• Sun. May 18th, 2025

24×7 Live News

Apdin News

நேற்றைய நாளோடு கரைந்து போகும் சோகத்தோடு | நதுநசி

Byadmin

May 17, 2025


நடை நான் போட்டு
நடந்த நிலத்தில்
இன்றும் நடக்க முடிகிறதா.?
அன்று போலல்ல.

நெஞ்சம் கனத்து
தளர்ந்த நடையோடு
நகர்ந்து போகின்றேன்.
அழ மட்டு முடியாத படி.

அழுது விடத் தான்
ஆசை இருக்கிறது.
அழும் போது வந்து எனை
தேற்றி விடுவார் யாரோ?

அன்றெல்லாம் இங்கே
அமைதி இருந்தது.
ஆடம்பரமற்ற வறுமை
கூட இருந்த போதும்.

சேர்ந்து வந்து என்னோடு
கதைபேசிய தோழியர்.
கூடவே என்னோடு நின்று
தோள் சுமந்த நண்பர்கள்.

கண்கள் இரண்டும்
கசிந்துருகி போகிறது.
மெல்ல நடை போடவும்
முடியவில்லை என்னால்.

வயது முதிர்ந்து நான்
தேகம் களைத்து சோரவில்லை.
சோகம் சேர்ந்து என்னை
மூர்ச்சை ஆக்கி போவதால்.

யாருக்காக நான் அன்று
தோள் சுமந்தேன் சுமை.
அந்த ஆனந்தம் இன்று
அவர்களை காணும் போது.

திடமில்லாத மனிதர்களாக
பசிகிடக்க முடியாத
கையேந்திகளாக வாழும் போது
சொற்ப ஆசைகளில் அடக்கம்.

எல்லா ஆசைகளையும் – நாம்
துறந்து தான் சென்றோம்.
களமென்ற சகதியில் ஆடிய
பெரும் போரில் வென்றிட.

தடைகள் எல்லாம்
தாராளமாக வந்த போதும்
சளைத்துப் போகாதவர்கள்.
தமிழர் நாமென்ற எண்ணம்.

தேவைகள் வழியில் தான்.
புதியவை கண்டோம்.
இறுதிவரை உறுதியாக
நின்றும் கொண்டோம்.

தமெக்கென இருந்த
சுயமிழந்து வாழும் – இன்றைய
தமிழர் நிலை கண்டு தான்
விம்மி மனம் நோகின்றேன்.

அன்றைய முள்ளிவாய்க்கால்
பேரவலத்தில் இழந்துவிட்ட
சொந்தங்களால் வந்த
சோகத்திலும் இது அதிகமாகிறது.

நாளை நான் இறந்து
மண்ணோடு மண்ணாகி
மயங்கிப் போய் விடுவேன்.
என் கவி வரிகள் கதை பேசிடும்.

இன்று நீ அறியாத வயது
நாளை அறியும் போது
வீரத்தோடும் தீரத்தோடும்
தேசம் பெரிதென்று வாழ்.

உன்னை இழந்தாலும்
உரிமை இழக்க விரும்பாத
சுயத்தோடு வாழும் வாழ்வை
விரும்பிக் கொள்.

அதுவிடுத்தொரு வாழ்வு
என்றென்றும் வேண்டாம்.
தலைவன் போல் நீயும்.
சிந்தனை செய்து கொள்.

நானும் நேற்றைய – அந்த
நாளோடு கரைந்து போகும்
சோகத்தோடு மறைந்து
போகிறேன் ……
நதுநசி

By admin