சென்னை: நேர்காணல் மூலம் சிறப்பு மருத்துவர்களை நியமிப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ராமலிங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் பொதுச்செயலாளர் அகிலன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் பெருமாள் பிள்ளை: தமிழகத்தில் திடீரென்று நேர்காணல் மூலமாக 207 மகப்பேறு மருத்துவர்கள் உள்ளிட்ட658 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டால், பல்வேறு குழப்பங்களையும், மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தும்.
அரசு பணிக்கு தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் மருத்துவர்களை தேர்வு செய்யும் போது, உடனடியாக பணி நியமனம் செய்ய முடியவில்லை. காலதாமதம் ஆகிறது என்ற காரணத்துக்காக தான் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டது. அப்படியிருக்க, இப்போது திடீரென்று நேர்காணல் மூலம் மருத்துவர்கள் நியமனம் செய்வதை கடுமையாக எதிர்க்கிறோம். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக மட்டுமே மருத்துவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
மருத்துவர் ராமலிங்கம்: தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் மருத்துவர்களை தேர்வு செய்து நியமிப்பதில் ஏற்படும் தாமதத்தை போக்கவே, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது நேர்காணல் மூலம் மருத்துவர்களை நியமிக்கும் முடிவு தவறானது.
நேர்காணல் முறை என்பது சுகாதார அமைப்புக்கு ஒரு தடையாகும். காலியான பணியிடங்களை நிரப்ப தகுதியான மருத்துவர்களை தேர்வு நடத்தியே நியமனம் செய்ய வேண்டும். நேர்காணல் மூலம் நியமனம் என்பது இட ஒதுக்கீடு இல்லாமல் சமூக நீதிக்கு எதிராக அமையும். தரமற்ற நபர்களை ஊழல் செய்து பணியில் அமர வாய்ப்பு ஏற்படும்.
மருத்துவர் அகிலன் சுகாதாரத்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “சிறப்பு மருத்துவர்களை நேர்காணல் மூலம் நியமிப்பதில் வெளிப்படை தன்மை இருக்காது. அதனால், இதனை கடுமையாக எதிர்க்கிறோம். நேர்காணல் முலம் உடனடியாக நியமிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. சிறப்பு மருத்துவர்கள் வெளிப்படையான, தகுதி அடிப்படையில், தேர்வு நடத்தி நியமனம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.