
வறுத்த நிலக்கடலை, சிப்ஸ், மிட்டாய்கள், சாக்லேட், ரைஸ் கிராக்கர்ஸ், கடல்பாசி, பாம்பே மிக்ஸர், குக்கீகள், டோனட்ஸ், கேக் – இனிப்பாகவோ அல்லது காரமாகவோ, உலகில் நொறுக்குத் தீனிகள் மிக அதிக அளவில் உள்ளன.
மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நொறுக்குத் தீனிகளை உண்டு வருகின்றனர். ஆனால் நவீன காலத்தில் ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் டாலருக்கும் மேலான மதிப்புள்ள ஒரு பெரிய தொழில் உருவாகியுள்ளது.
நம்மில் பலர் இப்போது வழக்கமான இரண்டு அல்லது மூன்று வேளை முழு உணவை விட, நொறுக்குத் தீனிகள் மூலமாகவே அதிக கலோரிகளை உட்கொள்கிறோம்.
ஆனால் நமது ஆசைகளும், வாழ்க்கை முறையும் மட்டுமே இந்த மாபெரும் வணிகத்தை உருவாக்கவில்லை – உணவு உற்பத்தி நிறுவனங்களின் புத்திசாலித்தனமான சந்தைப்படுத்தலும் நமது உணவு முறையில் இந்த ‘நொறுக்குத் தீனிமயமாக்கலில்’ முக்கியப் பங்கு வகித்துள்ளது.
அறியப்பட்டதிலேயே மிகவும் பழமையான நொறுக்குத் தீனி எது?
கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதியின்படி, ஸ்நாக் (snack) என்பது “வழக்கமான உணவுகளுக்கு இடையில் உண்ணப்படும் சிறிய அளவிலான உணவு அல்லது மிகச் சிறிய உணவு” ஆகும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நொறுக்குத் தீனி என்பது முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட மற்றும் குறைந்த ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட ஜங்க் ஃபுட் -ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை.
பிரிட்டிஷ் உணவு வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான அன்னி கிரே கூறுகையில், நொறுக்குத் தீனி பற்றிய நவீன புரிதல் பெரும்பாலும் “மிகவும் தரக்குறைவானதாக” இருக்கிறது.
பட மூலாதாரம், Choreograph via Getty Images
“நாம் நொறுக்குத் தீனிகளை எளிதாகக் கையில் எடுத்து வழக்கமான உணவுகளுக்கு இடையில் சாப்பிடும் ஒன்றாகக் கருதுகிறோம், இது தொடர்பாக பெரும்பாலும் ஒரு குற்ற உணர்வு நிலவுகிறது என்று நான் நினைக்கிறேன்,” என்று கிரே கூறுகிறார்.
நொறுக்குத் தீனி உண்பது என்பது ஒரு புதிய நிகழ்வு அல்ல – இது மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது என்று அவர் கூறுகிறார்.
” கொட்டைகள், பெர்ரிக்கள் மற்றும் பழங்கள்தான் மிகப் பழமையான நொறுக்குத் தீனிகளாக இருக்கும். ஆனால் நாம் நவீன நொறுக்குத் தீனிகளாகக் கருதுபவற்றில், பழமையானது அநேகமாக பாப்கார்ன் ஆக இருக்கலாம். தென் அமெரிக்கக் குகைகளில் கிட்டத்தட்ட 7,000 ஆண்டுகளுக்கு முந்தைய பொரிக்கப்பட்ட சோள மணிகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்,” என்கிறார் கிரே.
“வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் உலகம் முழுவதும் உள்ள பலருக்கு வேளாவேளைக்கு உணவுகளைச் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை, அதாவது நடைமுறையில் நாம் பசிக்கும் போதெல்லாம் சாப்பிட்டே வந்திருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஆரம்பகால நொறுக்குத் தீனிகள்
மனித வரலாற்றின் பெரும்பகுதிக்கு நொறுக்குத் தீனி உண்பது என்பது இயல்பான ஒன்றாக இருந்ததென்றால், அதை எப்போது உணவுகளுக்கு இடையிலான ஒன்றாகப் பார்க்கத் தொடங்கினோம்?
“ஸ்நாக் (Snack) என்ற சொல் ஆரம்பகால நவீன காலத்திற்குச் செல்கிறது, இது முதன்முதலில் ஆங்கிலத்தில் பயன்பாட்டுக்கு வந்தபோது, ‘ஏதோ ஒன்றின் ஒரு பகுதி’ (a portion of something) என்ற பொருளிலேயே இருந்தது,” என்கிறார் கிரே. “எனவே இதில் பகிர்ந்துகொள்ளுதல் என்ற கருத்து இயல்பாகவே உள்ளது. இது உணவின் ஒரு பகுதி மட்டுமல்ல, பணத்தின் ஒரு பகுதி அல்லது லாபத்தின் ஒரு பகுதியைக் கூட ஸ்நாக் என்று அழைக்கலாம்.”
அங்கிருந்து, அந்தச் சொல் மிக விரைவாக உணவோடு தொடர்புடையதாக மாறியது. “வயலில் வேலை செய்பவர், ‘ஓ, எனக்குப் பசிக்கிறது, நான் ஒரு ஸ்நாக் கேக் சாப்பிடப் போகிறேன்’ என்று சொல்லலாம்,” என்று கிரே தொடர்கிறார்.
“18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஸ்நாக் என்ற சொல் முற்றிலும் உணவாகவும், முறையான உணவுப் பழக்கத்திற்கு வெளியே உள்ள ஒன்றாகவும் மாறுவதை நீங்கள் காணலாம்,” என்று அவர் கூறுகிறார்.
அப்போதுதான் மிகச்சிறந்த நொறுக்குத் தீனிகளில் ஒன்றான ‘சாண்ட்விச்’ உருவானது. 1762-ல் ஒரு மாலைப் பொழுதில் சாண்ட்விச் நகரின் நான்காவது பிரபுவான ஜான் மொன்டாகு, பசியுடன் இருந்தபோதிலும் சீட்டு விளையாட்டிலிருந்து விலக விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, விளையாட்டுத் தொடரும் போதே சாப்பிடுவதற்கு வசதியாக, இரண்டு துண்டு ரொட்டிகளுக்கு இடையில் இறைச்சியை வைத்துத் தருமாறு அவர் ஒரு வேலையாளுக்கு உத்தரவிட்டார் – இதுவே நொறுக்குத் தீனிக்கான மிகச்சரியான வரையறை.
பட மூலாதாரம், Universal History Archive/Getty Images
ஆரம்பகால தொழில்மயமாக்கல் காலத்தில், அமெரிக்காவில் உள்ள நொறுக்குத் தீனி உற்பத்தியாளர்கள் ஆலைத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டனர். தொழிற்சாலை வாசல்களில் முதல் ஸ்நாக் பார்கள் தோன்றின, அவை சிப்பிகள் , ஊறுகாய் செய்யப்பட்ட நத்தைகள் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றை விற்பனை செய்தன.
19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பாப்கார்ன் ஒரு பிரபலமான நொறுக்குத் தீனியாக மாறியது, அதைத் தொடர்ந்து மற்றவை வந்தன.
“1910-ல் சிப்ஸ் (Crisps) முதன்முதலில் வணிகமயமாக்கப்பட்டது. இது பல உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட உணவுகள் தோன்றிய காலமாகும்,” என்று கிரே விவரிக்கிறார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உணவு பதப்படுத்துதலில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விரிவாக்கம் மற்றும் பேக்கேஜிங் மேம்பாடுகள், வேகமாக வருமானம் உயர்ந்து கொண்டிருந்த நுகர்வோருக்கு நொறுக்குத் தீனிகளைக் கொண்டு சேர்க்க உதவின.
“வீட்டிற்கு வெளியே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்களுக்குச் சாப்பாட்டிற்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை,” என்று கிரே மேலும் கூறுகிறார்.
“தொழிற்துறை விரிவாக்கம், நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி மற்றும் செலவழிக்கக் கூடிய வருமான உயர்வு ஆகியவற்றால் மக்கள் நொறுக்குத் தீனிகளுக்காக மென்மேலும் செலவிடத் தொடங்கினர்.”
பட மூலாதாரம், AFP via Getty Images
நொறுக்குத் தீனி சந்தை எவ்வளவு பெரியது?
அதே நேரத்தில் பேக்கேஜிங் தொழில்நுட்பமும் முன்னேறி வந்தது.
சிப்ஸ் பைகளில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவது போன்ற சிறிய கண்டுபிடிப்புகள், சிப்ஸ்களுக்கு ஒரு குஷன் போல செயல்பட்டு போக்குவரத்தின் போது அவை உடையாமல் தடுக்க உதவின.
இதன் விளைவாக, உற்பத்தியை ஒருங்கிணைப்பது நிதி ரீதியாகச் சாதகமானது, இதனால் குறைவான இடங்களில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் உருவாகின.
1979-ல் பால் போல்மேன் அமெரிக்காவின் மாபெரும் நிறுவனமான ப்ராக்டர் அண்ட் கேம்பிளில் சேர்ந்தபோது, சாதாரண சிப்ஸ் நொறுக்குத் தீனி உலகில் ஒரு பிரமாண்டமாக மாறியிருந்தது.
போல்மேன் விரைவில் காய்ந்த உருளைக்கிழங்கில் இருந்து ஒரு கேனில் அடைக்கப்பட்ட புதிய வகை உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பில் வேலை செய்யத் தொடங்கினார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
இந்தக் கட்டத்தில், பெரிய நிறுவனங்கள் சிறிய வணிகங்களைக் கைப்பற்றி, பிராண்ட் உருவாக்கம் மற்றும் விளம்பரங்களில் பணத்தைக் கொட்டின.
இந்நாட்களில், போல்மேன் இந்தத் துறையை ஒரு “ராணுவ நடவடிக்கை” உடன் ஒப்பிடுகிறார்.
“வெற்றி விரைவாக வரலாம், ஆனால் அதே வேகத்தில் மறைந்துவிடவும் கூடும், எனவே நீங்கள் கச்சிதமான செயல்பாட்டில் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். “உங்கள் தயாரிப்பு சரியான தரம், சரியான விலை, சரியான பேக்கேஜிங், கடையில் சரியான இடம் மற்றும் தேவைப்பட்டால் சரியான விளம்பரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.”
நொறுக்குத் தீனி நுகர்வு வளர்ந்து கொண்டே இருப்பதால், அதற்கான லாபமும் மிகப்பெரியதாக இருக்கும்.
உலகம் முழுவதும் உள்ள சில விருப்பமான நொறுக்குத் தீனிகள் எவை?
பட மூலாதாரம், AFP via Getty Images
பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் நமது நொறுக்குத் தீனி விருப்பங்களை ஆராய்ந்தபோது, பசி எடுக்கும்போது எதை நாடுகிறார்கள் என்று நேயர்களிடம் கேட்டது.
“எனக்கு மிகவும் பிடித்த நொறுக்குத் தீனி சீபா (chipa) என்று அழைக்கப்படுகிறது. இது மரவள்ளிக்கிழங்கு, சீஸ், வெண்ணெய், பால் மற்றும் உப்பு கொண்டு செய்யப்படும் சிறிய உருண்டை பன் ஆகும். நீங்கள் இந்த அழகான கோல்ஃப் பந்து போன்ற மாவு உருண்டைகளைச் செய்து அவற்றை பேக் செய்ய வேண்டும்,” என்கிறார் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பார்பரா ஓயேவரி.
ஓயேவரி தனக்கான நொறுக்குத் தீனிகளை தானே தயார் செய்ய விரும்புகிறார், ஆனால் அவரது மகன் கடைகளில் கிடைக்கும் தயாரான உணவுகளை விரும்புகிறார்.
“முரண்பாடாக, அவரும் சீஸ் சேர்த்து பேக் செய்யப்பட்ட ஒன்றையே விரும்புகிறார், இது நான் விரும்புவதை போன்றதுதான். நான் சிறுவயதில் ரசித்த உப்பு மற்றும் சீஸ் கலந்த நொறுக்குத் தீனிகளின் மீதான சுவையை அவரும் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது, ஆனால் நான் அதன் ஆதிகால வடிவத்தை ரசித்தேன்.”
புது டெல்லியில் வசிக்கும் மருத்துவர் ஸ்வாதி மிஸ்ரா, வேகவைத்த உருளைக்கிழங்கு, நிறைய கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் பட்டாணி ஆகியவற்றால் நிரப்பப்பட்ட சமோசாக்களை விரும்பிச் சாப்பிடுகிறார்.
“இவை இல்லாமல் எந்த ஒரு பார்ட்டியும் அல்லது திருமணமும் நிறைவடையாது,” என்று அவர் கூறுகிறார்.

புதிதாகத் தயாரிக்கப்படும் நொறுக்குத் தீனிகளிலிருந்து ரெடிமேடாக கிடைக்கும் தயாரிப்புகளை நோக்கி மக்கள் படிப்படியாக மாறுவதை அவர் காண்கிறார். குழந்தைகளைப் பாக்கெட் உணவுகளிலிருந்து விலக்கி வைப்பது கடினம் என்றும் அவர் கூறுகிறார்.
“நான் வழக்கமாக எனது உள்ளூர் சிறிய சந்தைக்குச் சென்று ஃபிஷ் ரோல் (fish roll) வாங்குவேன்,” என்கிறார் ஸ்டெல்லா ஒசீக் பு. “இது மாவு, மீன், உப்பு மற்றும் மடிகா (மரவள்ளிக்கிழங்கு மாவு, உப்பு மற்றும் சர்க்கரையுடன் தயாரிக்கப்படும் ரொட்டி) ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.”
பட மூலாதாரம், Stella Osiegbu.
“மடிகா (Madiga) என்பது நைஜீரியாவின் தென்மேற்கில் மிகவும் பிரபலமான உள்ளூர் ரொட்டி ஆகும். இது அதன் அடர்த்தியான அமைப்பு மற்றும் சிறந்த சுவைக்காக அறியப்படுகிறது,” என்று ஒசீக் பு மேலும் கூறுகிறார்.
“நான் தினமும் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுகிறேன்,” என்கிறார் பாங்காக்கைச் சேர்ந்த பாபச்சயா நிபனான்.
“இது வழக்கமாக மொறுமொறுப்பான ஒன்றாகவோ அல்லது சில நேரங்களில் சாக்லேட்டாகவோ இருக்கும், ஆனால் சில நேரங்களில் நான் நாச்சோஸிற்கு மாறிவிடுவேன்.”
அவர் தனது விடுமுறை நாளில் நொறுக்குத் தீனிகளைச் சேமித்து வைத்து, வேலை நாட்களில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அவற்றைச் சாப்பிடுகிறார்.
வேகமான வளர்ச்சி
பட மூலாதாரம், AFP via Getty Images
சர்கானா என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் கிட்டத்தட்ட பாதி பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுகிறார்கள்.
இது பல நாடுகளிலும் காணப்படும் ஒரு போக்காகும். நொறுக்குத் தீனிகள் மீதான நமது ஆர்வம் முடிவில்லாதது போலத் தோன்றுகிறது.
“நான் நொறுக்குத் தீனி சந்தையில் பணி செய்ய தொடங்கியபோது, அது ஒப்பீட்டளவில் சிறிதாக இருந்தது – 300 பில்லியன் டாலருக்கும் குறைவு,” என்கிறார் இத்துறையின் மாபெரும் நிறுவனமான யூனிலீவரின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த போல்மேன். “இப்போது, நொறுக்குத் தீனி பிரிவில் விற்கப்படும் பொருட்களின் மதிப்பு சுமார் 1.2 முதல் 1.5 டிரில்லியன் டாலர்கள் இருக்கும் என்று நான் கூறுவேன்.”
இந்த மாபெரும் தொழிற்துறை 2035-ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக வளரும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு