பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி நியூஸ்
-
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.
மேலும் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்கு நுழைந்துள்ளனர்.
கட்டிடத்திலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை எழுவதைக் காண முடிகிறது.
தற்போதைய நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண வழி வகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக பிரதமர் ஒலி கையெழுத்திட்ட அறிக்கை கூறுகிறது.
தலைநகர் காத்மாண்டுவிலும், நேபாளம் முழுவதும் அதிகாலை முதல் போராட்டங்கள் நடந்தன. ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் வீடுகள் உட்பட பல மூத்த அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டன.
நேபாளத்தில் என்ன நடக்கிறது?
முன்னதாக உள்நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படவில்லை என 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கவும் ஊழலைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி நேபாள தலைநகர் காத்மண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திங்கள் இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. “ஜென் Z இளைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக” இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு அமைச்சர்கள் தற்போது வரை ராஜினாமா செய்துள்ளனர்.
தலைநகருக்கு வெளியே நடைபெற்ற போராட்டங்களிலும் ஏற்பட்ட மோதல்களில் 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். பொழுதுபோக்கு, செய்தி மற்றும் வணிகத்திற்காக சமூக ஊடகங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் போலிச் செய்தி, வெறுப்புப் பேச்சு மற்றும் இணைய மோசடிகளை எதிர்கொள்வதற்காக அவற்றை தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என நேபாள அரசு நியாயப்படுத்தியது.
திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், இது அரசின் சர்வாதிகார அணுகுமுறை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் ஊழலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி வந்தனர்.
சில போராட்டக்காரர்கள் தற்போது ராஜினாமா செய்துள்ள நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலியின் சொந்த ஊரான டமாகில் உள்ள அவரின் வீட்டின் மீது கற்களை வீசினர்.
முன்னதாக சபானா புடாதோகி என்கிற போராட்டக்காரர் பிபிசியிடம் பேசியபோது, சமூக ஊடகத் தடை தான் அவர்கள் ஒன்று கூடியதற்கு காரணம் என்றார்.
“சமூக ஊடகத் தடையை விட அனைவரின் கவனமும் ஊழலின் மீது தான் உள்ளது. எங்களுக்கு எங்களின் நாடு திரும்பவும் வேண்டும். ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும்.” என அவர் தெரிவித்தார்.
நேபாளத்தில் சமீபத்தில் “நெபோ கிட்” என்கிற பிரசாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை சுட்டிக்காட்டியும் அது ஊழலால் தான் எனக் குற்றம்சாட்டியும் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பட மூலாதாரம், Reuters
திங்கட்கிழமை, காவல்துறை தண்ணீரை பீச்சியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றது. இதன் தொடர்ச்சியாக, ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
வன்முறைக்கும் உயிரிழப்புக்கும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள கேபி சர்மா ஒலி, அசம்பாவிதங்களுக்கு சுய நலன் சார்ந்த குழுக்கள் ஊடுருவியதே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை விசாரிக்க அரசு குழு அமைக்கும் என்றும் தெரிவித்த ஒலி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் காவல்துறையைப் பயன்படுத்தியதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த வாரம் சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்த நேபாள அரசு அவற்றை முழுமையாக தடை செய்யவில்லையென்றும் நேபாளம் சட்டத்தின் கீழ் அவற்றை கொண்டு வர மட்டுமே முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தது.
பட மூலாதாரம், Getty Images
மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா
நேபாளத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களில் வன்முறையால் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் வேளாண் துறை அமைச்சரும் நேபாள காங்கிரஸ் தலைவருமான ராம்நாத் அதிகாரி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை பயன்படுத்தப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமாவை பேஸ்புக் மூலமாக அறிவித்துள்ளார்.
பிரதமரைச் சந்திக்க முடியாததால் தனது ராஜினாமா சமூக ஊடகம் மூலம் அறிவித்ததாக பிபிசி நியூஸ் நேபாளி சேவையிடம் அவர் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பதிவில் நேபாளம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாகக் கூறியுள்ளார் ராம்நாத், “கேள்வி கேட்பதும் அமைதியான முறையில் போராடுவதும் குடிமக்களின் அடிப்படை உரிமை, ஒரு ஜனநாயகத்தில் அதனை அங்கீகரிக்காமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்குவது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. பரவலான அடக்குமுறை, கொலைகள் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறோம்.” என்றுள்ளார்
மேலும் அவர் தனது பதிவில், “இந்த நாட்டை கட்டமைக்க உதவியிருக்க வேண்டிய ஒரு தலைமுறையை போரைப் போல எப்படி அணுக முடியும்? இந்த கேள்விகளுக்கு பதில் காணாமல் அதிகாரத்தில் இருப்பது எனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எனது மனசாட்சி என்னை எச்சரிக்கிறது. இளம் குழந்தைகள் ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு தேசமே கவலையில் ஆழ்ந்துள்ளபோது அரசாங்கத்தில் தொடர்வது நான் என் கட்சியில் பெற்றுள்ள தார்மீக உணர்வு மற்றும் கல்விக்கு எதிரானது. எனது அதிகாரப்பூர்வ கடமைகளில் தொடர்வது எனக்கு குற்றவுணர்ச்சியைத் தருகிறது” என்றார்.
மறுபுறம் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் சொந்த மாவட்டத்திலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அவரின் வீட்டை சூரையாடிய போராடிய போராட்டக்காரர்கள் அவரின் வீட்டை தீக்கிரையாக்கினர்.
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக, கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவையின் பல அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர். இதுவரை மூன்று மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
சிறிது நேரத்திற்கு முன்பு, குடிநீர் அமைச்சர் பிரதீப் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். “அன்புள்ள இளம் சகோதர சகோதரிகளே, நீங்கள்தான் எனது முதல் கூட்டாளிகள் மற்றும் எனது ஆற்றல் மற்றும் உற்சாகத்தின் ஆதாரம். நேற்று தொடங்கிய போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும், நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு