• Thu. Jan 16th, 2025

24×7 Live News

Apdin News

நேசிப்பாயா | திரைவிமர்சனம்

Byadmin

Jan 16, 2025


தயாரிப்பு : எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ்

நடிகர்கள் : ஆகாஷ் முரளி, அதிதி சங்கர், சரத்குமார்,  குஷ்பூ, பிரபு,  ராஜா மற்றும் பலர்.

இயக்கம் : விஷ்ணுவர்தன்

மதிப்பீடு : 2.5 / 5

றைந்த நடிகர் முரளியின் இளைய வாரிசான ஆகாஷ் முரளி கதையின் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. ‘பில்லா’ படத்தை இயக்கிய முன்னணி நட்சத்திர இயக்குநரான விஷ்ணுவர்தன் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தின் வெளியீட்டிற்கு முன் பெரும் எதிர்பார்ப்பை படக்குழுவினர் உண்டாக்கி இருந்தார்கள். அதனை இந்த திரைப்படம் நிறைவேற்றியதா, இல்லையா என்பதை தொடர்ந்து காண்போம்.

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அர்ஜுன் (ஆகாஷ் முரளி) தற்செயலாக அவருடைய முன்னாள் காதலி தியா (அதிதி ஷங்கர்) போர்ச்சுக்கல் எனும் நாட்டில் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனையை அனுபவிக்கிறார் என கேள்விப்படுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ஜுன்.. தன் முன்னாள் (?) காதலியான தியாவை காப்பாற்றுவதற்காக போர்ச்சுகல் நாட்டிற்கு செல்கிறார். அங்கு அவரால் சிறையில் இருக்கும் தியாவை சந்திக்க முடிந்ததா? அவரின் இந்த நிலைக்கு காரணம் என்ன? அவர் உண்மையிலேயே கொலை செய்தாரா? இல்லையா? என்பதை எல்லாம் தெரிந்து அவரை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். இதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? அவருடைய காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தில் அர்ஜுனுக்கும், தியாவுக்கும் இடையேயான காதல் ஃப்ளாஷ் பேக்கில் விவரிக்கப்படுகிறது. அது வழக்கமானதாக இருந்தாலும் அதனுடைய காட்சியாக்கம் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. அதிலும் அர்ஜுன், தியாவை கண்டவுடன் காதலில் விழுவதும், காதலியின் மனதில் இடம் பிடிப்பதற்காக அவரை துரத்துவதும் வழக்கமான செல்லுலாய்ட் காதல் என்றாலும். இந்தக் காட்சிகளில் அறிமுக நாயகன் ஆகாஷ் முரளியை விட அதிதி சங்கர் ரசிகர்களின் கவனத்தை தன் இளமையான நடிப்பால் கவர்கிறார்.

சென்னையிலிருந்து போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்லும் அர்ஜுனுக்கு அங்கு தியாவின் சட்டத்தரணியாக இயங்கும் இந்திரா (கல்கி கொச்சலின்) எனும் பெண்மணி உதவுகிறார். சிறையில் இருக்கும் தியாவை அர்ஜுன் சந்திக்கும் காட்சிகள் உணர்வுபூர்வமாக இருக்கிறது. தியா மீது கொலை பழியை சுமத்தி இருக்கும் பின்னணியை அர்ஜுன் கண்டறிவது வழக்கமான கமர்சியல் சினிமா எலிமெண்ட்.

அர்ஜுனுக்கும் தியாவிற்கும் இடையே பிரேக்கப் நிகழும் இடமும், அதற்கான உரையாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்கிறது.

கடந்த தசாப்தங்களில் ஒரு நடிகரை திரையில் அறிமுகப்படுத்தும்போது அவருடைய முகம் வெகுஜன பாமர  மக்களின் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக மென்மையான அணுகுமுறை கொண்ட திரைக்கதையை தான் படைப்பாளிகள் கையாள்வார்கள். இதற்கு மறைந்த ஸ்ரீதர் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளே சான்று. அந்த வகையில் இன்றைய காலகட்டத்திய ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப ஆகாஷ் முரளி எனும் புது முகத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைப்பதற்காக வழக்கமான கமர்சியல் அம்சங்களுடன் கூடிய கதையை விஷ்ணுவர்தன் கையாண்டிருக்கிறார். இந்த விடயத்தில் விஷ்ணுவர்தனின் நோக்கம் வெற்றி பெறுகிறது. ஆகாஷ் முரளியின் திரை தோன்றல் இயல்பாக இருக்கிறது. எக்சன் காட்சிகளில் தன் கடின உழைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பதற்கான வாய்ப்புள்ள இடங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறார்.  அதனால் அவருடைய வரவு நல்வரவு என்று சொல்ல வேண்டும்.

நடிகர் ராஜா- நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றி, அதிலும் வில்லனாக தோன்றி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது.

படத்திற்கு வலிமை சேர்ப்பவர்கள் ஒளிப்பதிவாளர் கேரூன் எரிக் பைரிசன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்தக் கூட்டணி ரசிகர்களை படமாளிகையில் பார்வையாளர்களை இருக்கையில் அமர வைப்பதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ‘தொலைஞ்ச மனசு..’,  ‘யார்ரா இவ..’ இரண்டு பாடலும் ரசிகர்களின் ஃபேவரிட் ஆன பாடலாக மாறி இருக்கிறது.  பின்னணி இசையிலும் வழக்கம்போல் யுவன் சங்கர் ராஜா தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.

படத்தின் உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் சுவாரஸ்யமான திருப்பம் இது விஷ்ணுவர்தனின் படம் என்பதை நிரூபிக்கிறது.

நேசிப்பாயா – ஆசீர்வதிப்பாயா..!?

The post நேசிப்பாயா | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.

By admin