7
கத்தார் தேசத்தின் தோஹாவில் அமைந்துள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச விளையாட்டரங்கில் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகைள் (Rising Stars) இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணியை சுப்பர் ஓவரில் வெற்றி கொண்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே மொத்த எண்ணிக்கையைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் பங்களாதேஷ் 3 பந்துகளில் 2 விக்கெட்களை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றது.
சுப்பர் ஓவரில் 2 விக்கெட்களையும் போட்டியின்போது 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றிய அஹமத் தானியல் ஆட்டநாயகனானார்.
பதிலளித்து பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 7 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது.
இந்தியா ஏ அணியுடனான அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றிருந்தது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் சாத் மசூத் 38 ஓட்டங்களையும் அரபாத் மின்ஹாஸ் 25 ஓட்டங்களையும் மாஸ் சதாகத் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ரிப்பொன் மொண்டல் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரக்கிபுல் ஹசன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஹபிபுர் ரஹ்மான் சொஹான் 26 ஓட்டங்களையும் ரக்கிபுல் ஹசன் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சுபியான் முக்கீம் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அராபத் மின்ஹாஸ் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஹமத் தானியல் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.