நோயாளிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு என்னென்ன சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் வகையிலான ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்நுட்பம் குறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக, அந்நிறுவனத்தின் பேராசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் சார்பில் உலக சிறுநீரக தினத்தையொட்டி ‘சிறுநீரக நோயில் ஏஐ தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் தலைவர் ராஜன் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நடிகர் சித்தார்த் கலந்துகொண்டு, உடலில் உப்பு அளவை குறைப்பதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய சேபியன்ஸ் கையேட்டினை வெளியிட்டார்.
கருத்தரங்கை தொடங்கி வைத்து ராஜன் ரவிச்சந்திரன் பேசும்போது, ‘‘செயற்கை நுண்ணறிவு என்பது நோயாளிகளின் கண்காணிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே தவிர நோயாளிக்கும், மருத்துவருக்கும் இடையேயான உறவை அது மாற்றியமைக்காது.
சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவற்றை பாதுகாக்க முடியும். சிறுநீரகத்தை பாதுகாக்க உணவில் உப்பு சேர்ப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். உடல் எடையை கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்த்து, ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’’ என்றார்.
சென்னை ஐஐடி பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் பேசும்போது, ‘‘செயற்கை நுண்ணறிவு என்றவுடன் நம் மனதில் எழும் முதல் கேள்வி, ஏஐ வந்தால் நம் வேலை போய்விடுமா என்பதுதான். ஆனால், மருத்துவத்துறையில் ஏஐ தொழில்நுட்பமானது மருத்துவரின் ஒரு உதவியாளரைபோல செயல்படும்.
இதன்மூலம் மருத்துவ செயல்முறைகளை நுணுக்கமாக நம்மால் மேம்படுத்த முடியும். மற்ற பாகங்கள் பாதிக்கப்படாதவாறு ஏஐ தொழிநுட்பத்தின் உதவியுடன் மூளை கட்டிகளை அகற்ற முடியும். ஐஐடியில் ‘டிஜிட்டல் ட்வின்’ எனப்படும் புதிய ஏஐ தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்மூலம் கணினியில் விர்சுவலாக (மெய்நிகராக) நோயாளியை உருவாக்கி, அதன் வாயிலாக மருத்துவர்கள் தங்களது நோயாளிகளை கண்காணிக்க முடியும். நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்பதை டிஜிட்டல் ட்வின் முன்கூட்டியே கணித்துவிடும் என்பதால், அடுத்த 6 மாதங்களுக்கு என்னென்ன மருந்துகள், சிகிச்சைகள் அளித்தால், நோயாளியின் உடல்நிலை முன்னேற்றம் அடையும் என்பதை டிஜிட்டல் ட்வின் மூலம் மருத்துவர்களால் தெரிந்துகொள்ள முடியும்’’ என்றார்.
இந்நிகழ்வில் சென்னை வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் தலைவர் ராம்குமார் சங்கர், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நாடக கலைஞர் மாது பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.