• Fri. Nov 22nd, 2024

24×7 Live News

Apdin News

பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார் | Chief Minister Stalin inaugurated the Pattabiram Tidel Park

Byadmin

Nov 22, 2024


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.22) திறந்து வைத்தார். அப்பூங்காவில் இரண்டு நிறுவனங்களுக்கான தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் வடபகுதியிலுள்ள நகரங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார், அந்த இலக்கினை எய்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் தமிழக முதல்வர் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, தொழில் நிறுவனங்களுடன் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், ரூ. 330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்கா தமிழக முதல்வரால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இக்கட்டடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதி, தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், 927 கார்கள் மற்றும் 2280 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, அரங்கம், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்கட்டடமானது, 6,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டடம் வழிமுறைகளின்படியும் கட்டப்பட்டுள்ளது.பட்டாபிராமில் இப்புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழகத்தின் வடபகுதியைச் சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும். பட்டாபிராம் டைடல் பூங்கா திறப்பு விழாவின்போது, Webberax Solutions,Dotnix Technologies LLP ஆகிய நிறுவனங்களுக்கு அப்பூங்காவில் தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

இவ்விழாவில், அமைசச்ர்கள் தா.மோ. அன்பரசன், எஸ்.எம்.நாசர், டி.ஆர்.பி. ராஜா மற்றும் எம்எல்ஏக்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



By admin