பட மூலாதாரம், Reuters
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த வெள்ளத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைப் பாதுகாப்பாக மீட்க வேண்டுமென அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் 49 பேரும், கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் 57 பேரும் நேபாளம் சென்றிருந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலம் மற்றும் வான்வழித் தேடல், மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் 2,000 வீரர்களைக் களமிறக்கியுள்ளது. மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளான ராசுவா, நுவாகோட் மாவட்டங்களில் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜாராம் பஸ்நெட் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதுவரை வெள்ளத்தில் சிக்கியிருந்த 97 பேரை ராணுவம் மீட்டுள்ளதாக அவர் கூறினார். அவர்களில் மூவர் திரிசூலி ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதையில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக நேபாள காவல் துறையும் ஆயுதப் படையும் தங்கள் அதிகாரிகளை களமிறக்கியுள்ளன.