பட மூலாதாரம், Getty Images
நமது கழிப்பறைகளிலிருந்து வரும் பாக்டீரியாக்கள், வாய்ப்புண்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பூஞ்சைக் காளான்களை உருவாவதற்கானவை. இவை நமது பற்தூரிகைகளில் (toothbrush) செழித்து வளரும். ஆனால் உங்கள் பற்தூரிகைகளை சுத்தமாக வைத்திருக்கவும் பல வழிகள் உள்ளன.
கிருமிகள் நிறைந்த மினியேச்சர் அமைப்பாக உங்கள் பற்தூரிகை மாறியிருக்கலாம். அதிலுள்ள தூரிகைகள் வறண்ட புதர் நிலம் போன்று மாறிவிடுகின்றன. இவை நாள்தோறும் தற்காலிகமாக தண்ணீரில் மூழ்கி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஈரநிலமாக மாற்றப்படுகிறது. உயரமான பிளாஸ்டிக் தண்டுகளின் உச்சியில் இருக்கும் புதர்களுக்கு மத்தியில் லட்சக்கணக்கான உயிரினங்கள் செழித்து வளர்கின்றன.
பொதுவாக, உங்களுடைய பல் துலக்கும் கருவி நூற்றுக்கணக்கான வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 1 முதல் 12 மில்லியன் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு தாயகமாக உள்ளது. அதே போல் அதில் எண்ணிலடங்கா வைரஸ்களும் உள்ளன. அவை உங்கள் டூத் பிரஷின் மேற்பரப்பில் உயிரியல் படலங்களை உருவாக்குகின்றன, அல்லது நாட்பட்ட பற்தூரிகைகளின் உடைந்த தண்டுகளுக்குள் ஊடுருவிச் செல்கின்றன.
நமது வாயிலிருந்து தினமும் வரும் நீர், உமிழ்நீர், தோல் செல்கள் மற்றும் உணவின் தடயங்கள் இந்த நுண்ணுயிரிகளுக்கு அவை செழித்து வளரத் தேவையான அனைத்தையும் அளிக்கின்றன . அவ்வப்போது, அருகிலுள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும் போது அல்லது ஜன்னலைத் திறக்கும்போது வரும் பிற நுண்ணுயிரிகள் அவற்றுடன் இணைந்துவிடுகின்றன.
நாளொன்றுக்கு இரு முறை பல் துலக்கும் நாம், நுண்ணுயிரிகள் நிறைந்த பற்தூரிகையால் பற்களை துலக்கும்போது, அவை நமது வாய்க்குள் செல்லும்.
எனவே, நமது பல் துலக்கும் கருவி எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.
நமது பற்தூரிகையில் என்ன வாழ்கிறது, அந்த நுண்ணுயிரிகள் என்ன ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன, மேலும் நமது பல் துலக்கும் கருவிகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை, பல் மருத்துவர்களையும் மருத்துவர்களையும் ஆராயத் தூண்டுகிறது.
பட மூலாதாரம், Getty Images
நுண்ணுயிரிகள் எங்கிருந்து வருகின்றன?
“பற்தூரிகையில் உள்ள நுண்ணுயிரிகள் முதன்மையாக மூன்று மூலங்களிலிருந்து உருவாகின்றன” என்று ஜெர்மனியில் உள்ள ரைன்-வால் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் மார்க்-கெவின் ஜின் கூறுகிறார், இவர் பற்தூரிகையில் உள்ள நுண்ணுயிரி மாசுபாட்டை ஆய்வு செய்துள்ளார். இவை பயனரின் வாய், அவர்களின் தோல் மற்றும் டூத் பிரஷ் வைக்கப்பட்டிருக்கும் சூழல்.
நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டூத் பிரஷ்ஷில் மட்டுமல்ல, நாம் கடையில் இருந்து வாங்கும் புதிய டூத் பிரஷ்ஷிலும் நாம் அதை பயன்படுத்துவதற்கு முன்பே, அதில் பல்வேறு நுண்ணுயிரிகள் இருக்கலாம்.
உதாரணமாக, பிரேசிலில் உள்ள கடைகளில் பல்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட 40 புதிய டூத் பிரஷ்களை ஆய்வு செய்ததில், அவற்றில் பாதி ஏற்கனவே பல்வேறு பாக்டீரியாக்களால் மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டது .
அதிர்ஷ்டவசமாக, நாம் பயன்படுத்தும் பற்தூரிகைகளில் காணப்படும் பெரும்பாலான நுண்ணுயிரிகள் அதிக பாதிப்பில்லாதவை. ஆச்சரியப்படும்விதமாக, நமது வாயிலியே பல நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நாம் பற்தூரிகையை வாய்க்குள் வைத்து பல்துலக்கும்போது, நுரோதியா டெனோகாரியோசா , ஸ்ட்ரெப்டோகாசியே மைடிஸ் மற்றும் ஆக்டினோமைசஸ் பாக்டீரியா போன்ற நமது வாய்க்குள் இருக்கும் நுண்ணுயிரிகளை டூத் பிரஷ்கள் நீக்குகின்றன.
இந்த நுண்ணுயிரிகளில் சில நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், பற்சிதைவை ஏற்படுத்தும் பிற நுண்ணுயிரிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகின்றன. ஆனால் அவற்றிடையே நமக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளும் பதுங்கியிருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள்
“இவற்றில் மிக முக்கியமானவை ஸ்ட்ரெப்டோகாக்கி மற்றும் ஸ்டேஃபிளோகோகி, இவை பல் சிதைவை ஏற்படுத்துகின்றன,” என பிரேசிலில் உள்ள சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பேராசிரியர் வினிசியஸ் பெட்ராஸி கூறுகிறார். அவற்றில் சில, நமது ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும், இது பீரியண்டால்ட் நோய் என்று அழைக்கப்படுகிறது .
பயன்படுத்தப்பட்ட பற்தூரிகைகளில் வாழும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வயிற்று தொற்று மற்றும் உணவு விஷத்துடன் (food poisoning) பொதுவாக தொடர்புடைய உயிரினங்களான எஸ்கெரிச்சியா கோலி , சூடோமோனாஸ் ஏருகினோசா மற்றும் என்டோரோபாக்டீரியா ஆகியவை பற்தூரிகைகளில் காணப்பட்டன.
இவற்றைத் தவிர, மருத்துவமனை நோய்த்தொற்றுகளுக்கு பொதுவான காரணமான கிளெப்சில்லா நிமோனியா மற்றும் கேண்டிடா ஈஸ்ட்கள் போன்ற நோய்க்கிருமிகள் இருப்பதையும் ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன .
இந்த நுண்ணுயிரிகள், நாம் பற்தூரிகைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் தண்ணீரில் இருந்தும், நம் கைகள் மற்றும் “சுற்றுச்சூழலின்” பிற பகுதிகளிலிருந்தும் வருகின்றன. இருப்பினும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகும் சூழல் உங்கள் குளியலறையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
குளியலறைகள் சூடான மற்றும் ஈரப்பதமான இடங்களாகும், அங்கு தொடர்ந்து ஏரோசோல்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை காற்றில் கொண்டு செல்லக்கூடிய மெல்லிய நீர்த்துளிகள் வந்து சேர்கின்றன. இதனால் குளியலறைகளில் வைக்கப்படும் பல் துலக்கும் பொருட்கள் மாசுபடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஜின் கூறுகிறார்.
பொதுவாக நமது குளியலறைகளிலேயே கழிப்பறைகளையும் வைத்திருக்கிறோம். அந்த அறையில் தான், டூத் பிரஷ்களும் வைக்கிறோம். அதனால்தான் டூத் பிரஷ் குளியலறையில் இருக்கும்போது நுண்ணுயிரிகளால் நிரம்புகின்றன.
பட மூலாதாரம், Getty Images
கழிப்பறை சுத்தம்
கழிப்பறையை சுத்தம் செய்யும்(Flush) ஒவ்வொரு முறையும், அதைச் சுற்றியுள்ள காற்றில் 1.5 மீ (5 அடி) வரை சிறிய நீர்த்துளிகள் மற்றும் நுண்ணிய மலத்துகள்கள் தெறிக்கின்றன. இவற்றில் பாக்டீரியா மற்றும் தொற்று வைரஸ்கள் இருக்கலாம், அதாவது காய்ச்சல், கோவிட்-19 மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமாகும் நோரோவைரஸ் போன்றவை இருக்கும்.
பல் துலக்கும் பிரஷ்ஷை குளியலறையில் கழிப்பறைக்கு அருகில் வைத்திருந்தால், உங்கள் கழிப்பறையின் உள்ளடக்கங்கள் அதில் படிந்துவிடும், தொற்று நுண்ணுயிரிகள் நேரடியாக பிரஷ்ஷில் படியும் ஆபத்து அதிகம். இருப்பினும், கழிவறையை கழுவும்போதும், அதில் நீரூற்றும்போதும் கழிப்பறை இருக்கையை மூடுவது பலனளிக்கும்.
அதிலும், பிறருடன் பகிர்ந்துக் கொள்ளும் குளியலறைகளில், ஆபத்து ஒருவேளை அதிகமாக இருக்கலாம். பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பொது குளியலறைகளில் வைக்கப்படும் 60% பற்தூரிகைகளில் மலத்தில் காணப்படும் பாக்டீரியாக்கள் படிந்திருப்பதாகவும், ஒருவரின் பிரஷ்ஷில் உள்ள நுண்ணுயிரிகள் வேறொருவரிடமிருந்து வந்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
நிஜ உலக சூழல்களில் நுண்ணுயிரிகள் எவ்வாறு உயிர்வாழ்கின்றன என்பதைப் பற்றி ஆய்வு செய்யும் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் இணைப் பேராசிரியரான எரிகா ஹார்ட்மேன், கழிப்பறையில் உள்ள நுண்ணுயிரிகள், உண்மையில் மிகவும் கவலை தரக்கூடியவை அல்ல என்று கூறுகிறார்.
பொதுமக்கள் அனுப்பிய 34 பற்தூரிகைகளில், எதிர்பார்த்த அளவுக்கு மலம் தொடர்பான பாக்டீரியாக்கள் இருப்பதை அவரது குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டறிய முடியவில்லை. குடல் தொடர்பான நுண்ணுயிரிகளில் பல காற்றில் வெளிப்படும் போது நீண்ட காலம் உயிர்வாழாது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை இல்லினாய்ஸில் சுட்டிக்காட்டுகிறார்.
“பெரும்பாலான மக்கள் தங்கள் பற்தூரிகைகளால் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்வதாக நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், சில ஆராய்ச்சிகள், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸ்கள் போன்ற வைரஸ்கள் பற்தூரிகையில் பல மணிநேரம் உயிர்வாழும், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ்-1, சளி புண்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் 48 மணிநேரம் வரை கூட உயிர்வாழும் என்பதைக் காட்டுகின்றன. இது நோய்கள் பரவுவதற்கான சாத்தியத்தைக் காட்டுகிறது.
இந்தக் காரணத்திற்காகத் தான், பல் துலக்கும் பொருட்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொது சுகாதார ஆலோசனை கூறப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட டூத் பிரஷ்களை ஒன்றாக வைத்தால், அதிலும் குறிப்பாக நம்முடன் வசிக்காத நபர்களுடையவற்றுடன் சேர்த்து வைக்கக்கூடாது என்றும் பொது சுகாதார அமைப்புகள் எச்சரிக்கின்றன.
இருப்பினும், ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு இது பெரிய அளவு பிரச்னையை ஏற்படுத்தாது என்று ஹார்ட்மேன் கூறுகிறார். “ஒன்றாக வாழ்பவர்கள் அப்படி இல்லாதவர்களை விட தங்கள் வாயில் உள்ள நுண்ணுயிரிகளின் விகிதத்தை அதிகமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்” என்று அவர் கூறுகிறார். “இதற்குக் காரணம், முத்தமிடுவது போன்ற நேரடி வழிகளைத் தவிர, டூத் பிரஷ்களை அருகில் வைப்பது போன்ற மறைமுக வழியாகவும் இருக்கலாம் என நினைக்கிறேன்.” (நாய் உரிமையாளர்கள் பெரும்பாலும் தங்கள் செல்லப்பிராணிகளிடம் இருக்கும் நுண்ணுயிரிகளில் பலவற்றைப் பகிர்ந்து கொள்வார்கள் என்பது கவனிக்கத்தக்கது ).
உண்மையில், பற்தூரிகைகளில் காணப்படும் சில வைரஸ்கள் உண்மையில் நமக்கு சாதகமாக செயல்படக்கூடும் – ஹார்ட்மேனும் அவரது குழுவும் பற்தூரிகைகள் பாக்டீரியோபேஜ்கள் எனப்படும் வைரஸ்களின் செழிப்பான சமூகங்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர், அவை மனிதர்களை விட பாக்டீரியாக்களைப் பாதிக்கின்றன மற்றும் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும்.
பட மூலாதாரம், Getty Images
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோய்க்கிருமிகளால் ஏற்படும் ஆபத்து சிறியது என ஒப்புக்கொள்ளும் ஜின், நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக உள்ளவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள். பல் துலக்கும் போது பாக்டீரியா டிஎன்ஏவை வரிசைப்படுத்திய பிற ஒத்த ஆய்வுகளுடன் ஜின்னின் ஆராய்ச்சி , இந்த பாக்டீரியாக்களில் குறைந்தபட்சம் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் மரபணுக்களைக் கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளன.
இதன் பொருள் அவை தொற்றுநோய்களை ஏற்படுத்தினால் அவற்றுக்கு சிகிச்சையளிப்பது கடினம். ஆனால் ஜின் தனது ஆய்வில் இந்த மரபணுக்கள் “ஒப்பீட்டளவில் குறைந்த மட்டங்களில்” இருந்தன, எனவே “பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் மிதமான கவலையை” மட்டுமே முன்வைக்கின்றன என்று கூறுகிறார்.
இருப்பினும், இத்தாலியில் உள்ள மாணவர்களிடமிருந்து பல் துலக்கும் போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவை அனைத்தும் பல மருந்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டிருந்தன என்பதைக் கண்டறிந்தது.
சில பல் துலக்கும் கருவிகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன, அவை உங்கள் பற்தூரிகையில் வாழும் பாக்டீரியாக்களை கட்டுக்குள் வைத்திருப்பதாக கூறி சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான ஆய்வுகள் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைகளால், உங்கள் தூரிகையில் வாழும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஓரளவே உதவுகின்றன என்றும், மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பு இனங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்பதையும் காட்டுகின்றன .
உங்கள் டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்திய பிறகு அறை வெப்பநிலையில் நேரான நிலையில் காற்றில் உலர வைப்பதே அதில் வாழும் நுண்ணுயிரிகளைக் குறைப்பதற்கான ஒரு எளிய வழியாகும். இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸ்கள் உட்பட பல வைரஸ்கள் , ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் உயிர்ப்புடன் இருக்காது. பற்சிதைவுக்கு முக்கிய பங்களிக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் போன்ற பாக்டீரியாக்கள், பற்தூரிகைகளில் எட்டு மணி நேரம் வரை உயிர்வாழும், 12 மணி நேரத்தில் அவை இறக்கத் தொடங்குகின்றன.
பற்தூரிகையின் தூரிகைகள் உள்ளப் பகுதிகளை மூடவோ அல்லது மூடிய கொள்கலன்களில் சேமிக்கவோ கூடாது என்று அமெரிக்க பல் மருத்துவ சங்கம் மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பரிந்துரைக்கின்றன. ஏனெனில் இது நுண்ணுயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பட மூலாதாரம், Getty Images
உங்கள் பற்தூரிகையை எவ்வாறு சுத்தம் செய்வது?
பல் துலக்கும் பொருட்களை கிருமி நீக்கம் செய்வதற்கு, புற ஊதா ஒளியைப் பயன்படுத்துவது முதல் டிஷ்வாஷர் அல்லது மைக்ரோவேவில் வைப்பது, ஹேர் ட்ரையர் மூலம் காய வைப்பது அல்லது ஒரு கிளாஸ் விஸ்கியில் ஊறவைப்பது ஆகியவை அடங்கும்.
மைக்ரோவேவ் பெரும்பாலும் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகிறது, இருப்பினும் உங்கள் பற்தூரிகை உருகவோ அல்லது சேதப்படுத்தவோ கூட வாய்ப்புள்ளது.
நீங்கள் பயன்படுத்தும் பற்பசையிலேயே நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம், அதுவே உங்கள் பற்தூரிகையில் வளரும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலைகளைச் செய்யலாம். தண்ணீரில் நன்றாகக் கழுவுவதும் சில பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது, ஆனால் பல பாக்டீரியாக்கள் அதிலேயே இருக்கும்.
1% வினிகர் கலந்த கரைசலில் பற்தூரிகையை கழுவுவதை சில ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த வழியாக பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், நீங்கள் அடுத்த முறை அதைப் பயன்படுத்தும்போது வித்தியாசமாக இருக்கலாம். எனவே, பற்தூரிகையை கிருமி நாசினி மவுத்வாஷ் கரைசலில் ஐந்து முதல் 10 நிமிடங்கள் ஊறவைப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.

0.12% குளோரெக்சிடின் அல்லது 0.05% செட்டில்பிரிடினியம் குளோரைடு கொண்ட மவுத்வாஷ் கரைசலைக் கொண்டு தூரிகைகளை கிருமி நீக்கம் செய்யலாம் என பெட்ராஸி பரிந்துரைக்கிறார்.
இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள் வேறுபட்ட அணுகுமுறையாக பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும் பற்பசைகளை முன்வைக்கின்றனர்.
நீண்டகாலமாக பயன்படுத்தும் பழைய பற்தூரிகைகளில் பாக்டீரியாக்கள் வளர்வதற்குத் தேவையான திரவம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். அமெரிக்க பல் சங்கம் போன்ற பல் சுகாதார அமைப்புகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்ற பரிந்துரைக்க இதுவும் ஒரு காரணம் ஆகும். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. பல் துலக்குகளில் பாக்டீரியா சுமைகள் சுமார் 12 வார பயன்பாட்டிற்குப் பிறகு உச்சத்தை அடைகின்றன என்பதையும் ஜின்னின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது .
இருப்பினும், ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் வேறுபட்ட அணுகுமுறையை நோக்கித் திரும்புகின்றனர் உண்மையில் பாக்டீரியா வளர்ச்சியை பற்பசைகள் மூலம் ஊக்குவிக்கலாம்.
வாய்வழி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று அறியப்படும் சில “நட்பு” பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புரோபயாடிக் பற்பசைகளை பயன்படுத்தலாம்.
உதாரணமாக, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் சலிவாரிஸ் , தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அடக்கவும் , பிளேக்கை எதிர்த்துப் போராடவும் உதவுவதாக அறியப்படுகிறது. நியூசிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் இது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மற்றொன்று, லிமோசிலாக்டோபாகிலஸ் ரியூட்டெரி, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸுக்கு எதிராக வலுவாக போட்டியிடுகிறது, இது பற்சிதைவிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது.
“புரோபயாடிக் பற்பசைகள் அல்லது பயோஆக்டிவ் ப்ரிஸ்டில் பொருட்கள் போன்றவை, பற்பசைகளில் ஆரோக்கியமான நுண்ணுயிர் சமநிலையை ஊக்குவிக்க புதுமையான வழிகளை வழங்கக்கூடும்” என்று ஜின் கூறுகிறார். ஆனால் இது தொடர்பாக இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என அவர் எச்சரிக்கிறார்.
உங்கள் குளியலறையில் உள்ள உங்கள் பற்தூரிகையை நீங்கள் கூர்ந்து கவனித்தால், இது அதை மாற்ற வேண்டிய நேரமா? என்பதைத் தெரிந்துக் கொள்வது அவசியம். அதை உங்கள் கழிப்பறைக்கு அருகில் இருந்து மேலும் அதிக தூரம் தள்ளி வைக்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு