சென்னை: தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதுடன், தொடர்ச்சியாகத் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லாமல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக இளைஞர் அணியின் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னைஅண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.20) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என். ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
> தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதுடன், தொடர்ச்சியாகத் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லாமல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
> மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதுடன் கல்வியைக் காவிமயமாக்கும் வகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழு உள்பட பலவற்றில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ள பல்கலைக்கழக மானியக்குழுவையும் பின்னிருந்து இயக்கும் மத்திய பாஜக அரசையும் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
> சிறுபான்மை இன மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், மத்திய பாஜக அரசு கொண்டுவந்த ‘வக்பு வாரிய மசோதா’, எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. என்றாலும், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்களை முற்றிலுமாக நிராகரித்து, வக்பு வாரிய மசோதாவை சட்டமாக்கும் மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோதப் போக்கை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
> தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்புக்கும் நீதிமன்றக் கண்டனங்களுக்கும் ஆளானாலும், மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு, ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, மீண்டும் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி மேலும் தாமதப்படுத்துவது, பாஜகவின் நிர்வாகி போல் பிற்போக்குக் கருத்துகளைப் பொதுவெளியில் பேசித் திரிவது என்று அரசியல் சட்டத்துக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிராகச் செயல்படும் ஆளுநரை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
> மதவாத பாஜக தமிழகத்தில் காலூன்ற எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும், அதை முறியடிக்கும் தமிழ்நிலத்தின் தன்மானத் தடுப்புச்சுவராக விளங்குபவர் தந்தை பெரியார். நேரடியாகத் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாமல், கூலிகளை அமர்த்தி பெரியாரின் சிந்தனைகளையும் திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்தி, எப்படியாவது தமிழகத்தில் வேரூன்றப் பார்க்கிறது பாஜக.
அந்த மதவாதச் சக்திகளின் கைக்கூலிகளாய், தந்தை பெரியார்மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளிவீசும் நாசகார சக்திகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழர்களின் சிந்தனைகளில் இருந்து பெரியாரை அகற்ற வேண்டும், திராவிடத்தை வீழ்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் பலர் முயன்றும் முடியாத காரியம், இப்போதும் எப்போதும் நிறைவேறப் போவதில்லை என்பதை இந்தக் கூட்டம் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.
> உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில், மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளின் நிர்வாகச் சீர்கேடு மற்றும் அலட்சியத்தின் காரணமாக பலியான 30 பேர்களின் குடும்பத்தினருக்கும் திமுக இளைஞர் அணி சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், ‘இந்துக்களின் பாதுகாவலர்’ என்று கூறிக்கொண்டு இத்தனை பேரின் மரணத்துக்கு எந்தப் பொறுப்பும் ஏற்காத மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளுக்கு கடும் கண்டனத்தை இக்கூட்டம் தெரிவிக்கிறது.
> மும்மொழிக் கொள்கையைத் திணிக்கப் பார்க்கும், நிதிப்பகிர்வில் தமிழகத்துக்குப் பாரபட்சம் காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், சட்டமன்றத் தொகுதிதோறும் இளைஞர் அணி சார்பில், கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியை முறியடித்து, மொழியுரிமையை நிலைநாட்டுவோம் என்று இக்கூட்டம் உறுதியேற்கிறது என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.