பட மூலாதாரம், AFP via Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானத் தளத்தைப் பற்றிப் பேசினார். அமெரிக்கா அதை மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக அவர் கூறினார்.
மேலும், அவ்வாறு நடக்கவில்லை என்றால், அதன் விளைவுகளைத் தாலிபன் அரசு சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
டிரம்ப் ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட ஒரு பதிவில், “ஆப்கானிஸ்தான் பக்ராம் விமானத் தளத்தை அதை உருவாக்கியவர்களான அமெரிக்காவுக்குத் திருப்பித் தராவிட்டால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!!!” என்று எழுதினார்.
இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் பயணத்தின்போது டிரம்ப் இதேபோன்ற கருத்தை வெளியிட்டபோது, தாலிபன் அரசு கடுமையாக எதிர்வினையாற்றியது.
தாலிபன் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஜாகிர் ஜலாலி, சமூக ஊடகங்களில் பதிவிட்டு, “ஆப்கானியர்கள் வரலாற்றில் ஒருபோதும் வெளிநாட்டு ராணுவ இருப்பை ஏற்றுக்கொண்டதில்லை. தோஹா பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின் போது இந்த சாத்தியக்கூறு முழுமையாக நிராகரிக்கப்பட்டது, ஆனால் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன” என்று கூறினார்.
2021-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எந்த தூதரக உறவுகளும் இல்லை.
டிரம்ப் சமீபத்தில் தனது பிரிட்டன் பயணத்தின்போது பக்ராம் தொடர்பான இந்த கருத்தை வெளியிட்ட பின் இது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர், “பக்ராம் உலகின் மிகப்பெரிய விமானத் தளங்களில் ஒன்றாகும், அதை நாங்கள் திருப்பிக் கொடுத்துவிட்டோம். சீனா தனது அணு ஆயுதங்களை உருவாக்கும் இடத்திலிருந்து அது ஒரு மணிநேர தூரத்தில் உள்ளது என்பதால் இப்போது அந்தத் தளத்தை மீண்டும் பெற விரும்புகிறோம்,” என்று கூறியிருந்தார்.
இந்த ராணுவத் தளத்தைப் பற்றி அவர் பேசும் ஒவ்வொரு முறையும், சீனாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களிலும் அவர் இதைப் பற்றிப் பேசியுள்ளார். பக்ராம் விமானத் தளத்தைச் சீனா ஆக்கிரமித்திருப்பதாகவும் அவர் பேசினார்.
இந்த விமானத் தளம் பல காரணங்களுக்காகச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. தாலிபனுக்கு எதிரான போரில் இது 20 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான படைகளின் மையமாக இருந்தது.
அமெரிக்க ராணுவம் விமானத் தளத்தை விட்டு வெளியேறியபோது, பெரிய அளவிலான ராணுவ உபகரணங்கள், ராணுவ வாகனங்கள் மற்றும் வெடிபொருட்கள் அங்கேயே விடப்பட்டிருந்தன.
பக்ராம் விமானத் தளத்தை யார் கட்டியது?
பட மூலாதாரம், AFP via Getty Images
பக்ராம் விமானத் தளம் காபூலுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் பர்வான் மாகாணத்தில் அமைந்துள்ளது.
இது முதன்முதலில் 1950-களில் சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்டது. 1980-களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது அது அவர்களின் முக்கிய ராணுவத் தளமாக மாறியது.
2001-ல் அமெரிக்கா தாலிபனை ஆட்சியில் இருந்து அகற்றியபோது, அது இந்தத் தளத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தது.
அப்போது பக்ராம் இடிபாடுகளாக மாறியிருந்தது. ஆனால் சுமார் 30 சதுர மைல்கள் (77 சதுர கிலோமீட்டர்) பரப்பளவில் விரிவடைந்துள்ள அந்த தளத்தை அமெரிக்க ராணுவம் மீண்டும் கட்டியது.
கான்கிரீட் மற்றும் எஃகால் ஆன பக்ராம் தளம், அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் உலகின் வலிமையான விமானத் தளங்களில் ஒன்றாக இருந்தது.
இது பல கிலோமீட்டர் நீளமுள்ள வலுவான சுவர்களால் சூழப்பட்டிருந்தது. அதன் சுற்றுப்புறப் பகுதி பாதுகாப்பாக இருந்தது. எந்த வெளியாட்களும் அதற்குள் நுழைய முடியாது.
இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய அளவுக்கான முகாம்கள் உள்ளன.
பக்ராமின் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்று இரண்டரை கிலோமீட்டருக்கும் மேல் நீளமானது. டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, “இந்தத் தளத்தில் வலிமையான மற்றும் மிக நீளமான கான்கிரீட் ஓடுபாதை உள்ளது. இந்த ஓடுபாதையின் தடிமன் சுமார் இரண்டு மீட்டர் ஆகும்.”
சீனாவின் அணுசக்தி மையத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?
பட மூலாதாரம், AFP via Getty Images
ஜூலை 2025-ல் பிபிசி ஆப்கன் சேவையால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, இந்த பெரிய ராணுவத் தளத்தில் சீனா இருக்கிறதா என்பதை கண்டறியச் செயற்கைக்கோள் படங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
முந்தைய மற்றும் பிந்தைய செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அங்கு ராணுவ நடவடிக்கைகள் மிகக் குறைவாக இருப்பதும், போர் விமானங்கள் இல்லாததும் தெரியவந்துள்ளது.
பக்ராம் ராணுவத் தளத்தில் பெரிய அளவிலான உத்தி ரீதியான மாற்றம் எதுவும் இல்லை என்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜெனிஃபர் ஜோன்ஸ், ஏப்ரல் 2025-ஆம் ஆண்டுப் படங்கள் இரண்டு ஓடுபாதைகளும் நல்ல நிலையில் இருப்பதை காட்டுவதாக பிபிசி குழுவிடம் தெரிவித்தார். ஆனால் 2025-ஆம் ஆண்டு செயற்கைக்கோள் படங்களில் எந்த விமானமும் காணப்படவில்லை.
பக்ராம் விமானத் தளத்திற்கு மிக அருகில் உள்ள சீன அணுசக்தி ஆய்வகம், வடமேற்கு சீனாவில் உள்ள ‘லோப் நூர்’ என்ற இடத்தில் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சாலை அல்லது பிற வழிகளில் இந்தத் தொலைவை கடக்க பல மணிநேரம் ஆகலாம்.
ஆனால் லாக்ஹீட் எஸ்ஆர்-71, பிளாக்பேர்ட் போன்ற நவீன ராணுவ விமானங்கள் இந்தத் தூரத்தை சுமார் ஒரு மணிநேரத்தில் கடந்துவிட முடியும்.
இந்த விமானத் தளத்தின் முக்கியத்துவம் என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
இருபது ஆண்டுகளில் ஜார்ஜ் டபிள்யூ. புஷ், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் என மூன்று அமெரிக்க அதிபர்கள் இந்த ராணுவ தளத்திற்கு வருகை தந்ததிலிருந்தே இந்த ராணுவத் தளத்தின் முக்கியத்துவத்தை அறியலாம்.
ஜோ பைடன் 2011-ல் பக்ராம் விமான நிலையத்திற்குச் சென்றார். ஆனால் அப்போது அவர் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தார்.
ஏர் கால்குலேட்டர் வலைத்தளத்தின்படி, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் அணுசக்தி திட்டம் தொடர்பாக பதற்றம் உச்சத்தில் உள்ள இரானில் இருந்து இந்த விமான தளத்தின் வான் வழி தூரமும் சுமார் 1644 கிலோமீட்டர் ஆகும். அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தற்போது உச்சத்தில் உள்ளது.
மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்துக்கும் இந்த விமானத் தளம் முக்கியமானது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, பக்ராம் விமானத் தளத்தில், அமெரிக்க வீரர்கள் விட்டுச் சென்ற ராணுவ உபகரணங்களைப் பயன்படுத்தித் தாலிபன் படைகள் ராணுவ அணிவகுப்புகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
சீனாவின் பதில் என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
பக்ராம் விமானத் தளம் குறித்த டிரம்பின் கருத்துக்கு கடந்த சனிக்கிழமை சீனாவிடம் இருந்தும் ஒரு பதில் கிடைத்தது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், “ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டைச் சீனா மதிக்கிறது, அதன் எதிர்காலம் ஆப்கானிஸ்தான் மக்களின் கைகளில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
அவர், “பிராந்திய பதற்றத்தை அதிகரிப்பது ஆதரவைப் பெறாது என்று நாங்கள் நம்புகிறோம். பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.
தற்போது, ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கு ரஷ்யாவைத் தவிர வேறு எந்த நாடும் அங்கீகாரம் அளிக்கவில்லை.
ஆனால், சீனாவுக்கும் தாலிபனுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது என்று கூறலாம்.
ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான நாடுகளுக்கு தூதரகங்கள் இல்லை, ஆனால் சீனா தனது தூதரை இங்கு அனுப்பியுள்ளது.
உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கங்களில் ஒன்றாக இருக்கும் ஒரு தாமிர சுரங்கத்தின் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர்.
சீனாவுக்கு இது ஏன் ஒரு பதற்றமான விஷயம்?
பட மூலாதாரம், AFP via Getty Images
சர்வதேச விவகார நிபுணரும், டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியருமான ரேஷ்மா காசி, பிபிசி நிருபர் மான்சி தாஷிடம் ஒரு பிபிசி நிகழ்ச்சியில், உத்தி ரீதியாக இது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
அவர், “இது உத்தி ரீதியாக ஒரு முக்கியமான மையம் மட்டுமல்ல. இங்கிருந்து ஒரு மணிநேர தூரத்தில் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அதன் அணுசக்தி மையங்கள் உள்ளன. அதன் கண்காணிப்புக்கும் இது மிகவும் முக்கியமானது. இந்தத் தளத்திலிருந்து இரான், பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளைக் கண்காணிக்க முடியும்” என்றார்.
அவர் கூற்றுப்படி, தற்போது பக்ராம் விமானத் தளம் உலகளாவிய புவிசார் அரசியலின் ஒரு முக்கிய மையமாக மாறிவிட்டது.
அவர், “சீனாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் மிகவும் அதிநவீனமானவை. அது இந்தத் திசையில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. 2030-க்குள் சீனாவிடம் 1000 அணு ஆயுதங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவற்றை எடுத்துச் செல்வதற்கான அதிநவீன ஏவுகணை அமைப்புகளும் அதனிடம் உள்ளன” என்றார்.
“ஒரு எதிரி நாட்டின் விமானத் தளம் இவ்வளவு அருகில் இருப்பது சீனாவுக்கு ஒரு கவலைக்குரிய விஷயம். அணு ஆயுதங்களின் போக்குவரத்து, பராமரிப்பு, அவற்றின் பயன்பாடு அல்லது வேறு நாட்டுக்கு அவற்றைக் கொடுக்கும் நடவடிக்கை ஆகியவை கண்காணிப்பில் வரலாம்,” என்கிறார் ரேஷ்மா காசி.
பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கா கைப்பற்றினால், சீனாவின் அணுசக்தி மையங்களுக்கு மட்டுமின்றி, அதன் ‘பெல்ட் அண்ட் ரோடு இனிசியேட்டிவ்’ (BRI) திட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு