தஞ்சாவூர்/ திருவாரூர்: ‘‘நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது’’ என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டுவந்து குவித்துள்ளனர். லாரிகள் போதிய அளவு இல்லாததால், கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.
அவ்வப்போது மழை பெய்வதால், நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 2 நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் நெல் கொள்முதல் நடைபெறவில்லை. இதற்கிடையே, தொடர்மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்களையும், இளம் சம்பா நெற்பயிர்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி நேற்று தஞ்சாவூர் வந்தார். பின்னர், காட்டூர், மூர்த்தியம்பாள்புரம் ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் மழை பாதிப்புகள், நெல் மூட்டைகளின் தேக்கம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2,000 மூட்டைகளை கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்தது. ஆனால், விவசாயிகளிடம் கேட்டபோது 800 மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு தவறான தகவலைக் கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. எனவே, டெல்டாவில் உள்ள விவசாயிகளுக்கு இந்த தீபாவளி ‘கண்ணீர் தீபாவளியாக’தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் அடிச்சேரி, செருமங்கலம் ஆகிய நெல் கொள்முதல் நிலையங்களிலும், சித்தனக்குடியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா சாகுபடி வயல்களையும் பழனிசாமி பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், திருவாரூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தலா 7,000 நெல் மூட்டைகள் வரை தேங்கியுள்ளன. அதேபோல, கொள்முதல் செய்யப்படாமல் 8,000 நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் 30 லட்சம் நெல் மூட்டை
கள் தேங்கியுள்ளன. இவற்றை விவசாயிகள் மழையில் நனைந்து விடாதபடி மூடிவைத்திருந்ததால், நெல்மணிகள் முளைவிட்டுள்ளன. பல குவியல்களில் நெல்மணிகள் அவிழ்ந்துவிட்டன.
கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகள் முறையாக வருவதில்லை என சுமைப் பணி தொழிலாளர்களும், டீசலுக்கு கூட பணம் கொடுப்பதில்லை என லாரி உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நாளொன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருந்ததை அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரம் மூட்டைகளாக உயர்த்தினோம். தற்போதைய திமுக ஆட்சியில் 2 ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் உண்மைக்கு மாறான தகவலை சட்டப்பேரவையிலேயே தெரிவிக்கிறார்.
ஆக.18-ம் தேதியே செறிவூட்டப்பட்ட அரிசிக்கு அனுமதியை மத்திய அரசு வழங்கிவிட்ட நிலையில், அந்தத் தகவலைக் கூட தெரிந்து கொள்ளாமல், “மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் அனுமதியை வாங்கித் தாருங்கள்” என சட்டப் பேரவையிலேயே தவறான தகவலை உணவுத் துறை அமைச்சர் பதிவு செய்கிறார்.
மேலும், ஆதார விலையை உயர்த்தி கொடுத்துவிட்டதாக தெரிவிக்கிறார். அதேநேரத்தில், உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பால், 2021-ம் ஆண்டு விவசாயிகளுக்கு கிடைத்த லாபம்தான் இன்றும் கிடைக்கும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள அறுவடை நெற்பயிர்களின் நிலை குறித்து உடனடியாக கணக்கெடுத்து, உரிய நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேலும், கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைவாககிடங்குக்கு கொண்டு செல்வதுடன், நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.