நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதத்தில் பெய்த தொடர் மழையால் 51.26 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை கணக்கிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாளையங்கோட்டை வெள்ளக்கோயில் உட்பட பல்வேறு இடங்களில் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரில் கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. அவ்வாறு தண்ணீரில் சாய்ந்துள்ள நெற்பயிர்களில் நெல் மணிகள் முளைவிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, பயிர் சேத விவரங்கள் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறையினரால் கூட்டுபுல தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் கார் சாகுபடி செய்யப்பட்ட, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாளையங்கோட்டை வட்டாரத்தில் 24 ஹெக்டேர், களக்காடு வட்டாரத்தில் 10.8 ஹெக்டேர், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 0.2 ஹெக்டேர், மானூர் வட்டாரத்தில் 1 ஹெக்டேர் மற்றும் வள்ளியூர் வட்டாரத்தில் 15.26 ஹெக்டேர் என, மொத்தம் 51.26 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இதனால் 80-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். மேலும், அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி வட்டத்தில் 42.85 ஹெக்டேரில் வாழை சேதமடைந்துள்ளது. சேத விவர அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கன மழையின்போது நெல் வயல்களில் மழைநீர் தேங்கும்பட்சத்தில் உடனடியாக வடிகால் வசதியை ஏற்படுத்தி நீரினை வெளியேற்றி காற்றோட்டம் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
அதிக மழை: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 14.80 மி.மீ மழை பெய்துள்ளது. இது மாவட்டத்தின் வளமையான மழையளவான 30.20 மி.மீ-ஐ விட 50.99 சதவீதம் குறைவாகும். அதேநேரத்தில் நடப்பு அக்டோபர் மாதத்தில் கடந்த 23-ம் தேதி வரை 198.95 மி.மீ மழை பெய்துள்ளது. இது இம்மாத வளமான மழையளவான 166 மி.மீ-ஐ விட 19.85 சதவீதம் அதிகமாகும்.
மாவட்டத்தில் நடப்பாண்டு இதுவரை 25,198 ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வளமான மழையளவு மற்றும் அணைகளில் நீர்திறப்பு ஆகியவற்றால் சென்ற ஆண்டை ஒப்பிடும் பொழுது நடப்பாண்டு 498 ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.
மேலும், 2025 கார் பருவத்தில் விளைந்த நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய 37 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டு, தற்போது வரை 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 21177.92 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.