சென்னை: நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது. தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார். ஆனால் 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று என்னிடம் விவசாயிகள் கூறினர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை கப்பலூரில் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “விவசாயிகள் திறந்தவெளியில் குவித்து வைத்துள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது. தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார். ஆனால் 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று என்னிடம் விவசாயிகள் கூறினர். எங்கள் கண் எதிரிலேயே நெல் மூட்டைகள் முளைத்திருப்பதைப் பார்த்தேன்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை. திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மனமில்லை. விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாத ஆட்சி தான் திமுக ஆட்சி. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 42 அரை லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக ஒரு பச்சைப் பொய்யை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஒன்று சொன்னால், முதல்வர் ஒன்று சொல்கிறார். தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார். இதில் எது உண்மை. அதிமுக ஆட்சியில் மத்திய அரசு நிதி உதவியுடன் நெல் மூட்டைகளை பாதுகாத்தோம். சார் என்ற வார்த்தையை கேட்டாலே திமுகவுக்கு அலர்ஜிதான்.
அது எந்த சார் என்பதை நீங்களே முடிவு செய்து கோள்ளுங்கள். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளது. இறந்தவர்களின் பெயர்கள் கூட இன்னும் நீக்கவில்லை. நீதிமன்றம் மூலம் போலி வாக்காளர்களை நீக்கியுள்ளோம். வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்க்கட்சி தான் பயப்பட வேண்டும். ஆனால் திமுக ஏன் பயப்படுகிறது.
துரோகிகளால் தான் 2021 இல் அதிமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. எத்தனை துரோகிகள் மற்றும் எட்டப்பர்கள் வந்தாலும் அதிமுகவால் வீழ்த்த முடியும். பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மற்றும் தினகரன் ஆகியோர் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்கள். யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்ஐஆர் விவகாரத்தில் பிஹாரைப் பற்றி எனக்கு தெரியாது. தமிழகத்தை பற்றி தான் நான் பேசமுடியும். அதிமுக ஆட்சி அமைத்த பிறகுதான் எந்த மாநகராட்சியில், நகராட்சியில் ஊழல் நடந்துள்ளது என கண்டறிய முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.