நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன், மழைதான் முதலில் கண்ணில் பட்டது.
மேகங்கள் மிகவும் தாழ்வாகவும் நெருக்கமாகவும் தெரிந்ததால், விமான நிலையத்தைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு அவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது போல் தோன்றியது.
ஜென் Z போராட்டங்களின் போது சேதமடையாமல் இருந்த ஒரே அரசு நிறுவனம், இந்த விமான நிலையம்தான் என்று சொல்லலாம்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன், ஒரு பெரிய புயல் கடந்த பின்பு நிலவும் அமைதியையைத்தான் உணர்ந்தோம்.
இடையில், எல்லாம் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்லும் விதமாக ராணுவ வாகனங்கள் சாலையில் தென்பட்டன.
முழு நகரத்திலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இரண்டு நாட்கள் நடந்த போராட்டங்களில் நேபாள அரசாங்கம் சரணடைந்துள்ளது.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தலைவர்கள் ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல், நேபாளம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் பல இடங்களில் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டது. அப்போது நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று சொன்னபோது, அவர்கள் எங்களை அனுமதித்தனர்.
என் அருகில் அமர்ந்திருந்த நேபாளத்தைச் சேர்ந்த ஒரு நண்பர், “ராணுவ ஆட்சியின் கீழ் உள்ள நேபாளத்திற்கு வருக” என்றார்.
குறிவைக்கப்பட்டுள்ள ஊடகங்கள்
‘ஜென் Z’ போராட்டத்தின் போது ஊடகங்களும் குறிவைக்கப்பட்டன. நேபாளத்தின் முன்னணி நாளிதழான காந்திபூரின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
போராட்டத்தின் போது, ரபி லாமிச்சானேவின் ஆதரவாளர்கள் அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். காத்மாண்டுவில் உள்ள நக்ஹூ சிறையிலிருந்து அவர் மட்டும் அல்ல, அங்கிருந்த பல கைதிகளும் வெளியே வந்தனர். நேபாளத்தின் பல சிறைகளிலிருந்தும் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
காத்மாண்டுவின் பனேஷ்வர் பகுதியில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து இன்னும் எரிந்த வாசனை வருகிறது.
இந்த நாடாளுமன்றம், நேபாளத்தில் 239 ஆண்டுகள் நீண்ட மன்னராட்சி முடிவுக்கு வந்ததற்கான அடையாளமாகவும், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் கதையைச் சொல்லும் சின்னமாகவும் இருந்து வந்தது. ஆனால் இன்று, அந்தக் கட்டடத்திலிருந்து புகை மட்டுமே எழுகிறது.
2008-ஆம் ஆண்டு நேபாள மக்கள் முடியாட்சியை ஒழித்தபோதும், நாராயண்ஹிட்டி அரச அரண்மனை தீக்கிரையாக்கப்படவில்லை. அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, வளாகத்தில் குடியரசு நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டது.
ஆனால் அதே நேபாள மக்கள், வெறும் 17 ஆண்டுகள் பழமையான ஜனநாயகத்தின் நாடாளுமன்றத்தைத் தீயிட்டு சிதைத்தனர்.
நாடாளுமன்ற சுவர்களில் தேவநாகரி எழுத்தில் கே.பி. ஒலி மற்றும் பிரசண்டாவை அவமதிக்கும் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
அந்த சுவர்களை பார்த்துக் கொண்டிருந்தபோது, நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர், ‘ராஜா மீதுகூட இத்தனை வெறுப்பு இல்லை’ என்றார்.
இந்திய ஊடகங்கள் மீது வெளிப்படும் கோபம்
சுமார் 48 வயதான தீபக் ஆச்சார்யா, தனது மகனுடன் எரிந்த நாடாளுமன்றக் கட்டடத்தின் வெளியே நின்றிருந்தார். நாங்கள் சில பெண்களிடம் பேச முயன்றபோது, அவர்கள் இந்தியைக் கேட்டவுடன் கோபமடைந்துவிட்டனர்.
அப்போது தீபக் ஆங்கிலத்தில்,’தயவுசெய்து நிறுத்துங்கள். இந்திய ஊடகங்களும் மோதி பிரசாரத்தின் ஓர் பகுதி’ என்று கூறினார்.
அவர் அதை மிக உரத்த குரலில் சொன்னதால், அருகிலிருந்தவர்கள் கூட எங்களை நோக்கிப் பார்க்கத் தொடங்கினர்.
தீபக்கின் கோபத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன், அவருடன் நீண்ட உரையாடலும் நடந்தது.
“இந்திய ஊடகங்கள் ஜனநாயகத்தையே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதோடு எங்களது ஜனநாயகத்தையும் சிதைக்கின்றன. யார் பிரதமராக வேண்டும் என்பதை நேபாள மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனால் இந்திய ஊடகங்கள் சுஷிலா கார்கி பிரதமராவார் என்று சொல்கின்றன. மோதியின் ஆட்சி நேபாளத்திலும் இருப்பது போல இந்திய ஊடகங்கள் நடந்து கொள்கின்றன.
இந்திய அரசாங்கமோ, அங்குள்ள ஊடகங்களோ நேபாளத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாகப் பார்க்கவில்லை. இங்கே உள்ள இந்திய ஊடக செய்தியாளர்களின் பின்னணியைப் பாருங்கள், எல்லோரும் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவுடன் தொடர்புடையவர்கள்தான்” என்று தீபக் கூறினார்.
இது, தீபக் ஆச்சார்யாவின் கோபம் மட்டும் அல்ல, இந்திய ஊடகங்களுக்கு எதிரான அதிருப்தி நேபாளத்தில் பொதுவாகக் காணப்படும் ஒன்று.
இங்குள்ள மக்கள் வெளிநாட்டு சதித் திட்டங்கள் பற்றியும் பேசுகிறார்கள். அதில் அமெரிக்காவின் பெயரும் அடிபடுகிறது.
தீர்வை விட அதிகமாகக் காணப்படும் குழப்பம்
நாங்கள் நாடாளுமன்றத்தின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரில் வந்து அங்கு பணியில் இருந்த ராணுவ வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களையும் பிஸ்கட்டுகளையும் வழங்கத் தொடங்கினர்.
ஒருவர் தன்னை கிஷன் ரௌனியர் என்றும், மற்றொருவர் சோமன் தமாங் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
‘ஏன் வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் கொடுக்கிறீர்கள்’? என்று கேட்டபோது, ”அவர்கள் நாட்டிற்கு சேவை செய்கிறார்கள். எங்களிடம் அதிக பணம் இல்லை, ஆனாலும் நாங்கள் இதைச் செய்ய முடிவு செய்தோம். நாங்கள் ஒரு சலூன் நடத்துகிறோம்” என்றார் தமங்.
கிஷன் ரௌனியர் ஒரு மாதேசி இந்து மற்றும் தமாங் ஒரு பஹாடி பௌத்தர். இருவரும் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள்.
அதிகமான சேதம் ஏற்பட்டதற்காக கிஷன் இப்போது வருந்துகிறார்.
“ஒவ்வொரு அரசு கட்டடமும் தீக்கிரையாக்கப்பட்டது. இது பெரிதாகிவிட்டது. இப்போது நாங்கள் வருந்துகிறோம். அடுத்து வரும் அரசு, ஊழல் இல்லாததாக இருக்குமா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை,” என்று கிஷன் கூறினார்.
ஜென் Z போராட்டத்தில் பங்கேற்ற பலரும் இப்போது கட்டடங்களை எரிப்பது தவறு என்று நினைக்கிறார்கள்.
திங்களன்று 19 இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்துக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு அலை, செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவங்களுக்குப் பிறகு சற்று தளர்ந்தது போல தெரிகிறது.
இருப்பினும், நேபாளத்தின் அனைத்துத் தலைவர்களும் இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர். காத்மாண்டுவின் பாபர்மஹால் பகுதியில் உள்ள சாலைத் துறை கட்டடத்தின் முன் நாங்கள் நின்று கொண்டிருந்தோம்.
ஒருகாலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்த அந்தக் கட்டடத்தின் ஜன்னல்களிலிருந்து இப்போது புகை மட்டும் வெளியேறுகிறது. புகையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
நேபாள அரசியலின் திருப்புமுனை
நிராஜன் குன்வர், விஷ்ணு சர்மா மற்றும் சுபாஷ் சர்மா ஆகிய மூன்று ஜென் Z போராட்டக்காரர்கள் சோகமான நிலையில் அமர்ந்திருந்தனர்.
மூவரும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள். போராட்டத்தில் நிராஜன் குன்வர் காயமடைந்திருந்தார்.
“அரசு கட்டடங்களுக்கு தீ வைத்தது நாங்கள் அல்ல, வேறு சிலர்தான். நிறைய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. உண்மையைச் சொல்லப் போனால்,இப்போது நாங்கள் வருந்துகிறோம். இந்தக் கட்டடங்களை அமைக்க நேபாளத்துக்குபல ஆண்டுகள் எடுத்தது. அதனால் நாங்கள் மிகவும் சோகமாக உள்ளோம்” என்று நிராஜன் கூறுகிறார்.
அந்த ‘மற்றவர்கள்’ யார்? என்று கேட்டபோது, நிராஜனும் விஷ்ணுவும், ரவி லாமிச்சானேயின் ஆதரவாளர்கள் மற்றும் ஆர்பிபி (RPP) ஆதரவாளர்கள் என்று சொன்னார்கள்.
ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) முடியாட்சி ஆதரவு கட்சியாக அறியப்படுகிறது. அது நேபாளத்தை ஒரு இந்துத் தேசமாக்க கூறுகிறது.
பின்னர் நிராஜன் மற்றும் விஷ்ணுவிடம் ‘ஜனநாயக நேபாளமா வேண்டுமா, முடியாட்சி வேண்டுமா? மதச்சார்பற்ற நேபாளமா வேண்டுமா, இந்துத் தேசம் வேண்டுமா?’ என்று கேட்கப்பட்டது.
இருவரும் வெளிப்படையாகவே, ‘முடியாட்சி முறை, இந்துத் தேசம்’ என்றனர்.
ஆனால் அங்கு இருந்த சுபாஷ் சர்மா, தான் ஜனநாயக நேபாளத்தை ஆதரிக்கிறேன் என்று தெளிவாகச் சொன்னார்.
இந்த ‘ஜென் Z’ போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது–கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை. அதனால், யார் என்ன நினைத்தார்களோ அதைச் செய்தார்கள்.
இளைஞர்களுடன் பேசினால், அவர்கள் குழப்பமடைந்தவர்களைப் போலத் தெரிகிறார்கள்.
நேபாளத்தில் அடுத்த அரசு எப்படி அமைக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கியின் பெயர் அடிபடுகிறது, ஆனால் இளைஞர்களிடையே அதற்கு ஒருமித்த ஆதரவு இல்லை.
வியாழக்கிழமை, ‘ஜென் Z’ போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் சுசிலா கார்க்கியின் பெயரை எதிர்த்து ராணுவத் தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
ஜென் Z போராட்டக்காரர்கள் காத்மாண்டு மேயர் பாலேன் ஷா முன்வர வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால், முதலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால் நாடாளுமன்றம் ஏன், எப்படிக் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கான பதில் அரசியலமைப்பில் இல்லை.
அடுத்து என்ன?
239 ஆண்டுகளாக முடியாட்சியின் கீழ் வாழ்ந்த நேபாள மக்கள், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால், அதை இனி எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வார்கள் என்ற கேள்விக்கு இன்னும் முழுமையான பதில் கிடைக்கவில்லை.
நிலத்தால் சூழப்பட்ட நாடான நேபாளம், இன்று தனது ஜனநாயகமும் பல பக்கங்களில் இருந்து நெருக்கடிகளால் முற்றுகையிடப்பட்டதைப் போலவே காட்சியளிக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு