காணொளி: பலரும் நோபல் பரிசை வெல்ல காரணமான ‘படிகங்கள்’
படிகங்கள் அழகானவை மட்டுமல்ல, 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அவை முக்கிய பங்கு வகித்துள்ளன. அதுதான் எக்ஸ்-ரே படிகவியல் தொழில்நுட்பம்.
முக்கியமாக, இந்த துறையில் நிகழ்ந்த பல முன்னேற்றங்களுக்கு நோபல் பரிசுகள் கிடைத்துள்ளன. அதில் அப்படி என்ன உள்ளது?
1912ம் ஆண்டு ஜெர்மானிய இயற்பியலாளர் மேக்ஸ் வான் லாவோ (German physicist Max von Laue), படிகங்கள் வழியே எக்ஸ் கதிர்கள் ஊடுருவும் போது அவை தனித்துவமான வடிவங்களை உருவாக்குகின்றன என்பதை கண்டறிந்தார்.
இதையடுத்து, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வில்லியம் ஹென்றி பிராக் (William Henry Bragg) மற்றும் அவருடைய மகன் லாரன்ஸ் இருவரும் பிராக் விதி (Bragg’s Law) என்ற ஒன்றை கண்டுபிடித்தனர். படிகத்திற்குள் அணுக்கள் எங்கே உள்ளன என்பதை விளக்கும் ஒரு சிறிய சமன்பாடுதான் இந்த பிராக் விதி.
இதன்மூலம் விஞ்ஞானிகளால் படிகங்களின் அணு கட்டமைப்புகளை வரைபடமாக்கி, அதன்மூலம் மருந்துகள் தயாரிப்பு, டிஎன்ஏ குறித்த ரகசியங்களை கண்டறிதல், மின்னணுவியலை மேம்படுத்துதல் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர்.
பிராக் மற்றும் அவருடைய மகன் இருவரும் 1915ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றனர். அதிலிருந்து எக்ஸ்-ரே படிகவியல் தொழில்நுட்பம் அறிவியலை வடிவமைத்தது.
ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் என்ற விஞ்ஞானி தன்னுடைய புகழ்பெற்ற “ஃபோட்டோ 51” (“Photo 51”) என்பதில் இதை பயன்படுத்தினார், இது இரட்டைச் சுருள் போன்ற டிஎன்ஏவின் அமைப்பைக் கண்டுபிடிக்க உதவியது.
டோரத்தி ஹாட்கின் (Dorothy Hodgkin), இதை பயன்படுத்தி இன்சுலின், வைட்டமின் பி12 மற்றும் பெனிசிலின் ஆகியவற்றின் வடிவமைப்புகளை வெளிப்படுத்தி, மருந்து துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். இதன்மூலம் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப்பட்டன, மருத்துவ சிகிச்சைகளும் மேம்படுத்தப்பட்டன.
அவருக்கு 1964ம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
எக்ஸ்-ரே படிகவியல் தொழில்நுட்பம் செவ்வாய் கிரகத்திற்கும் சென்றுள்ளது.
நாசாவின் கியூரியாசிட்டி (Curiosity) ரோவர், இந்த தொழில்நுட்பம் மூலம் செவ்வாய் கிரகத்தில் கனிமங்கள் குறித்து ஆய்வு செய்யவும் தண்ணீருக்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறியவும் பயன்படுத்தப்பட்டது.
அடுத்த கண்டுபிடிப்பு என்னவாக இருக்கும்?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு