அப்துல் ரகுமானின் நூல்களைதான், சில நாட்களுக்கு முன்னால், நாட்டுடைமையாக்கி, அவரது குடும்பத்திற்கு, பத்து லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறோம். அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டிருக்கிறோம்.

அதேபோல், திமுகவினருடைய நெஞ்சிலும் தினமும் ஒலித்துகொண்டு இருக்கும் குரலுக்குச் சொந்தக்காரர், ‘இசைமுரசு’ நாகூர் ஹனிபா. அவரது நூற்றாண்டு பிறந்தநாளையும், அறிவியல் தமிழ் அறிஞரான மணவை முஸ்தபா பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டிருக்கிறோம். இப்படி, “இசுலாம் எங்கள் வழி – இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்று வாழ்ந்த பெருமக்கள் தமிழ்நாட்டில் அதிகம்.

சிந்தையள்ளும் ‘சீறாபுராணம்’ தந்த உமறுப்புலவர், புலவர்களுக்கு கொடுப்பதையே கடமையாக கருதிய வள்ளல் சீதக்காதி, செய்குத் தம்பி பாவலர், குணங்குடி மஸ்தான் சாகிபு, கவி கா.மு.ஷெரீப், நீதிபதி எம்.எம்.இஸ்மாயில், இப்படி பல்வேறு இசுலாமிய இலக்கியப் பெருமக்கள் தமிழுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு என்று 9 நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது.

‘இணைப்பே இலக்கியம்’ என்பதை இந்த மாநாட்டின் நோக்கமாக வைத்திருக்கிறீர்கள். இந்தக் காலத்திற்கு தேவையான இணைப்புதான். இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இதயங்களுக்கும் தேவையான இணைப்புதான். இப்படிப்பட்ட இணைப்பை, இலக்கியங்களும் இதுபோன்ற இலக்கிய மாநாடுகள் உருவாக்கவேண்டும். நிச்சயம் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



By admin