பட மூலாதாரம், Getty Images
செய்திகள் அல்லது பொது விவாதங்கள் மூலம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்து நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். ‘வேலையை இழந்த பிறகும் சிலருக்குப் பங்குச் சந்தை எவ்வாறு கைகொடுத்தது’ என்பது போன்ற கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம்.
ஆனால், பங்குச் சந்தையில் நேரடியாக வர்த்தகம் செய்வதற்கான மனநிலை பலருக்கு இருப்பதில்லை. பலர் இதைப் பற்றிப் போதிய அறிவு இல்லாததாலோ அல்லது அதிக ‘ரிஸ்க்’ எடுக்க விருப்பமில்லாததாலோ இந்த முதலீட்டில் இருந்து விலகி இருக்கிறார்கள்.
சமீபகாலமாக நாட்டில் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2024 டிசம்பர் இறுதி வரையிலான தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை 17 கோடியைத் தாண்டியுள்ளது.
இருப்பினும், டீமேட் கணக்கு என்றால் என்ன, அது எதற்காகப் பயன்படுகிறது, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியமா என்பது போன்ற கேள்விகள் பலரிடம் உள்ளன. இத்தகைய டீமேட் கணக்குகள் பலவற்றில் எவ்விதப் பரிவர்த்தனையும் நடப்பதில்லை.
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பியும், போதிய தகவல்கள் இல்லாததால் தயங்குபவர்கள் அல்லது சாமானிய முதலீட்டாளர்கள் போன்றோருக்கு மனதில் எழும் ஏழு முதன்மைக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
1) பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமா?
நீங்கள் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும்போது, சில நிறுவனங்களின் பங்குகளை வாங்குகிறீர்கள்.
நீங்கள் வாங்கும் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தால், அதன் பலனை நீங்கள் நேரடியாகப் பெறுவீர்கள். ஆனால், சில நேரங்களில் பங்குகளின் விலை சரிந்து, சில நாட்களிலேயே உங்களுக்குப் பெரிய நஷ்டம் ஏற்படலாம்.
நிரந்தர வைப்புத் தொகை (Fixed Deposits) மற்றும் தபால் நிலையங்களில் செய்யப்படும் முதலீடுகளுடன் ஒப்பிடும்போது, பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்களுக்கான வாய்ப்பு அதிகம். எனவே, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது இந்த ரிஸ்க்கை புரிந்து கொள்வது அவசியம்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எளிதானது. ஏனெனில் நீங்கள் இன்று பங்குகளை விற்றால், இரண்டு முதல் மூன்று நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
நாம் ஏன் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டால், அதற்குச் சிறப்பான ஒரு பதிலைக் கூற முடியும்.
பட மூலாதாரம், Getty Images
வங்கிகளின் நிரந்தர வைப்புத் தொகை வட்டி விகிதங்களும் பணவீக்க விகிதமும் நேர்மாறாக அதிகரிக்கின்றன. வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் உள்ள பல நிரந்தர வைப்புத்தொகைகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு, அரசு விதிகளின்படி டிடிஎஸ் (TDS), வருமான வரி ஆகிய இரண்டையும் நாம் செலுத்த வேண்டும்.
இந்த நிலை ‘எதிர்மறை வருமானம்’ (Negative Returns) என்று அழைக்கப்படுகிறது. அதாவது, முதலீட்டின் காரணமாக உங்கள் பணத்தின் மதிப்பு அதிகரிப்பதற்குப் பதிலாகக் குறையும். இத்தகைய சூழலில், பங்குச் சந்தையில் நேரடி முதலீடு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Funds) மூலமான மறைமுக முதலீடு ஆகியவை, உங்கள் கடின உழைப்பில் ஈட்டிய பணத்திற்குப் பிற முதலீட்டுத் திட்டங்களைவிட அதிக லாபத்தைத் தரக்கூடும்.
நிச்சயமாக, இதிலுள்ள ரிஸ்க்குகளை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே இது சாத்தியம். இந்த விஷயத்தில், நிதித் துறையை ஆய்வு செய்துள்ள பொருளாதார நிபுணர், முனைவர் அபிஜித் பட்னிஸ், சிறந்த கண்ணோட்டத்துடனும் புரிதலுடனும் முதலீடு செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.
“நிறுவனத்தின் பங்குகள் ஏன் ஏறுகின்றன அல்லது இறங்குகின்றன, எந்த நிறுவனங்களின் பங்குகள் எப்போது உயரும் என்பனவற்றை ஆய்வு செய்வது முக்கியம். அதேநேரம், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் முழுவதையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ரிஸ்க்கை எடுக்கக் கூடாது.
நீச்சல் தெரியாதவர் இடுப்பளவு ஆழத்தில்தான் இறங்க வேண்டும் என்பதைப் போன்றதுதான் பங்குச் சந்தையும். உங்களால் எவ்வளவு பணத்தை வைத்து ‘ரிஸ்க்’ எடுக்க முடியுமோ, அதை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் மூலம், பங்குச் சந்தை தொடர்பான ரிஸ்க்கை குறைத்து அதிக லாபத்தையும் பெறலாம்,” என்று பங்குச் சந்தை முதலீடு குறித்து அபிஜித் பட்னிஸ் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
2) பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி?
பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வது அபாயங்கள் நிறைந்தது.
யார் மூலமாக, எப்படி முதலீடு செய்வது என்பதைத் தெரிந்து கொள்வதும் முக்கியம்.
கடந்த 1992இல் ஹர்ஷத் மேத்தா மோசடி (ரூ. 1200 கோடி), அதைத் தொடர்ந்து கேத்தன் பரேக் மோசடி (ரூ. 800 கோடி) ஆகியவை முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தின. அந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தையின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியானது.
ஆனால், அதன் பிறகு 1992இல் பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) உருவாக்கப்பட்டது. மேலும், பங்குகள் டீமேட் (Demat), அதாவது டிஜிட்டல் வடிவிலும் கிடைக்கத் தொடங்கின. இது அபாயத்தைக் குறைத்தது. பங்குகளை வாங்கும் மற்றும் விற்கும் பரிவர்த்தனைகள் வெளிப்படையானதாக மாறின.
இப்போது நீங்கள் பங்குகளில் முதலீடு செய்ய விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, உங்களுக்கு டீமேட் கணக்கு, டிரேடிங் கணக்கு மற்றும் வங்கிக் கணக்கு தேவை.
பட மூலாதாரம், Getty Images
டீமேட் (Demat) என்ற சொல் ‘Dematerialized Account’ என்பதைக் குறிக்கிறது. அதாவது நீங்கள் வாங்கும் பங்குகள் இந்தக் கணக்கில் டிஜிட்டல் வடிவில் சேமிக்கப்படும். இதை உங்கள் பங்குகளுக்கான டிஜிட்டல் லாக்கர் என்று கருதலாம்.
ஆன்லைன் செயல்முறைக்குப் பிறகு இந்தக் கணக்கைத் தொடங்கலாம். செபி அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் இந்தக் கணக்கைத் தொடங்க அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் டெபாசிட்டரி பார்ட்டிசிபன்ட் (Depository Participant) அல்லது சுருக்கமாக டிபி (DP) நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தியாவில் ஸ்டேட் பேங்க், மகாராஷ்டிரா பேங்க் போன்ற அரசு வங்கிகளுடன், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கிகளும் இத்தகைய டீமேட் கணக்கைத் தொடங்கும் வசதியை வழங்குகின்றன. இது தவிர, சிறப்பு முதலீட்டுத் துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களும் டிபி-க்களாக செயல்படுகின்றன. டீமேட் கணக்கைத் தொடங்குவதற்கு முன், அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை (ரேட்டிங்) மற்றும் அவர்களிடம் உள்ள செபி உரிமத்தைச் சரிபார்க்கவும்.
டீமேட் கணக்குடன், உங்களுக்கு ஒரு டிரேடிங் கணக்கும் தேவை. டீமேட், டிரேடிங் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய கணக்குகள். இந்த இரண்டு கணக்குகளும் இல்லாமல், நீங்கள் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது. இந்தக் கணக்கின் மூலம், நீங்கள் மும்பை பங்குச் சந்தை (BSE) அல்லது தேசிய பங்குச் சந்தையில் (NSE) முதலீடு செய்வீர்கள். இந்த இரண்டு பங்குச் சந்தைகளைத் தவிர, இந்தியாவில் வேறு சில பங்குச் சந்தைகள் செயல்பாட்டில் உள்ளன. இருப்பினும், இவை இரண்டுதான் உலக அளவில் பெயர் பெற்றவை மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவை.
பட மூலாதாரம், Getty Images
இது தவிர, டீமேட் மற்றும் டிரேடிங் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கும் தேவை. அதாவது இந்தக் கணக்கில் இருந்துதான் டிரேடிங் கணக்கிற்குப் பணம் மாற்றப்படும். நீங்கள் பங்குகளை விற்றால், அந்தப் பணமும் இந்தக் கணக்கில்தான் வரவு வைக்கப்படும்.
சமீபகாலமாக, பெரும்பாலான இந்திய வங்கிகள் டீமேட், டிரேடிங், சேமிப்புக் கணக்கு ஆகிய மூன்று வசதிகளையும் ஒரே கணக்கில் வழங்குகின்றன. இத்தகைய கணக்குகள் ‘த்ரீ-இன்-ஒன்’ (three-in-one) கணக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.
டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கைத் தொடங்க, வங்கி அல்லது டிபி நிறுவனத்திடம் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
- பான் கார்டு
- ஆதார் அட்டை (அல்லது முகவரிக்கான வேறு ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம்)
- ரத்து செய்யப்பட்ட வங்கிக் காசோலை (Cancelled Cheque)
- உங்கள் இருப்பிடத்தை மெய்ப்பிக்கும் சான்றிதழ்
- உங்கள் வருமானத்திற்கான ஆதாரம் (வருமான வரிச் சான்றிதழ் அல்லது சம்பள ரசீது போன்றவை)
- உங்கள் தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
இதன் பிறகு, பங்குச் சந்தைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதன்மைப் பங்குச் சந்தை (Primary Market) மற்றும் இரண்டாம் நிலை பங்குச் சந்தை (Secondary Market). நாம் பொதுவாகச் செய்யும் முதலீடுகள் இரண்டாம் நிலைச் சந்தையில்தான் இருக்கும்.
ஆனால், ஒரு நிறுவனத்தின் பங்குகளின் முதல் பதிவு முதன்மைச் சந்தையில்தான் நடக்கும். அங்கிருந்து, பங்குகள் இரண்டாம் நிலைச் சந்தையில் வர்த்தகத்திற்கு வரும். ஆனால், ஒரு பங்கு முதன்முதலில் பட்டியலிடப்படும்போது அல்லது பதிவு செய்யப்படும்போது வரும் ஐபிஓ-வில் (IPO) நாம் முதலீடு செய்யலாம். இந்த ஐபிஓ முதன்மைச் சந்தையிலேயே வருகிறது. எனவே, நாம் செய்யும் பரிவர்த்தனைகள் இரண்டாம் நிலைச் சந்தையில் உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
3) எதில் முதலீடு செய்வது?
பங்குச் சந்தையில் உள்ள ரிஸ்குகளுக்கு நீங்கள் மனதளவில் தயாரான பிறகு, அடுத்த முக்கியமான கேள்வி எந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது என்பதுதான். இந்த முடிவை அனுபவம் மற்றும் ஆய்வின் மூலமே எடுக்க வேண்டும்.
‘இன்வெஸ்ட் ஆன்லைன்’ என்ற முதலீட்டு இணையதளத்தின் நிறுவனர் அபினவ் அங்க்ரிஷ் கருத்துப்படி, பங்குகளை வாங்கும்போது, முதலீட்டாளர் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும், நிறுவனம் மற்றும் பங்கை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் ஓர் உறுதியான உத்தியைத் தீர்மானிக்க வேண்டும்.
“முதலீடு, டிரேடிங் (Trading) ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை அறிவது மிக முக்கியம். டிரேடிங் என்பது குறுகிய காலத்திற்கு, பெரும்பாலும் ஒரேயொரு நாளுக்குப் பங்குகளை வாங்கி விற்பது. இதில் பெரிய லாபம் ஈட்ட வாய்ப்பு இருந்தாலும், ரிஸ்கும் அதே அளவு உள்ளது. ஆனால் பங்குகளில் முதலீடு செய்வது என்பது குறைந்தது ஆறு மாதங்கள் முதல் 1-3 ஆண்டுகள் வரையிலான திட்டத்துடன் ஒரு குறிப்பிட்ட பங்கில் பணத்தை முதலீடு செய்வதாகும். நீண்ட காலத்தில், இத்தகைய முதலீடு அதிக லாபம் தரக்கூடியதாக இருக்கும்,” என்று பங்குத் தரகராகவும் உள்ள அபினவ் விளக்கினார்.
வாங்குவதற்கு ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கும்போது, சந்தையில் நிறுவனத்தின் கடந்தகாலச் செயல்பாடு, செபி வழங்கிய ரேட்டிங், தொழில்நுட்ப (Technical) மற்றும் அடிப்படை (Fundamental) சார்ட்களின் அடிப்படையிலான நம்பகமான நிபுணர்களின் வழிகாட்டுதல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு (Balance sheet), காலாண்டு வருமான அறிக்கைகள், நிறுவனத்தின் தயாரிப்புகள், சந்தையில் அதற்கான தேவை ஆகியவற்றின் அடிப்படையில் வாங்கும் முடிவை எடுக்க வேண்டும் என்று அபினவ் அங்க்ரிஷ் பரிந்துரைத்துள்ளார்.
அதே நேரத்தில், பங்குச் சந்தை பற்றிய முழுமையான ஆய்வை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், நிபுணர்கள் அல்லது தரகர்களின் உதவியையும் நாடலாம். ஆனால், அந்தத் தரகர் அல்லது நிறுவனம் நம்பிக்கையானவராகவும், பதிவு செய்யப்பட்டவராகவும், பங்குச் சந்தை குறித்த ஞானமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
பல நிறுவனங்கள் உங்களிடம் கட்டணம் வசூலித்து, அதற்குப் பதிலாக உங்களுக்காகப் பங்குப் பரிவர்த்தனைகளைச் செய்கின்றன அல்லது கட்டணத்திற்குப் பதிலாக எந்தப் பங்குகளை வாங்கலாம் என்று உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன. இத்தகைய ஆலோசனைகளும் பயனுள்ளவை. ஆனால், உங்களுக்கும் அத்தகைய நிறுவனம் அல்லது நபருக்கும் இடையே நல்ல தகவல் தொடர்பும் நம்பிக்கையும் இருக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலம் நாம் ஒரு நல்ல முதலீட்டு போர்ட்ஃபோலியோவை (Portfolio) உருவாக்கலாம்.
போர்ட்ஃபோலியோ என்பது நீங்கள் வைத்துள்ள பங்குகள், அவற்றின் வாங்கும் விலை, சந்தை மதிப்பு ஆகியவற்றின் தொகுப்பாகும்.
ஒரு நல்ல போர்ட்ஃபோலியோவில், நல்ல நிறுவனங்களின் பங்குகளுடன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் சிறிய முதலீட்டைக் கொண்டிருப்பது முக்கியம். இது பல்வகைப்படுத்தப்பட்ட (Diversified) முதலீடு என்று அழைக்கப்படுகிறது. இது ரிஸ்க்கை குறைக்கிறது.
பங்குகளை வாங்குவதற்கான மற்றொரு சிறந்த வாய்ப்பு ஐபிஓ (IPO). ஒரு நிறுவனம் முதல் முறையாகப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது ஐபிஓ வெளியிடப்படுகிறது.
அப்போது நீங்கள் ஏலம் (Bid) மூலம் இந்தப் பங்கை வாங்க உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். ஐபிஓ-க்களில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் நல்ல லாபம் ஈட்டியுள்ளனர். இத்தகைய லாபங்கள் வரி இல்லாதவை. நிச்சயமாக, ஐபிஓ பற்றி நன்கு தெரிந்து கொள்ளாமல் நீங்கள் முடிவெடுக்கக் கூடாது.
4) பங்குகளில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? எவ்வளவு காலம் முதலீட்டை வைத்திருக்க வேண்டும்?
சந்தையில் வாங்கும் சூழல் இருந்தால், குறியீடு (Index) மேலே செல்கிறது. விற்கும் சூழல் இருக்கும்போது, அது கீழே செல்கிறது. இத்தகைய சுழற்சிகள் பங்குச் சந்தையில் இடைவிடாமல் தொடர்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், பங்குகளின் விலை குறைவாக இருக்கும்போது வாங்குவதும், விலை எப்போது உயரும் என்பதைக் கணித்து அதிகமாக இருக்கும்போது விற்பதும் ஓர் உத்தி.
ஆனால், இந்த ஏற்ற இறக்கங்களைக் கணிப்பதில் வல்லவர்களேகூட திணறுவார்கள். மேலும், ஒரு பங்கை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான பதிலும் அதே அளவுக்குக் கடினமானது. இந்தத் துறையில் உள்ள நிபுணர்கள்கூட உறுதியான பதிலை அளிக்க முடியாது.
பட மூலாதாரம், Getty Images
அபினவ் அங்க்ரிஷ் கருத்துப்படி, “முதலீடு செய்யும்போது நீங்கள் செய்த ஆய்வு, அதிலிருந்து நீங்கள் உருவாக்கிய உத்தி, தற்போதைய பணத் தேவை, பங்குச் சந்தை நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீட்டுக் காலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.”
அதே நேரத்தில், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு, முதலீடு செய்யச் சரியான நேரம் என்பது ‘இப்போதே செய்வதுதான்’ (Now) என்றும் அங்க்ரிஷ் அறிவுறுத்தியுள்ளார். “சந்தையில் ஏதாவது ஒரு துறையில் பங்குகள் சரிந்துகொண்டே இருக்கின்றன. நீங்கள் அவற்றைத் தேர்ந்தெடுத்து எந்த நேரத்திலும் சிறிய முதலீடுகளைத் தொடங்கலாம்.”
இது தவிர, வர்த்தகர்களுக்குக் குறுகிய கால வாய்ப்பும் உள்ளது. அதாவது இன்று பங்குகளை வாங்கி இன்றே விற்பது அல்லது ‘இன்று வாங்கி, நாளை விற்பது’. ஆனால் நிச்சயமாக, அதிலும் அதிக ரிஸ்க் உள்ளது.
பங்குகளில் முதலீட்டுக் காலத்திற்குச் சில பரந்த பிரிவுகள் உள்ளன. உதாரணமாக மூன்று மாதங்கள் அதாவது ஒரு காலாண்டு, பிறகு ஆறு மாதங்கள் அதாவது அரையாண்டு அல்லது ஒன்று முதல் மூன்று ஆண்டுகள்.
ஒரு வருடத்திற்கும் குறைவான முதலீடுகள் குறுகிய காலமாகக் கருதப்படுகின்றன. ஒரு வருடத்திற்கும் மேலான முதலீடுகள் நீண்ட காலமாகக் கருதப்படுகின்றன. அதற்கேற்ப, பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. வழக்கமான மற்றும் ஒழுக்கமான எந்த முதலீடும் நன்மை பயக்கும். இது பங்குச் சந்தை முதலீடுகளுக்கும் பொருந்தும்.
சமீபகாலமாக, சிலர் பங்குச் சந்தையில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட பங்கில் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்கிறார்கள். பலர் இத்தகைய முதலீடுகளில் இருந்து பயனடைந்துள்ளனர்.

5) பங்குச் சந்தையில் இருந்து எவ்வளவு லாபம் ஈட்ட முடியும்?
பங்குச் சந்தை, கால அளவு மற்றும் நிறுவனங்களின் தேர்வைப் பொறுத்தது என்பது போலவே, அது லாபகரமானதும்கூட. வேலையை இழந்த பிறகும் பங்குச் சந்தை முதலீடுகளைக் கொண்டு குடும்பத்தை நடத்துபவர்கள் பற்றிய உதாரணங்கள் உள்ளன. அதேபோல, பங்குச் சந்தையில் அளவுக்கு அதிகமான ரிஸ்க் எடுத்து கடனாளியான குடும்பங்களையும் காண முடிகிறது.
ஆனால், அறிவியல் பூர்வமாக முதலீடு செய்வதன் பலனை நீங்கள் நிச்சயமாக அறுவடை செய்யலாம் என்று இன்வெஸ்ட் ஆன்லைனை சேர்ந்த அபினவ் அங்க்ரிஷ் கூறுகிறார்.
“பங்குச் சந்தையை உங்கள் மற்ற முதலீடுகளுக்கு ஒரு துணை முதலீடாகப் பார்க்க வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் பயன்படும் சொத்துகளை உருவாக்குவதே உங்கள் முதன்மை இலக்காக இருக்க வேண்டும். அதில் பங்குச் சந்தை முதலீடும் இருக்க வேண்டும்.”
அரசு சேமிப்புத் திட்டங்களில் அதிகபட்ச வட்டி விகிதம் தற்போது 7% முதல் 7.5% வரை உள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட பங்கு முதலீடுகளில் இருந்து அதிக வருமானத்தைப் பெறலாம். இந்த லாபம் 9-10% முதல் 100% வரைகூட இருக்கலாம். இருப்பினும், பங்கு விலை சரிவதால் நஷ்டம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
அதனால்தான், அத்தகைய ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லாதவர்கள், உங்கள் சார்பாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுமாறு அங்க்ரிஷ் அறிவுறுத்துகிறார். கடந்த இருபது ஆண்டுகளில் சில மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்ந்து 14-20% வருமானத்தை அளித்துள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பங்குச் சந்தையில் லாபம் என்பது நிச்சயமாக நீங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் மற்றும் உங்கள் பங்குகளை எவ்வளவு நன்றாகத் தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இருப்பினும், பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானத்தை இங்குப் பெற முடியும்.
பட மூலாதாரம், Getty Images
6) பங்குச் சந்தை பாதுகாப்பானதா?
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் பலருக்கும், சில விஷயங்களை நினைக்கும்போது இந்தக் கேள்வி எழுகிறது. ஒன்று இந்த முதலீட்டில் உள்ள ரிஸ்க், மற்றொன்று நிறுவனம் திவாலானால் உங்கள் பணத்தை இழக்க நேரிடுமோ என்ற பயம். மேலும் 1990களில் வெளிச்சத்திற்கு வந்த பங்குச் சந்தை மோசடிகள். இந்தக் காரணங்களால், நடுத்தர வர்க்கத்தினர் பங்குச் சந்தையில் நுழைவதற்கு முன் பத்து முறை யோசிக்கிறார்கள்.
இருப்பினும், சமீப காலமாக சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்து வருவதும், 2000ஆம் ஆண்டில் இருந்து இந்திய பங்குச் சந்தைகளின் நிலையான செயல்பாடும், பங்குச் சந்தை மீதான நடுத்தர குடும்பங்களின் பார்வையை மாற்றி வருகிறது.
மேலும், ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI) அனைத்துப் பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் மூலமாக்கியது, பங்குப் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பது ஆகியவற்றால், இங்கு பரிவர்த்தனைகளும் வெளிப்படையானதாக மாறியுள்ளன.
இந்திய பொருளாதாரத்தின் மீது உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டுமின்றி, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இந்திய சந்தையில் பெருமளவில் முதலீடு செய்கின்றன. இதன் விளைவாக, பங்குச் சந்தைக் குறியீடுகளும் உயர்ந்து வருகின்றன.
ஒரு நாளில் ஒரு பங்கு ஐந்து சதவிகிதம் உயர்ந்தால் அல்லது குறைந்தால், செபி உடனடியாக அந்தப் பங்கை வாங்குவதையும் விற்பதையும் நிறுத்துகிறது. இது சர்க்யூட் (Circuit) என்று அழைக்கப்படுகிறது. செபி அந்தப் பங்கின் அனைத்து வாங்கல், விற்றலை நிறுத்துகிறது. அனைத்துப் பரிவர்த்தனைகளும் சரிபார்க்கப்பட்ட பின்னரே வர்த்தகத்தை மீண்டும் தொடங்க முடியும். முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
கடந்த இருபது ஆண்டுகளில் செபி இதுபோன்ற வேறு சில நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. முதலீட்டாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நிறுவனம் வழிகாட்டுதல் சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்கிறது.
ஒரு முதலீட்டாளராக, பரிவர்த்தனை குறித்து உங்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால், நீங்கள் செபியிடமும் தீர்வு கோரலாம்.
நிச்சயமாக, உங்கள் வருமானம் பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்தது. மேலும் இந்த முதலீட்டு ரிஸ்க்கை நீங்கள் எடுக்க வேண்டும். ஆனால், ஆய்வு மற்றும் தகவல்களுடன் முதலீடு செய்வது நல்ல வருமானத்தையும் அளிக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
7) பங்குச் சந்தை முதலீடுகளுக்கு வரி உண்டா?
பங்குச் சந்தையில் முதலீடுகள், குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடுகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு வைத்திருக்கப்படும் முதலீடுகள் குறுகிய கால முதலீடுகள். ஒரு வருடத்திற்கும் மேலான காலத்திற்கு வைத்திருக்கப்படும் முதலீடுகள் நீண்ட கால முதலீடுகள். பங்குச் சந்தையிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கான வரி, கால அளவைப் பொறுத்தது.
ஐபிஓ-க்களில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் குறுகிய கால லாபத்திற்கு வரி இல்லை. பங்குகளில் முதலீடு மற்றும் 1-3 ஆண்டுகளுக்கான அவற்றின் வருமானத்திற்கு வரி இல்லை.
ஆனால், அதுதவிர, குறுகிய கால லாபத்திற்கு, அதாவது ஒரு வருடத்திற்குள் ஈட்டப்பட்ட லாபத்திற்கு, குறுகிய கால மூலதன ஆதாயமாக (Short-term capital gains) 15% என்ற நிலையான விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது.
இதில் நீங்கள் எந்த வருமான வரம்புக்குள் வருகிறீர்கள் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மறுபுறம், நீண்ட கால லாபத்திற்கு நீண்ட கால மூலதன ஆதாயமாக (Long-term capital gains) வரி விதிக்கப்படுகிறது. இதற்கும் வருமான வரம்பு இல்லை. இந்த வரி 10% ஆகும். உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்யும்போது, அந்த நிதியாண்டில் பங்குச் சந்தையில் இருந்து ஈட்டப்பட்ட லாபத்தை அறிவிப்பது கட்டாயம்.
பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபத்திற்கு விதிக்கப்படும் வருமான வரி குறித்து சிஏ (CA) நிகிலேஷ் சோமன் ஒரு முக்கியமான தகவலை அளித்தார்.
“வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் செய்யப்பட்ட பங்குச் சந்தைப் பரிவர்த்தனைகளை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். அதாவது, கடந்த ஆண்டு பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டிருந்தால், அதே அளவிலான லாபத்தின் மீதான வரி நடப்பாண்டில் ரத்து செய்யப்படும். அதாவது, முந்தைய ஆண்டில் ஏற்பட்ட நஷ்டத்தின் பலனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிமுறை மூன்று ஆண்டுகளுக்குப் பொருந்தும்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு