படக்குறிப்பு, நாடாளுமன்ற கட்டடம் மற்றும் சிங் தர்பார் எனும் அரண்மனைக்கு போராட்டக்காரர்கள் செவ்வாய்கிழமை தீ வைத்தனர். சிங் தர்பாரில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன
காத்மாண்டுவில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். கட்டடத்தின் ஒரு பகுதியிலிருந்து புகை தொடர்ந்து எழுகிறது.
கட்டட வளாகத்தைச் சுற்றி மோட்டார் சைக்கிள்கள் சுற்றி வருகின்றன. சிலர் தோட்டத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட செடிகளையும், கட்டடத்தின் உட்புறத்திலிருந்து ஓவியங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.
கட்டடத்தின் நுழைவாயிலில் உள்ள நெருப்பைச் சுற்றி போராட்டக்காரர்கள் நடனமாடி கோஷங்களை எழுப்பி வருகின்றனர், பலர் நேபாளக் கொடியை ஏந்தியுள்ளனர்.
சிலர் கட்டடத்தின் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு அனைத்து ஜன்னல்களும் உடைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் வெளிப்புறத்தில் அரசாங்க எதிர்ப்பு படங்கள் வரையப்பட்டுள்ளன.
இதற்கிடையே நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி தன் பதவியை செவ்வாய்கிழமை மதியம் ராஜினாமா செய்தார்.
கேபி சர்மா ஒலி நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக பதவி வகித்துவந்தார்.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் ‘ஜென் Z’ இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் உயிரிழந்ததையடுத்து, கேபி சர்மா ஒலி மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்த இளைஞர்கள் நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடையை எதிர்த்தும் ஊழலை எதிர்த்தும் போராட்டம் நடத்தினர்.
காணொளிக் குறிப்பு, காணொளி: நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் அரசையே ஆட்டம் காண வைத்தது எப்படி?
கேபி சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றாக இருந்தது.
இளைஞர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்தியதில் 21 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் இருவர் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர்.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, காணொளி: தீவிரமடையும் போராட்டம் – பற்றி எரியும் நேபாளம்
சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்
இதற்கிடையே 2 சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி சென்றதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜென் Z போராட்டக்காரர்கள் இன்று பிற்பகல் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்த பிறகு 773 கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காஸ்கி மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் டாங் மாகாணத்தில் உள்ள துளசிபூர் சிறையிலிருந்து 127 கைதிகள் தப்பிச் சென்றதாக துளசிபூர் காவல் துறை தெரிவித்துள்ளது.
கே.பி. சர்மா ஒலியின் வீடு எரிந்து நாசமானது
காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் மோதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக் குழுக்களால் பல்வேறு தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் நாசமாக்கப்பட்டதாகவும், தீ வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
பக்தபூரில் உள்ள பாலகோட்டில் உள்ள தற்போது ராஜினாமா செய்துள்ள பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் வீடு தீ பற்றி எரிவதையும், சேதப்பட்டிருப்பதையும் காட்டும் காணொளிகள் வெளியாகின.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தீக்கிரையாக்கப்பட்ட நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகம்
இதனுடன், புத்தனில்காந்தாவில் உள்ள நேபாளி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேர் பகதூர் தியூபாவின் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடியதாகவும் செய்திகள் வந்துள்ளன.
தங்கடியில் உள்ள தியூபாவின் இல்லமும் போராட்டக்காரர்களால் இலக்கு வைக்கப்பட்டது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட் சென்டர்) செய்தித் தொடர்பாளர் அக்னி பிரசாத் சப்கோடா கூறுகையில், அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தஹாலின் குமல்தாரில் அமைந்துள்ள இல்லத்தில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாக தகவல் தெரிவித்தார்.
முன்னதாக, தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் தீபக் கட்கா ஆகியோரின் இல்லங்களும் சூறையாடப்பட்டன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போராட்டங்களின் போது, பல இடங்களில் தீ வைக்கப்பட்டன, பல தலைவர்களின் வீடுகள் நாசப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜினாமா கடிதம்
ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த நேபாள காங்கிரஸ் மற்றும் நேபாள சமாஜ் கட்சிகளின் அமைச்சர்கள் பலர் பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி உடனடியாகப் பதவி விலகினார்.
‘ஜென் Z’ போராட்டங்களின் போது ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலானோர் இறந்ததால் கே.பி. ஷர்மா ஒலிக்கு பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.
பிபிசி நேபாளி சேவையின்படி, சில நாளிதழ்கள் ஒலியின் பதவி விலகலைக் வலியுறுத்தி சிறப்பு தலையங்கங்களை வெளியிட்டிருந்தன.
படக்குறிப்பு, பிரதமர் கேபி சர்மா ஒலியின் இல்லமும் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டது
பிபிசி நேபாளி சேவையின்படி, செவ்வாய்க்கிழமை கோபமடைந்த போராட்டக்காரர்கள் நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தைத் தாக்கி தீ வைத்தனர்.
திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி புகை எழுவதால், விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமானங்கள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன, ஆனால் இப்போது சர்வதேச விமானங்களும் பாதிக்கப்படும்.